`நாங்க இதை மறக்க மாட்டோம் சோனியா ஜி' - சலசலப்பை ஏற்படுத்திய எம்பி; கடுப்பான மம்தா! | Congress MPs raise slogans against Mamata Banerjee in Parliament

வெளியிடப்பட்ட நேரம்: 10:00 (14/02/2019)

கடைசி தொடர்பு:10:09 (14/02/2019)

`நாங்க இதை மறக்க மாட்டோம் சோனியா ஜி' - சலசலப்பை ஏற்படுத்திய எம்பி; கடுப்பான மம்தா!

திரிணாமுல் காங்கிரஸுக்கும் - காங்கிரஸ் கட்சிக்கும் இடையே மோதல் உண்டாகியுள்ளது, அரசியல் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மம்தா

டெல்லியில் நேற்று பிற்பகல் மூன்று மணி முதல் ‘கூட்டாச்சி மற்றும் அரசியலைப்பு சட்டத்தைப் பாதுகாக்க வேண்டும்’ என்ற கோரிக்கையை முன் நிறுத்தி, இரண்டு நாள்கள் மீண்டும் தர்ணாவில் ஈடுபட்டுள்ளார், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி. மம்தாவின் இந்தப் போராட்டத்தில், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட 22 எதிர்க்கட்சித் தலைவர்கள் கலந்துகொண்டுள்ளனர். வரும் நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ள காங்கிரஸ் தலைமையிலான மெகா கூட்டணியில் மம்தா இணைகிறார் எனப் பேசப்பட்டுவருகிறது. அதற்கேற்பவே மம்தாவின் போராட்டங்கள் அனைத்திலும் காங்கிரஸ் பங்கேற்றுவந்தது. 

 சோனியா

இப்படியான நிலையில், இந்தக் கூட்டணிக்கு நெருடல் ஏற்படும் வகையில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. 16-வது மக்களவையின் கடைசி நாளான நேற்று, நாடாளுமன்றத்தில் பல்வேறு விவாதங்கள் நடைபெற்றன. இந்த விவாதங்களின்போது பேசிய மேற்கு வங்க மாநில காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர் ஆதிர் ராஜன் சவுத்ரி, ``நாட்டில் நிதி மோசடிகளைத் தவிர்க்க தனிச் சட்டம் இயற்ற வேண்டும்" என வலிறுத்திய அவர், ``சாரதா, மம்தா பானர்ஜிக்கும் தொடர்பு உள்ளது" எனப் பேசினார். இவரின் பேச்சை காங்கிரஸின் மற்ற உறுப்பினர்கள் ரசிக்கவில்லை என்றாலும், பா.ஜ.க உறுப்பினர்கள் அனைவரும் மேஜையைத் தட்டி வரவேற்றனர். 

ஆதிர் ராஜன் சவுத்ரி

இவரின் பேச்சு, திரிணாமுல் காங்கிரஸ்  - காங்கிரஸ் கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியது. ஆதிர் பேசியதற்குப் பிறகு, நாடாளுமன்றத்தின் சென்ட்ரல் ஹாலில் சோனியா காந்தியும் மம்தா பானர்ஜியும் நேருக்கு நேர் சந்தித்தனர். அப்போது, மம்தாவை சமாதானம் செய்ய சோனியா காந்தி முயல, மம்தா பானர்ஜி கோபமாகப் பேசியதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து ஆங்கில ஊடங்களில் கூறியிருப்பதாவது, ``நாம் ஒருவருக்கொருவர் குற்றம் சாட்டிக்கொள்கிறோம்.

நம் இலக்கு வேறாக இருக்கலாம். இருந்தாலும் நாம் நண்பர்கள்தான்" எனக் கூறி சோனியா சமாதானம் செய்ய முயன்றபோது, ``நாங்கள் இதை நினைவில் வைத்துக்கொள்வோம்" என்று காட்டமாகக் கூறியுள்ளார் மம்தா. ஆதிர் ராஜன் சவுத்ரியின் பேச்சை நினைவில் வைத்துக்கொள்வோம் என அவர் கூறியது, மெகா கூட்டணியில் சற்று சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இருப்பினும், மாலையில் நடந்த மம்தாவின் போராட்டத்தில் ராகுல் காந்தி கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க