யுனிகார்ன் அந்தஸ்து பெற்ற ஸ்டார்ட் அப் நிறுவனத்தின் முதல் இந்தியப் பெண் நிறுவனர்! - சாதித்த மும்பை இளம் பெண் | first Indian woman co-founder of startup with nearly one billion start up

வெளியிடப்பட்ட நேரம்: 22:30 (13/02/2019)

கடைசி தொடர்பு:22:30 (13/02/2019)

யுனிகார்ன் அந்தஸ்து பெற்ற ஸ்டார்ட் அப் நிறுவனத்தின் முதல் இந்தியப் பெண் நிறுவனர்! - சாதித்த மும்பை இளம் பெண்

அங்கிடி போஸ்

மும்பையில் பிறந்த அங்கிடி போஸ் என்ற 27 வயது பெண், இந்தியாவின் முதல் யுனிகார்ன் அந்தஸ்து பெற்ற ஸ்டார்ட்-அப் நிறுவனர் என்ற பெருமையைப் பெறுகிறார். (ஸ்டார்ட் அப் நிறுவனத்தின் முதலீடு 1 பில்லியன் டாலர் என்ற அளவை எட்டினால் 'யுனிகார்ன்' என்று அழைக்கப்படும்.) இவர் தனது 23வது வயதில், கடந்த 2014-ம் ஆண்டு டிசம்பர் மாதம், நண்பர் துருவ் கபூருடன் இணைந்து ஷிலிங்கோ என்ற ஸ்டார்ட்-அப் ஃபேஷன் இ-காமர்ஸ் விற்பனைத்தளத்தைத் தொடங்கினார். சிங்கப்பூரைத் தலைமையிடமாகக் கொண்ட இந்த நிறுவனத்தின் முக்கிய செயல்பாடுகள் அனைத்தும் பெங்களூருவிலுள்ள அலுவலகத்தில் நடைபெற்றுவருகின்றன. இங்கே நூற்றுக்கும் மேற்பட்டோர் பணியாற்றுகிறார்கள். இந்த ஆன்லைன் தளத்தின்மூலம் தென்கிழக்கு ஆசியாவைச் சேர்ந்த சில்லறை வணிகர்களின் பொருள்களை விற்பனை செய்துவருகின்றனர்.

அங்கிடி போஸ்

தற்போது இந்த ஸ்டார்ட்-அப் நிறுவனத்தின் வளர்ச்சிக்காக, செகுவொயா கேப்பிட்டல், டெமசெக் ஹோல்டிங்ஸ் ஆகிய இரு நிறுவனங்கள் உள்ளிட்ட முதலீட்டாளர்கள் மூலமாக 226 மில்லியன் அமெரிக்க டாலர்கள் முதலீடு செய்யப்பட்டது. இதையடுத்து, இந்த நிறுவனத்தின் மொத்த முதலீட்டுத்தொகை 970 மில்லியன் அமெரிக்க டாலர்களாக உயர்ந்துள்ளது. இதன்மூலம் அங்கிடி போஸ், யுனிகார்ன் லெவல் ஸ்டார்ட்-அப் நிறுவனத்தை நிர்வகிக்கும் இந்தியாவின் இளம் பெண் தலைமைச் செயல் அதிகாரி என்ற பெருமையைப் பெறுவதோடு, யுனிகார்ன் லெவல் ஸ்டார்ட்-அப் நிறுவனத்தின் இணை நிறுவனராக இருக்கும் முதல் இந்தியப்பெண் என்ற பெருமையையும் பெறுகிறார். 

உலக அளவில், யுனிகார்ன் ஸ்டார்ட்-அப் நிறுவனங்களின் எண்ணிக்கை 239 ஆகும். இவற்றில் பெண் நிறுவனர்களைக் கொண்டுள்ள நிறுவனங்கள் மொத்தம் 23 மட்டுமே. இவற்றில் ஒன்றாக ஷிலிங்கோ நிறுவனம் உருவெடுத்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.