சுய உதவிக்குழு பெண்களுக்கு ஸ்மார்ட் போன்! - ஆந்திர அரசு அடுத்த அதிரடி  | Andhra Government announce free smart phone to SHG members

வெளியிடப்பட்ட நேரம்: 16:30 (14/02/2019)

கடைசி தொடர்பு:16:30 (14/02/2019)

சுய உதவிக்குழு பெண்களுக்கு ஸ்மார்ட் போன்! - ஆந்திர அரசு அடுத்த அதிரடி 

சுய உதவிக் குழுவில் உள்ள பெண்களுக்கு 5,000 ரூபாய் மதிப்புள்ள ஸ்மார்ட் போனும், மூன்று வருடங்களுக்கு கட்டணமில்லாமல் அழைப்பு வசதியுடன் இன்டர்நெட் வசதியும் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது ஆந்திர அரசு. 

மொபைல் போன்

மத்திய அரசு, விவசாயிகளுக்கு 6,000 ரூபாய் வழங்குவதாக அறிவிப்புக்கு அடுத்து, மாநில அரசுகள் அடுத்தடுத்து வாக்காளர்களைக் கவர புதுப்புது அறிவிப்புகள் வந்த வண்ணம் உள்ளன. விவசாயிகளுக்கு மட்டுமல்ல குத்தகைதாரர்களுக்கும் 10,000 ரூபாய் வழங்குவதாக அறிவித்துள்ளது ஆந்திர அரசு. இந்த அறிவிப்புக்கு அடுத்து, நேற்று, சுய உதவிக் குழுவில் உள்ள பெண்களுக்கு ஐயாயிரம் ரூபாய் மதிப்புள்ள ஸ்மார்ட் போன் வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளது. 

ஆந்திர வேளாண் துறை அமைச்சர் சோமி ரெட்டி, ``வேளாண் நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு மட்டுமல்லாது, வேளாண் நிலங்களைக் குத்தகை எடுத்து விவசாயம் செய்துவருபவர்களுக்கும் உதவித்தொகை வழங்கப்படும். இதற்காக, பயிர் சான்றிதழ் மற்றும் வேளாண்மை பெயரில் கடன் பெற்றுள்ள விவரங்களையும் வழங்கினால் போதுமானது. கரிஃப் மற்றும் ரபி பருவம் என இரண்டாகப் பிரித்து ஒவ்வொரு பருவத்துக்கும் 5,000 ரூபாய் வழங்கப்படும். மத்திய அரசு முதல் தவணையாக ரூ.2000 ரூபாய் வழங்கும்போது, மாநில அரசு ரூ. 3,000 ரூபாயைச் சேர்த்து மொத்தமாக ரூ.5,000 வழங்கும். 2,000 என்பது சிறிய தொகை. 5,000 ரூபாய் என்பது பெரிய தொகை. இந்தத் தொகை கிடைக்கும்போது விவசாயிகள் பெரிய அளவில் மகிழ்ச்சியடைவார்கள்" என்கிறார் ஆந்திர வேளாண்மைத்துறை அமைச்சர் சோமிரெட்டி. 

மொபைல் போன் ஆந்திர அரசு

செய்தி விளம்பரத்துறை அமைச்சர் காலவா ஶ்ரீனிவாசுலு, ``சுய உதவிக்குழுவில் பெண்களுக்கு 5,000 ரூபாய் மதிப்புள்ள ஸ்மார்ட் போன் வழங்க ஆந்திர அரசின் அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்த மொபைல் போனுடன் மூன்று வருடங்களுக்குக் கட்டணமில்லாத அழைப்பும் இன்டர்நெட்டையும் பயன்படுத்திக்கொள்ளலாம். இந்தத் திட்டத்தின் கீழ் 94 லட்சம் பெண்கள் பயன்பெறுவார்கள். இந்தத் திட்டத்துக்காக 7,175 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. விரைவில் இந்தத் திட்டம் தொடங்கப்படும்" என்று தெரிவித்துள்ளார்.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, 2016-ம் ஆண்டில் தேர்தல் அறிக்கையில் அனைத்துக் குடும்பங்களுக்கும் விலையில்லாத கைப்பேசி வழங்கப்படும் என்று அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.