`சிறு வயதிலிருந்தே குண்டாக இருப்பேன்; அதற்காக இப்படியா செய்வீர்கள்' - குமுறிய கேரள மணப்பெண்! | fake news spread in whatsaap 11 admins arrested in kerala

வெளியிடப்பட்ட நேரம்: 14:02 (13/02/2019)

கடைசி தொடர்பு:14:02 (13/02/2019)

`சிறு வயதிலிருந்தே குண்டாக இருப்பேன்; அதற்காக இப்படியா செய்வீர்கள்' - குமுறிய கேரள மணப்பெண்!

கேரளாவில், கண்ணூர் மாவட்டம்  கண்டபுரத்தைச் சேர்ந்த அனூப் என்ற 29 வயது இளைஞர், ஜூபி என்ற 27 வயது பெண்ணை சமீபத்தில் மணம் முடித்தார். புகைப்படத்தில், மணமகள் சற்று வயதான தோற்றத்தில் தெரிந்தது. படிக்கும் காலத்திலிருந்தே இருவருக்கும் காதல் இருந்துள்ளது. தற்போது, ஷார்ஜாவில் பணிபுரிந்துவரும் அனூப், தான் காதலித்த  பெண்ணையே விரும்பி திருமணம் செய்துகொண்டார். ஆனால், மணமகளின் தோற்றத்தைவைத்து புதுமணத் தம்பதியை அவமதிக்கும் வகையில் வாட்ஸ்அப்-பில் சிலர் தவறான தகவல்களைப் பரப்பினர். பல கோடி ரூபாய் சொத்து அந்தப் பெண்ணுக்கு இருப்பதாகவும்,  அதற்கு ஆசைப்பட்டே அனூப் தன்னைவிட மூத்த, 48 வயது பெண்ணை மணந்துகொண்டதாகவும் வாட்ஸ்அப்-பில் பொய்யான தகவல் பரப்பப்பட்டுவந்தது.  

மணப்பெண் ஜூபி

தங்களைப் பற்றி பரவிய தவறான செய்தியால், புதுமணத் தம்பதி கடும் வேதனை அடைந்தனர். தொடர்ந்து, போலீஸிலும் புகார் அளித்தனர். தற்போது பொய்ச் செய்தி பரப்பியதாக 11 வாட்ஸ்அப் அட்மின்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இன்னும் ஏராளமானோர் கைது செய்யப்படுவார்கள் என்றும் போலீஸார் தெரிவித்துள்ளனர். 

இந்தச் சம்பவம்குறித்து ஜூபி கூறுகையில், ''நான் சிறுவயதிலிருந்தே சற்று குண்டாக இருப்பேன். திருமண தினத்தில் பட்டுப்புடவை கட்டியிருந்ததால், புகைப்படத்தில் அப்படித் தெரிந்தது. இதற்காக, மனச்சாட்சியே இல்லாமல் பொய்ச் செய்தி பரப்பி, எங்களை மிகுந்த மன வேதனை அடைய வைத்துள்ளனர்'.  இந்தியாவில் திருமணம் முடிக்க பெண்ணுக்கு 18 வயது, ஆணுக்கு 21 வயது போதும். அப்படி இருக்கையில், எங்கள் வயதுகுறித்து இவர்கள் ஏன் ஆராய வேண்டும். சட்டப்படி அவர்கள்மீது நடவடிக்கை எடுப்பேன்'' எனக் குமுறியுள்ளார். ஜூபி, டூரிஸம் முதுகலை பட்டப்படிப்பில் பல்கலையில் முதல் ரேங்க் எடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

மணப்பெண் ஜுபி கணவருடன்

வாட்ஸ்அப்-பில் பொய்ச் செய்திகளைப் பரப்புவதோடு, அடுத்தவரின் உணர்வுகளுடன் விளையாடும் குரூர எண்ணம் படைத்தவர்களுக்குத் தக்க தண்டனை வழங்க வேண்டுமென்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க