ரஃபேல் சி.ஏ.ஜி அறிக்கை மாநிலங்களவையில் தாக்கல் - காகித விமானத்துடன் ராகுல் போராட்டம்! | Congress party protest, Parliament premises over Rafale deal

வெளியிடப்பட்ட நேரம்: 13:10 (13/02/2019)

கடைசி தொடர்பு:13:10 (13/02/2019)

ரஃபேல் சி.ஏ.ஜி அறிக்கை மாநிலங்களவையில் தாக்கல் - காகித விமானத்துடன் ராகுல் போராட்டம்!

பிரான்ஸின் டசால்ட் நிறுவனத்திடமிருந்து 36 ரஃபேல் போர் விமானங்களை மத்திய அரசு கொள்முதல் செய்ய ஒப்பந்தம் செய்துள்ளது. ஆனால், முந்தைய காங்கிரஸ் அரசு நிர்ணயித்த விலையைக் காட்டிலும் பல மடங்கு விலையைப் பா.ஜ.க அரசு வழங்க உள்ளது என்றும், மத்திய அரசின் ஹெச்.ஏ.எல் நிறுவனத்துக்கு வழங்க இருந்த ஒப்பந்தத்தை ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு மத்திய அரசு அளித்தது என்றும், இதில் ஊழல் நடந்துள்ளதாகவும், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடந்த சில மாதங்களாகத் தொடர் குற்றம் சாட்டி வருகின்றன. 

ரஃபேல்

இந்நிலையில், தற்போது நாடாளுமன்றத்தில் நடந்துவரும் பட்ஜெட் தொடர்பான விவாதக் கூட்டத்தில், ரஃபேல் விவகாரம் தொடர்பாக அனைத்து எதிர்க்கட்சி எம்.பி-க்களும் அமளியில் ஈடுபட்டுவருகின்றனர். பட்ஜெட் கூட்டத்தொடரின் இறுதி நாளான இன்று, ரஃபேல் ஒப்பந்தத்தின் மத்திய தலைமை கணக்கு தணிக்கை அதிகாரியின் அறிக்கை (சி.ஏ.ஜி) தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதை மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் மாநிலங்களவையில் தாக்கல்செய்தார்.

நாடாளுமன்றம்

தற்போது, சி.ஏ.ஜி தலைமை அதிகாரியாக உள்ள ராஜிவ் மொஹரிஷி, முன்பு நிதித்துறை செயலராக இருந்தபோதுதான் ரஃபேல் ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன. எனவே, இந்த விவகாரத்தில் மத்திய அரசுக்கு ஆதரவாக சி.ஏ.ஜி அறிக்கை வரும். அந்த அறிக்கைகள் முற்றிலும் பொய்யானவை என எதிர்க்கட்சிகள் புகார் தெரிவித்துள்ளன. இன்று காலை, கடும் எதிர்ப்புகளுக்கிடையே மத்திய அமைச்சர் இதைத் தாக்கல்செய்தார். அறிக்கையில் கூறப்பட்டுள்ள முழுமையான விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.

காங்கிரஸ் போராட்டம்

இதற்கிடையில், சி.ஏ.ஜி அறிக்கை தாக்கல் செய்யப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து  ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோர், நாடாளுமன்ற வளாகத்தில் காகித ராக்கெட்டுகளுடன்  போராட்டம் நடத்தினர்.