`இப்படியொரு தாக்குதலுக்கு வாய்ப்பே இல்லை!' - ஜம்மு தற்கொலைப்படை தாக்குதல் அதிர்ச்சி ரிப்போர்ட் | somewhere security lapse in CRPF jawans attack says CRPF spokesperson

வெளியிடப்பட்ட நேரம்: 09:10 (15/02/2019)

கடைசி தொடர்பு:12:11 (15/02/2019)

`இப்படியொரு தாக்குதலுக்கு வாய்ப்பே இல்லை!' - ஜம்மு தற்கொலைப்படை தாக்குதல் அதிர்ச்சி ரிப்போர்ட்

காஷ்மீர் மாநிலம் ஜம்மு-வில் இருந்து 78 வாகனங்களில் சுமார் 2,500-க்கும் மேற்பட்ட சி.ஆர்.பி.எஃப் வீரர்கள், நேற்று ஸ்ரீநகர் நோக்கி சென்றுகொண்டிருந்தனர். அவர்கள், புல்வாமா மாவட்டம் அவாந்திபோரா என்ற பகுதிக்கு வந்தபோது, 350 கிலோ வெடிபொருகளை ஏற்றிக்கொண்டு எதிரே வந்த கார், சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் வந்த பேருந்தின்மீது மோதியது. இந்தத் தாக்குதலில், இதுவரை 44 வீரர்கள் உயிரிழந்துள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தாக்குதல் தொடர்பாக சி.ஆர்.பி.எஃப் செய்தித் தொடர்பாளர் ஆஷிஸ் குமார் ஜா கூறும்போது, “ நேற்று அதிகாலை 3:30 மணிக்கு ஜம்மு-வில் உள்ள சன்னை ராம ட்ரான்சிஸ்ட் கேம்ப்பில் ( Channi Rama transit camp) இருந்து 78 பேருந்துகளில், சுமார் 2,500 ஜவான்கள், ஸ்ரீநகரில் உள்ள பக்‌ஷி ஸ்டேடியம் ட்ரான்சிஸ்ட் கேம்புக்கு ( Bakshi Stadium transit camp) செல்வதற்காகப் புறப்பட்டுள்ளனர். பேருந்தில் பயணித்த வீரர்களில் பலர் தங்களின் விடுப்பை முடித்துக்கொண்டு மீண்டும் பணியில் இணைய வந்தவர்கள்.  மொத்தம் 350 கிலோமீட்டர் தூரம் கொண்ட இந்தப் பயணத்தை அவர்கள் நேற்று மேற்கொண்டிருந்தனர். 

பக்‌ஷி கேம்புக்கு செல்ல 30 கிலோமீட்டர் இருக்கும் நிலையில்தான் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஜெய்ஷ்-இ-முகமது என்ற அமைப்பைச் சேர்ந்த ஆதில் அகமது தார் என்ற ஒரே ஒரு நபர் மட்டும் விளையாட்டுப் பொருள்களுக்கு மத்தியில் 350 கிலோ எடையுள்ள வெடிகுண்டுகளை மறைத்துவைத்து, சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் வந்த பேருந்தின்மீது மோதியுள்ளார். இந்தத் தாக்குதலில் 44 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 20 பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

வீரர்கள் வந்த பேருந்து, மிக வேகமாகத் தங்களது இலக்கை அடைந்துகொண்டிருந்தது. வீரர்கள் பயணிக்க அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் முறையாகச் செய்யப்பட்டது. சுமார் ஒரு வார காலமாக  ஜம்மு-ஸ்ரீநகர் நெடுஞ்சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு அனைத்து நடமாட்டங்களும் கண்காணிக்கப்பட்ட பின்னரே, நேற்று வீரர்கள் பயணத்தைத் தொடங்கினர். அந்த நெடுஞ்சாலையில் இப்படி ஒரு தாக்குதல் நடக்க வாய்ப்பே கிடையாது. இந்தப் பகுதியில் நிறைய சோதனைச் சாவடிகள் உள்ளன. அவை அனைத்தையும் தாண்டி நூற்றுக்கணக்கான கிலோ வெடிப் பொருள்களைக் கொண்டுவர முடியாது. பாதுகாப்புப் பணிகளில் ஏதோ தவறு நடந்துள்ளது. இல்லையேல், இதுபோன்ற சம்பவம் நடந்திருக்காது. இது தொடர்பாக நிச்சயம் விசாரணை நடத்தப்படும்’ என இந்தியா டுடே சேனலுக்கு தெரிவித்துள்ளார். 

தாக்குதல் நடந்த பகுதிகளில், இன்னும் அதிக வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். சட்டம் ஒழுங்கை நிலைநாட்டும் வகையில் தெற்கு காஷ்மீர் பகுதியில் இணைய சேவை முடக்கப்பட்டுள்ளது. மேலும், சில பகுதிகளில் இன்டெர்நெட் வேகம் 2ஜி அளவாகக் குறைக்கப்பட்டுள்ளது. தாக்குதல் தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாவதைத் தடுக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.  மேலும், உச்சக்கட்ட அவசரச் செய்தி எனக்குறிப்பிட்டு, IED வெடிகுண்டு தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளதாக  காஷ்மீர் காவல் துறை இயக்குநர் சார்பில் கடந்த 8-ம் தேதியே எச்சரிக்கை அனுப்பப்பட்டும், மிக மோசமான தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று நடந்த இந்தத் தாக்குதலில், தூத்துக்குடி மாவட்டம் சபலபேரியைச் சேர்ந்த சுப்ரமணியன் என்ற வீரரும் உயிரிழந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 


[X] Close

[X] Close