`ஒழுங்குமுறை நடவடிக்கைகளில் சொதப்பல்' - 7வங்கிகளுக்கு அபராதம் விதித்த ரிசர்வ் வங்கி! | RBI imposes penalty for seven banks

வெளியிடப்பட்ட நேரம்: 14:30 (13/02/2019)

கடைசி தொடர்பு:14:30 (13/02/2019)

`ஒழுங்குமுறை நடவடிக்கைகளில் சொதப்பல்' - 7வங்கிகளுக்கு அபராதம் விதித்த ரிசர்வ் வங்கி!

வங்கிக்கடன் தவணையைத் தாமதமாகக் கட்டினால் வங்கிகள் நமக்கு அபராதம் விதிப்பது வாடிக்கை. அதேபோல, தற்போது வங்கிகளுக்கே அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஹெச்.டி.எஃப்.சி பேங்க், ஐடிபிஐ பேங்க், பேங்க் ஆஃப் மகேந்திரா உள்ளிட்ட 7 வங்கிகளுக்கு, அவற்றின் ஒழுங்குமுறை நடவடிக்கைகளில் இருக்கும் குறைபாடுகளுக்காக, ரிசர்வ் வங்கி அபராதம் விதித்துள்ளது. 

ரிசர்வ் வங்கி

வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் வங்கிக்கடன், அதே காரணத்திற்காக சரியாகப் பயன்படுத்தப்படுகிறதா என்பதைக் கண்காணிக்க வேண்டியது வங்கிகளின் கடமை. ஆனால், அந்தக் கடமையைச் சரிவர செய்யாததாகப் புகார் எழுந்ததையொட்டி, கடந்த வாரத்தில்தான் எஸ்பிஐ வங்கிக்கு ரிசர்வ் வங்கி ஒரு கோடி ரூபாய் அபராதம் விதித்தது. இந்நிலையில், தற்போது அதே காரணத்திற்காக, அலகாபாத் வங்கி, பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா மற்றும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஆகியவற்றுக்கு தலா ஒன்றரைக் கோடி ரூபாய் அபராதத்தை ரிசர்வ் வங்கி விதித்துள்ளது. மேலும் இதே தவற்றுக்காக, ஆந்திரா வங்கிக்கு ஒரு கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 

அதேபோல்ல, வாடிக்கையாளர்களை அறிதல், பணமோசடியைத் தடுத்தல் ஆகியவற்றில் சரியாகச் செயல்படாத காரணத்திற்காக, ஹெச்.டி.எஃப்.சி பேங்க், ஐடிபிஐ பேங்க், கோட்டக் மகேந்திரா பேங்க் ஆகிய மூன்று வங்கிகளுக்கும் தலா 20 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.