`பாகிஸ்தான் தனிமைப்படுத்தப்படும்' - பயங்கரவாதத்துக்கு பதிலடிகொடுக்கும் இந்தியா! | India withdraws Most Favoured Nation status for Pakistan

வெளியிடப்பட்ட நேரம்: 11:50 (15/02/2019)

கடைசி தொடர்பு:11:54 (15/02/2019)

`பாகிஸ்தான் தனிமைப்படுத்தப்படும்' - பயங்கரவாதத்துக்கு பதிலடிகொடுக்கும் இந்தியா!

`உலக அரங்கில் பாகிஸ்தான் தனிமைப்படுத்தப்படும்; பாகிஸ்தானுக்கு வர்த்தகரீதியாக எந்தச் சலுகையும் வழங்கப்படாது'  என மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.

அருண் ஜெட்லி

கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத மோசமான தாக்குதல், ஜம்மு-காஷ்மீரில் நிகழ்ந்துள்ளது. ஜம்மு-காஷ்மீரில் உள்ள புல்வாமா மாவட்டம் அவாந்திபோரா பகுதியில், ஸ்ரீநகர் - ஜம்மு நெடுஞ்சாலையில், 78 வாகனங்களில் 2,500 சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் சென்றுகொண்டிருந்தனர். அப்போது, சுமார் 350 கிலோ வெடிமருந்து நிரப்பிய கார், சி.ஆர்.பி.எஃப் சென்றுகொண்டிருந்த வாகனத்தின்மீது மோதி வெடித்தது. இந்த கோரத் தாக்குதலில், இதுவரை 44 வீரர்கள் வீரமரணமடைந்தனர். இந்தச் சம்பவத்துக்கு ஜெய்ஷ்-இ-முகமது என்ற பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

தாக்குதல்

இதன் எதிரொலியாக,  பாதுகாப்பு விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு கூட்டம், பிரதமர் மோடி தலைமையில் இன்று நடைபெற்றது. இதில், மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், நிதியமைச்சர் அருண் ஜெட்லி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். நாடெங்கிலும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள கோரத் தாக்குதலுக்குப் பதிலடிகொடுக்க வேண்டும் என்ற குரல்கள் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஒலித்துக்கொண்டிருக்கின்றன. தீவிரவாத அமைப்புக்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டும் என்று சமூக வலைதளங்களில் கோரிக்கை வலுத்துவருகிறது. இந்நிலையில், பாதுகாப்பு விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு கூட்டத்தை அடுத்து பேசிய அருண் ஜெட்லி, `உலக அரங்கில் பாகிஸதான் தனிமைப்படுத்தப்படும். பாகிஸ்தானுக்கு வர்த்தகரீதியான எந்தச் சலுகையும் இந்தியா வழங்காது. வர்த்தகரீதியான அனைத்து உறவுகளும் தடைபடும். பாகிஸ்தானுக்கு கொடுக்கப்பட்ட 'அனுகூலமான நாடு' என்ற அந்தஸ்தும் திரும்பப் பெறப்படுகிறது. இந்தத் தாக்குதலுக்குக் காரணமானவர்களும், இதை ஆதரிப்பவர்களும் நிச்சயம் இதற்கான பலனை அனுபவிப்பர்'' என்று காட்டமாகத் தெரிவித்துள்ளார்.


 


[X] Close

[X] Close