‘டெல்லிக்கு அறுவைசிகிச்சை தேவைப்படுகிறது’ - அரவிந்த் கெஜ்ரிவாலை விமர்சித்த கவுதம் கம்பீர்! | Gautam Gambhir criticize arvind kejriwal on delhi hotel fire

வெளியிடப்பட்ட நேரம்: 09:45 (13/02/2019)

கடைசி தொடர்பு:09:53 (13/02/2019)

‘டெல்லிக்கு அறுவைசிகிச்சை தேவைப்படுகிறது’ - அரவிந்த் கெஜ்ரிவாலை விமர்சித்த கவுதம் கம்பீர்!

டெல்லி கரோல் பகுதியில் உள்ள அர்பிட் பேலஸ் என்ற நட்சத்திர ஹோட்டலில், நேற்று அதிகாலை 4:30 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது. 40 அறைகள்கொண்ட அந்த ஹோட்டலில் சுமார் 60 பேர் தங்கியிருந்ததாகக் கூறப்படுகிறது. அதிகாலை நேரத்தில் வாடிக்கையாளர்கள் தூங்கிக்கொண்டிருக்கும்போது திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. 

தீ விபத்து

ஹோட்டலின் மேல் பகுதியில் ஏற்பட்ட தீ, கபகபவென மற்ற பகுதிகளுக்கும் பரவத்தொடங்கியது. உடனடியாக தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், 20 வாகனங்களில் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

இந்த விபத்தில், இதுவரை 17 பேர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பலர் படுகாயமடைந்து, அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மருத்துவமனைகளில் உள்ள பலரது நிலை கவலைகிடமாக உள்ளதால், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தீ விபத்துகுறித்து வழக்குப்பதிவு செய்து, காவல் துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர். 

கம்பீர்

தீவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ஐந்து லட்ச ரூபாய் வழங்கப்படும் என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். இது தொடர்பாக, முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் டெல்லி முதல்வரைக் கடுமையாக விமர்சித்துள்ளார். தன் ட்விட்டர் பக்கத்தில் கம்பீர் வெளியிட்டுள்ள பதிவில், ‘ மனித உயிர்களின் மதிப்பு நிச்சயமாக ஐந்து லட்சத்தைவிட அதிகம்தான். இதிலிருந்து நம் அரசு, பொதுமக்களைப் பற்றி என்ன நினைத்துள்ளது என்பதை கோடிட்டுக்காட்ட வேண்டியுள்ளது. இழப்பீடு என்பது பெரும் காயத்துக்கு வெறும் பேன்டேஜ் போன்றதுதான். ஆனால், டெல்லிக்கு அறுவைசிகிச்சை தேவைப்படுகிறது. இந்த நடைமுறைகளை மாற்றியமைக்க வேண்டும்’  எனப் பதிவிட்டுள்ளார்.