`பத்ம விருதுகளைப் பெயருக்கு முன்னால் பட்டமாகப் பயன்படுத்தக் கூடாது' - மத்திய அரசு! | Padma Awards Cannot be Used as Titles says central Government

வெளியிடப்பட்ட நேரம்: 10:17 (13/02/2019)

கடைசி தொடர்பு:10:17 (13/02/2019)

`பத்ம விருதுகளைப் பெயருக்கு முன்னால் பட்டமாகப் பயன்படுத்தக் கூடாது' - மத்திய அரசு!

பத்ம விருதுகளை வென்றவர்களுக்கு, மத்திய அரசு புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

பத்ம விருது

அரசியல், சமூகம், நிர்வாகம், கலை, கலாசாரம், இசை, நடனம், சினிமா, நாடகம், ஓவியம், சிற்பம், சட்டம், நீதி, பொதுச் சேவை சமூக நலம் போன்ற பல்வேறு துறைகளில் சிறந்த முறையில் பணியாற்றியவர்களைக் கண்டறிந்து, அவர்களைக் கௌரவிக்கும் விதமாக ஆண்டுதோறும் பத்மஸ்ரீ, பத்ம பூஷண், பத்ம விபூஷண் உள்ளிட்ட விருதுகள் வழங்கப்படுகிறது. இவ்விருதுகளை 'பத்ம விருதுகள்' என்று குறிப்பிடுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டுக்கான பத்ம விருதுகள் 112 பேருக்கு அறிவிக்கப்பட்டது. இதில், தமிழகத்தைச் சேர்ந்த  நடிகர் பிரபுதேவா, பங்காரு அடிகளார், பாடகர் சங்கர் மகாதேவன், சமூக சேவகர் மதுரை சின்னப்பிள்ளை, ட்ரம்ஸ் சிவமணி உள்ளிட்டோர் தேர்வுசெய்யப்பட்டனர். 

 பத்ம விருதுகளைப் பெயருக்கு முன்னால் பயன்படுத்தலாமா என மக்களவையில் நேற்று கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு எழுத்துபூர்வமாகப் பதிலளித்த மத்திய உள்துறை இணை அமைச்சர் ஹன்ஸ்ராஜ் கங்காராம் ஆஹிர், ``பாரத ரத்னா, பத்ம பூஷண், பத்ம விபூஷண், பத்மஸ்ரீ ஆகிய தேசிய விருதுகள் மற்றும் அரசியல்சாசன விதிகள் 18(1)-ன்படி விருது பெற்றவர்கள், தங்கள் பெயருக்கு முன்னாலோ, பெயருக்குப் பின்னாலோ, விருதுகளின் பெயர்களைப் பட்டமாகப் பயன்படுத்தக் கூடாது. அப்படி தவறாகப் பயன்படுத்தினால், விருதுபெற்றவர் அந்த உரிமையை இழந்தவர் ஆகிறார். 

ஹன்ஸ்ராஜ் கங்காராம்

அவர்களின் விருதுகளை ஜனாதிபதியால் ரத்துசெய்யவோ, நீக்கவோ முடியும். அல்லது விருது பெற்றவர்களின் பெயர்கள் அதற்கான பதிவேட்டில் இருந்து நீக்கப்படும். இதற்கான சட்ட வழிமுறைகள் உள்ளன. அப்படி நீக்கப்பட்டால், விருதுகளைத் திரும்ப ஒப்படைக்க நேரிடும். எனவே, விருதுபெற்ற ஒவ்வொருவரும் இந்த விதிமுறையைக் கடைப்பிடிக்க வேண்டும். விருது பெற்றவர்கள், பெயருக்கு முன்னாலோ, பின்னாலோ விருதுகளைச் சேர்க்கக் கூடாது" என்று கூறப்பட்டுள்ளது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க