ஜம்மு - காஷ்மீரில் சி.ஆர்.பி.எஃப் வாகனங்கள் மீது தீவிரவாதத் தாக்குதல்! - 18 வீரர்கள் வீர மரணம் | CRPF convoy attacked by terrorists in Kashmir

வெளியிடப்பட்ட நேரம்: 18:50 (14/02/2019)

கடைசி தொடர்பு:18:50 (14/02/2019)

ஜம்மு - காஷ்மீரில் சி.ஆர்.பி.எஃப் வாகனங்கள் மீது தீவிரவாதத் தாக்குதல்! - 18 வீரர்கள் வீர மரணம்

காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் 18 பேர் வீரமரணம் அடைந்துள்ளனர். இந்தத் தாக்குதலில் பலர் படுகாயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

தாக்குதல்

ஜம்மு - காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டம் ஸ்ரீநகரிலிருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ள லேத்பூரா பகுதியில் சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் வாகனங்களில் சென்றுகொண்டிருந்தனர். அப்போது இரண்டு வாகனங்களிலிருந்த வீரர்களை குறிவைத்து பயங்கரவாதிகள் வெடிகுண்டு தாக்குதல் மற்றும் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த வாகனங்களில் 54 படைப்பிரிவைச்சேர்ந்த வீரர்கள் இருந்துள்ளதாக கூறப்படுகிறது. தீவிரவாதிகள் நடத்திய இந்தக் கண்மூடித்தனமான தாக்குதலில், சி.ஆர்.பி.எஃப் படையைச் சேர்ந்த 18 வீரர்கள் வீர மரணம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், பலர் படுகாயமடைந்துள்ளனர்.

இந்தத் தாக்குதலுக்கு ஜெய்ஷ்-இ-முஹமது தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுக்கொண்டுள்ளது. அம்மாநிலத்தின் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா தனது ட்விட்டர் பக்கத்தில் இந்தத் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். அவரது பதிவில்,``இந்தத் தாக்குதலுக்கு எனது கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்துகொள்கிறேன். இறந்த வீரர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்'' என்று தெரிவித்துள்ளார். அதேபோல முன்னாள் முதல்வர் மெஹபூபா முஃப்தி, `இந்த கொடூரத் தாக்குதலைக் கண்டிப்பதற்கு வார்த்தைகள் போதாது. இந்தப் பைத்தியக்காரத்தனம் முடிவதற்குள் எத்தனை உயிர்கள் பலியாகப்போகின்றதோ?' என்று தெரிவித்துள்ளார்.


[X] Close

[X] Close