`சினுக்' ரக ஹெலிகாப்டரை வைத்தும் `சீன்!' - பரவும் போலிச் செய்திகள் | No, India is not the first non-Nato nation to get Chinook

வெளியிடப்பட்ட நேரம்: 18:50 (13/02/2019)

கடைசி தொடர்பு:18:50 (13/02/2019)

`சினுக்' ரக ஹெலிகாப்டரை வைத்தும் `சீன்!' - பரவும் போலிச் செய்திகள்

மெரிக்காவின் போயிங் நிறுவனத்திடமிருந்து சினுக் ரக ஹெலிகாப்டர்களை இந்தியா வாங்கியுள்ளது. உலகிலேயே அதிகத் திறன் கொண்ட  சரக்குப் போக்குவரத்து ஹெலிகாப்டர் இது. அமெரிக்காவில் இருந்து கப்பலில் 4 சினுக் ரக ஹெலிகாப்டர்கள் குஜராத்தில் உள்ள முந்த்ரா துறைமுகத்துக்கு வந்திறங்கின. சண்டிகர் விமானப்படைத் தளத்தை தலைமையிடமாகக் கொண்டு இவை இயங்கப் போகின்றன. 

ஹெலிகாப்டர்

இதையடுத்து, I Support Narendra Bhai Modi BJP என்ற ஃபேஸ்புக் பக்கத்தில், நேட்டோ உறுப்பினராக அல்லாத இந்தியாவுக்கு அமெரிக்கா இந்த  ரக ஹெலிகாப்டர்களை வழங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்தப் பதிவு 800 முறை ஷேர் செய்யப்பட்டிருந்தது. கப்பலில் இருந்து  ஹெலிகாப்டர்கள் இறக்கப்படும் வீடியோவும் இந்த ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிடப்பட்டிருந்தது. கிட்டத்தட்ட 50,000 பேர் இந்த காணொலியை பார்த்திருந்தனர். இங்கே, நேட்டோ நாடுகளைத் தவிர்த்து இந்தியாவுக்கு மட்டும்தான் அமெரிக்கா இத்தகைய  ஹெலிகாப்டரை விற்பனை செய்துள்ளது என்று கூறப்பட்ட தகவல் பொய்யானது

சினுக்

`நேட்டோ' அமைப்பில் உறுப்பினர் அல்லாத பல நாடுகளுக்கும் சினுக் ரக ஹெலிகாப்டர்களை அமெரிக்கா விற்பனை செய்துள்ளது. கடந்த 1962-ம் ஆண்டு முதன்முறையாக சி.ஹெச்.- 47 சினுக் ரக ஹெலிகாப்டரை அமெரிக்காவின் போயிங் நிறுவனம் தயாரித்தது. லிபியா, ஈரான், மொரொக்கோ, சீனா, சிங்கப்பூர் , தென்கொரியா, தாய்லாந்து, ஜப்பான் நாடுகள் ஏற்கெனவே சினுக் ரக ஹெலிகாப்டர்களை வாங்கியுள்ளன. தற்போது இந்தியாவும் அந்தப் பட்டியலில் சேர்ந்துள்ளது. உலகில் 19 நாடுகளைச் சேர்ந்த விமானப்படையில் இந்த ரக ஹெலிகாப்டர் பயன்பாட்டில் உள்ளன. 

கடந்த 2015-ம் ஆண்டு இந்திய விமானப்படை ரூ.21,000 கோடி மதிப்பில் 22 அப்பாச்சி மற்றும் 15 சினுக் ரக ஹெலிகாப்டர்களை வாங்க போயிங் நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்டது. தற்போது, இந்தியா வந்துள்ள சினுக் ரக ஹெலிகாப்டர்கள் இந்த ஆண்டு இறுதியில் விமானப்படையில் சேர்க்கப்படும். பேரிடர் காலங்களில் இந்த ஹெலிகாப்டர் மீட்புப்பணிகளுக்கு அபாரமாக உதவக் கூடியது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க