`நீங்கள் பறிக்கவில்லை; நானாகக் கொடுத்தேன்' - பிரதமர் பேச்சுக்கு மல்லையா ட்வீட்! | Mallya tweets against PM speech!

வெளியிடப்பட்ட நேரம்: 14:30 (14/02/2019)

கடைசி தொடர்பு:14:30 (14/02/2019)

`நீங்கள் பறிக்கவில்லை; நானாகக் கொடுத்தேன்' - பிரதமர் பேச்சுக்கு மல்லையா ட்வீட்!

பிரதமர் மோடி, பாராளுமன்றத்தில் தனது ஆட்சியின் நிறைவு உரையின்போது மல்லையாவை மறைமுகமாகச் சுட்டிக்காட்டிப் பேசியதற்கு விஜய் மல்லையா பதிலளித்து ட்வீட் செய்துள்ளார். பிரதமர் தனது உரையில், ``ஒருவர் 9,000 கோடி ரூபாய் வங்கிப் பணத்தைச் சுருட்டிக்கொண்டு வெளிநாடுகளுக்கு ஓடி பதுங்கிக்கொண்டார். ஆனால் நாங்கள் அவரது 13,000 கோடி சொத்துகளைப் பறிமுதல் செய்தபின் கதறி அழுகிறார். காலையில் எழுந்து பார்த்தால் அவரது சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டது அவருக்குத் தெரியவருகிறது. மறுநாள், இன்னொரு நாட்டிலுள்ள அவரது சொத்து பறிமுதல் செய்யப்படுகிறது. காங்கிரஸ் அரசாங்கம், பணத்தைக் கொள்ளையடைக்க வழிவகுத்தது. ஆனால் எங்களது அரசாங்கம் அந்தப் பணத்தையெல்லாம் திரும்பக் கொண்டுவருகிறது" என்று பெருமையோடு கூறினார்.

விஜய் மல்லையா

ஆனால், பிரதமரின் இந்தப் பேச்சில் உண்மையில்லையென்றும், அவர்களாக ஒன்றும் பறிமுதல் செய்யவில்லை, நானாகத்தான் எனது சொத்துகளை முழுவதுமாகத் திருப்பியளித்தேன் என்றும் ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து தொடர்ச்சியான தனது ட்வீட்டுகளில் மல்லையா கூறியதாவது, `பிரதம மந்திரியின் பாராளுமன்ற இறுதி உரை என் கவனத்திற்கு வந்தது. அவர் சிறந்த சொற்பொழிவாளராக இருக்கிறார். அவரது பேச்சில், 9,000 கோடியைச் சுருட்டிக்கொண்டு ஒருவர் ஓடிவிட்டதாகப் பெயர் குறிப்பிடாமல் கூறியிருந்தார். மீடியாவில் வெளியாகும் செய்திகளின்படி பார்த்தால் அந்த நபர், நான் என்றே பொருந்தி வருகிறது.

ட்வீட்

எனது முந்தைய ட்வீட்டில், நான் கொடுக்கும் பணத்தைப் பெற்றுக்கொள்ளுமாறு வங்கிகளுக்கு அறிவுறுத்தும்படி பிரதமரிடம் மரியாதையுடன் கேட்டிருந்தேன். அப்படிப் பெற்றிருந்தால் கிங்ஃபிஷர் நிறுவனத்திற்குக் கடனாக அளிக்கப்பட்ட பொதுமக்களின் பணத்தையாவது மீட்டதாக இருந்திருக்கும். பணத்தைத் திரும்ப ஒப்படைக்கும் இதே வாய்ப்பை மரியாதைக்குரிய கர்நாடக உயர்நீதிமன்றத்திலும் கூறியிருந்தேன். இந்த வாய்ப்பை அற்பத்தனமானது என நிராகரிக்க முடியாது. இது முழுக்கமுழுக்க உறுதியான, நேர்மையான மற்றும் உடனடியாக செய்துமுடிக்கத்தக்க நல்வாய்ப்பாகும். எனது பக்கம் செய்ய வேண்டியதை நான் செய்துவிட்டேன். கிங்ஃபிஷர் நிறுவனத்திற்கு அளித்த கடன் தொகையைத் திரும்பப் பெறுவதில் வங்கிகளுக்கு என்ன தயக்கம்? 

எனது சொத்துகள் பற்றி சொல்ல பயந்து மறைப்பதாக அமலாக்கத்துறை இயக்ககம் சொல்கிறது. அப்படி மறைப்பதாக இருந்தால் நீதிமன்றத்தின் முன்பாக 14,000 கோடி மதிப்புள்ள சொத்தை எப்படி வெளிப்படையாகக் காட்டுவேன்? பொதுமக்களின் கருத்தைத் தவறாக வழிநடத்துவது வெட்கக்கேடானதாக இருக்கிறது என்று காட்டமாக விஜய் மல்லையா ட்வீட் செய்துள்ளார்.