`ஒருங்கிணைந்த வளர்ச்சிக்கென மோடி அரசு எதையும் செய்யவில்லை!’ - பொன்.ராதாகிருஷ்ணன் சர்ச்சை ட்வீட் | Modi government has not made any inclusive development tweets Pon Radhakrishnan

வெளியிடப்பட்ட நேரம்: 15:30 (13/02/2019)

கடைசி தொடர்பு:15:30 (13/02/2019)

`ஒருங்கிணைந்த வளர்ச்சிக்கென மோடி அரசு எதையும் செய்யவில்லை!’ - பொன்.ராதாகிருஷ்ணன் சர்ச்சை ட்வீட்

ட்விட்டரில் பி.ஜே.பி தலைவர்கள் சர்ச்சைக்குரிய கருத்துகளைப் பதிவிடுவதும், பின்னர் மன்னிப்பு கோரி அதை நீக்குவதும் வாடிக்கையாகி வருகிறது. தற்போது அந்த வரிசையில் இணைந்திருக்கிறார் தமிழகத்தைச் சேர்ந்த மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்.

பொன் ராதாகிருஷ்ணன் ட்வீட்

இன்று காலை பி.ஜே.பி ஐ.டி செல் உறுப்பினர்களுக்குள் பரிமாறப்படும் அறிக்கையில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் பி.ஜே.பி ஆட்சியையும், மோடி அரசையும் விமர்சிப்பது போன்ற மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளார். இந்த அறிக்கையில் இடம்பெற்றிருந்த கருத்துகளை பி.ஜே.பி.யின் இணை அமைச்சரான பொன்.ராதாகிருஷ்ணன் பகிர்ந்துள்ளார். கட்சியின் பல்வேறு உறுப்பினர்களும், மாநிலக் கிளைகளும் இதையே செய்துள்ளனர். 

`காங்கிரஸ் ஆட்சியில் உயர்த்தப்பட்ட நடுத்தர மக்களின் வாழ்க்கையை மோடி அரசு மேம்படுத்தத் தவறிவிட்டது' எனவும், 'மோடி அரசு வளர்ச்சியில் அக்கறை காட்டவில்லை; தனி நபர்களின் வளர்ச்சியைக் கண்டுகொள்ளாத புதிய இந்தியா பிறந்துள்ளது' எனவும், `இன்று மக்கள் அனைவரும் கண்ணியம் இல்லாத வாழ்க்கையை வாழ்ந்து, இந்தியாவின் வளர்ச்சிக்குப் பங்காற்றுகின்றனர்' எனவும் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் ட்வீட் செய்துள்ளார். எனினும் சில நிமிடங்களில் அந்த ட்வீட்கள் நீக்கப்பட்டன.

ட்விட்டர்

இணை அமைச்சரின் கருத்துகள் இப்படியிருக்க, பி.ஜே.பி உறுப்பினர்களின் கருத்துகளோ, 'மோடி இந்தியாவின் கிராமங்களை அழித்துவிட்டார்', 'மோடி அரசு பெண்களை சமையலறையின் அடிமையாக்கிவிட்டது' என இந்தியில் ட்வீட் செய்து ட்ரெண்டிங்கில் #Modi4NewIndia என்ற ஹாஷ்டாக்கைப் பரப்பி வருகின்றனர்.

இந்தியா முழுவதும் பரப்பப்படும் போலிச் செய்திகளைக் கண்டறிந்து, அவற்றின் நம்பகத்தன்மையைச் செய்திகளாக வெளியிடும் Alt news நிறுவனத்தின் தலைவர் பிரதிக் சின்ஹா இந்த நிகழ்வுகளை அம்பலப்படுத்தியுள்ளார். இதைப் பற்றி அவர், ``இது பார்ப்பதற்கு சிரிப்பதற்கான விஷயமாகத் தோன்றலாம். ஆனால், அரசுக்குத் தொடர்பில்லாத அமைப்பு ஒன்று, பி.ஜே.பி அலுவலகத்தில் அமர்ந்தபடி, இணை அமைச்சர் ஒருவரின் ட்விட்டரைக் கட்டுப்படுத்துகிறது என்பதைக் காட்டுகிறது" என ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.