`கட்டியணைப்பதில் உள்ள வித்தியாசத்தை இங்குதான் உணர்ந்தேன்!’ - 16வது மக்களவையின் கடைசி நாளில் மோடி உரை | Narendra modi speaks lok sabha on its last working day

வெளியிடப்பட்ட நேரம்: 18:09 (13/02/2019)

கடைசி தொடர்பு:18:09 (13/02/2019)

`கட்டியணைப்பதில் உள்ள வித்தியாசத்தை இங்குதான் உணர்ந்தேன்!’ - 16வது மக்களவையின் கடைசி நாளில் மோடி உரை

`அன்பாகக் கட்டியணைப்பதற்கும் கட்டாயப்படுத்தி கட்டிபிடிப்பதற்குமான வித்தியாசத்தை இந்த அவையில்தான் உணர்ந்துகொண்டேன். மக்களவை சகாக்களுக்கு என்னுடைய நன்றிகள்!' என்று லோக் சபாவின் கடைசி அலுவல் நாளில் பிரதமர் மோடி பேசினார்.

 

மோடி

2019-20 ம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் மீதான விவாதம் இன்றுடன் நிறைவடைந்தது. அதுமட்டுமன்றி, பிரதமர் மோடி தலைமையிலான 16வது லோக் சபாவின் பதவிக்காலம் காலவதியாகியுள்ளது. விரைவில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, தேர்தல் நடைபெற உள்ளது. புதிய அரசு பதவி ஏற்ற பிறகுதான் மீண்டும் லோக்சபா கூட உள்ளது. இந்நிலையில் லோக்சபாவின் கடைசி அலுவல்நாளில் பிரதமர் மோடி உரை நிகழ்த்தினார். அவர் பேசுகையில், `நான் முதல்முறை இந்த அவைக்கு வந்தபோது நிறைய புதிய விஷயங்களைக் கற்றுக்கொண்டேன். கட்டியணைப்பதற்கும் கட்டாயப்படுத்தி கட்டிப்பிடிப்பதற்குமான வித்தியாசத்தையும் நான் இங்குதான் உணர்ந்துகொண்டேன்.

பிரதமர்

30 ஆண்டுகளுக்குப் பிறகு என் தலைமையிலான ஆட்சி நிலையான ஆட்சி அமைந்ததில் மகிழ்ச்சி. 16-வது லோக்சபாவின் ஓர் அங்கமாக இருப்பதில் பெருமைப்படுகிறேன். தேசமே எங்கள் அரசின் மீது முழு நம்பிக்கை கொண்டுள்ளது. உலகம் இப்போதுதான் உலகமயமாதல் பற்றிப் பேச ஆரம்பித்துள்ளது. ஆனால், இந்தியாவோ சோலார் மூலம் இந்தப் பிரச்னைக்குத் தீர்வை தொடங்கிவிட்டது. கடந்த 4 ஆண்டுகளைப் பொறுத்தவரை ஏராளாமான செயற்கைக்கோள்கள் விண்ணில் செலுத்தபட்டுவிட்டன. எனது ஆட்சியில் வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கு கூடுதல் மரியாதை கிடைத்துள்ளது. இதே லோக்சபாவில் கறுப்புப் பணத்துக்கும் ஊழலுக்கும் எதிரான சட்டங்கள் நிறைவேற்றபட்டுள்ளன. இங்குதான் ஜி.எஸ்.டி வரிவிதிப்புச் சட்டம் இயற்றபட்டது.

கட்சிகளின் ஆதரவு இந்தச் சட்டம் மூலம் வெளிப்பட்டது. ஐ.நா அவையில் இந்தியாவுக்கான பல்வேறு கோரிக்கைகள் நிறைவேற்றபட்டுவிட்டன. பாதுகாப்பு மற்றும் வெளியுறவுத்துறையில் பெண்கள் அமைச்சர்களாக இருப்பது பெருமையாகக் கருதுகிறேன். அவர்களுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். வெளிநாட்டுத் தலைவர்கள் தற்போது இந்திய தலைவர்களை மதிக்கத் தொடங்கியுள்ளனர். மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் பங்கு இந்த அவைக்கு மிக முக்கியமானதாகக் கருதுகிறேன். என்னுடைய பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். அதேபோல வெங்கைய நாயுடுக்கும் எனது வாழ்த்துகள். 85 சதவிகிதம் மனநிறைவோடு இந்த அவையிலிருந்து விடைபெறுகிறேன். மக்களவை சகாக்கள், அமைச்சர்கள் அனைவருக்கும் எனது நன்றி!' என்று பேசி முடித்தார்.