ஜம்முவில் இருபது ஆண்டுகளில் இல்லாத கொடூரத் தாக்குதல்! - சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் 42 பேர் வீர மரணம் | 42 CRPF solders died in Pulwama terror attack

வெளியிடப்பட்ட நேரம்: 21:19 (14/02/2019)

கடைசி தொடர்பு:07:18 (15/02/2019)

ஜம்முவில் இருபது ஆண்டுகளில் இல்லாத கொடூரத் தாக்குதல்! - சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் 42 பேர் வீர மரணம்

ஜம்மு - காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 42 சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் வீர மரணமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

தாக்குதல்

Photo Credit: ANI

கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத மோசமான தாக்குதல் ஜம்மு-காஷ்மீரில் அரங்கேறியுள்ளது. ஜம்மு-காஷ்மீரில் உள்ள புல்வாமா மாவட்டம் அவாந்திபோரா பகுதியில் ஸ்ரீநகர் - ஜம்மு நெடுஞ்சாலையில் சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் வாகனத்தில் சென்றுகொண்டிருந்தார்கள். 78 வாகனங்களில் 2,500 வீரர்கள் சென்றுகொண்டிருந்தனர். அப்போது சுமார் 350 கிலோ வெடிமருந்து நிரப்பிய கார், சி.ஆர்.பி.எஃப் சென்றுகொண்டிருந்த வாகனத்தின் மீது மோதி வெடித்தது. இந்தக் கோரத்தாக்குதலில் இதுவரை 42 வீரர்கள் வீரமரணமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாட்டையே உலுக்கியுள்ள இந்தச் சம்பவத்துக்கு ஜெய்ஷ்-இ-முகமது என்ற பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

இறப்பு

Photo Credit: ANI

 `வீரர்களின் தியாகம் ஒருபோதும் வீண்போகாது' என பிரதமர் மோடி ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். நாளை மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ஸ்ரீநகர் பகுதிக்கு பார்வையிடச் செல்கிறார். இந்தச் சம்பவத்துக்கு இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் கென்னத், `தீவிரவாதத்தை முறியடிக்க அமெரிக்கா எப்போதும் இந்தியாவுடன் துணை நிற்கும். கண்டனத்துக்குரிய சம்பவம் நிகழ்ந்துள்ளது. வீர மரணமடைந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல்கள்' என்று தெரிவித்துள்ளார். மேலும், தாக்கல் நடந்துள்ள பகுதிக்கு, தேசிய புலனாய்வு முகமை நாளை சென்று விசாரணை நடத்துகிறது.

சிஆர்பிஎஃப்

Photo Credit: ANI

இதனிடையே ஆதில் அகமது தார் என்பவர்தான் இந்தத் தாக்குதலுக்கு காரணம் என்று தகவல் வெளியாகியுள்ளது. இவர் கடந்த ஆண்டு ஜெய்ஷ் - இ- முகமது அமைப்பில் சேர்ந்துள்ளார். இந்த அமைப்பைச் சேர்ந்த தலைவர்கள் சிலர் கொல்லப்பட்டதால், இந்தத் தாக்குதல் நடந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், ஆதில் அகமது சார்பில் வெளியான வீடியோவில், `நான் அமைப்பில் சேர்ந்ததற்கான காரணத்தை நிறைவேற்ற எனக்கு வாய்ப்பு கிடைத்தது. இந்த வீடியோ உங்களை வந்தடையும் முன் நான் மேலோகம் சென்றிருப்பேன்' என்று ஆயுதங்களுடன் அவர் நின்றுகொண்டிருப்பது போல வீடியோ அமைந்துள்ளது. 


[X] Close

[X] Close