அப்துல் ரஷீத் அடிக்கடி சொன்ன வார்த்தை! - ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதிகளின் கொடூர தாக்குதலின் பின்னணி என்ன? | 'india should cry' - terrorist says

வெளியிடப்பட்ட நேரம்: 12:31 (15/02/2019)

கடைசி தொடர்பு:13:22 (15/02/2019)

அப்துல் ரஷீத் அடிக்கடி சொன்ன வார்த்தை! - ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதிகளின் கொடூர தாக்குதலின் பின்னணி என்ன?

காஷ்மீரில், ராணுவ வாகனத்தின்மீது வெடிகுண்டுகள்  நிரப்பிய காரைக் கொண்டு மோதியதில், 44 துணை ராணுவ வீரர்கள் பலியாகினர். மேலும், 45 பேர் படுகாயமடைந்துள்ளனர். பாகிஸ்தானைச் சேர்ந்த  ஜெய்ஷ் இ முகமது இயக்கத்தைச் சேர்ந்த தீவிரவாதி ஆதில் அகமது தார் என்ற 22 வயது இளைஞர்தான் இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளார். 2500-க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் 78 வாகனங்களில் சென்று கொண்டிருந்தபோது, வெடிகுண்டு நிரப்பப்பட்ட வாகனத்துடன் ராணுவ வீரர்களின் கான்வாய்க்குள் புகுந்து, இத்தகைய கொடூரத் தாக்குதலை நடத்தியுள்ளார். 200 கிலோ ஆர்.டி.எக்ஸ் ரக வெடி பொருள்கள் காரில் இருந்து வெடித்துச் சிதறியுள்ளது. 

தீவிரவாதி அடில் அகமது தார்

தாக்குதல் நடத்திய பயங்கரவாதி, புல்மாவா மாவட்டத்தில் உள்ள  கான்டிபாக் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர். அகமதுவின் சகோதரர் தீவிரவாத இயக்கத்தில் இருந்துள்ளார். 12-ம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த அகமதுவும் படிப்பைக் கைவிட்டு, ஜெய்ஷ் இ முகமது இயக்கத்தில் சேர்ந்துள்ளார். அகமதுவின் சகோதரர், ராணுவத் தாக்குதலில் கொல்லப்பட்டதையடுத்து, இவர் தற்கொலைப்படையாக மாறியுள்ளார்.  2018-ம் ஆண்டு முதல் இவரைக் காணவில்லை என்று போலீஸ் தரப்பில் சொல்லப்படுகிறது. லஷ்கர் இ தொய்பா, ஹிஸ்புல் முகாஜீதின் இயக்கங்களிலும் இவருக்குத் தொடர்ந்து  உண்டு.  இவரின் தந்தை ரியாஸ் அகமது தார், கான்டிபாக் கிராமத்தில் சிறிய கடை வைத்து நடத்திவருகிறார்.

தீவிரவாதி நடத்திய தாக்குதல்

துணை ராணுவத்தினரைக் கொன்றது தங்கள் கிராமத்தைச் சேர்ந்த ஆதில் அகமது தார் என்பதை அறிந்த கான்டிபாக் கிராம மக்கள், அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்தியுள்ளனர். அரசு அதிகாரிகளை கிராமத்துக்குள் நுழையவும் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர். ஜெய்ஷ் இ அகமது அமைப்பு, இந்த கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்களை மூளைச்சலவை செய்து ,தற்கொலைப்படை தாக்குதலுக்குப் பயன்படுத்தி வருகிறது. 2017-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதி, லேத்போரா துணை ராணுவ பயிற்சி மையத்தின்மீது 4 பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில், 5 துணை ராணுவத்தினர் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதலை நடத்தியவர்களில், ஃபர்தீன் அகமது கான் என்ற 17 வயது இளைஞரும் ஒருவர். இவரும் கான்டிபாக் கிராமத்தைச் சேர்ந்தவர்தான். கடந்த 2000-ம் ஆண்டு, ஸ்ரீநகரின் புறநகர் பகுதியான படாமி பாக் பகுதியில் துணை ராணுவ மையத்தின்மீது தற்கொலைப்படை தாக்குதல் நடத்திய அஃபாக் அகமது ஷாவும் இந்த கிராமத்தைச் சேர்ந்தவன்தான். அகமது ஷா, மாருதி காரில் வெடிகுண்டுகளை நிரப்பி, துணை ராணுவ மையத்துக்குள் புகுந்து வெடிக்கச் செய்தான். இந்த தாக்குதலில் 15 ராணுவத்தினர் கொல்லப்பட்டனர். 

ஜெய்ஷ் இ முகமது இயக்கம், தொடர்ந்து இந்தியாவுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருந்துவருகிறது. 2001-ம் ஆண்டு, நாடாளுமன்றத்தின்மீது தாக்குதல், 2016-ம் ஆண்டு பதன்கோட் விமானப்படைத் தளம்மீது தாக்குதல், இதே ஆண்டில் செப்டம்பர் மாதத்தில் உரி தாக்குதலில் 20 ராணுவத்தினர் இறந்தனர். தற்போது, 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகப் பெரிய தாக்குதலை நடத்தியுள்ளது ஜெஷ் இ முகமது இயக்கம். இந்தியா வேரறுக்கவேண்டிய முதல் இயக்கம் இது. 

தீவிரவாதி தாக்குல் நடத்திய இடம்

காஷ்மீரில் நேற்று நடத்தப்பட்ட தாக்குதலுக்கு,  ஜெய்ஷ் இ முகமது இயக்கத்தின் கமாண்டர்  அப்துல் ரஷீத் காஷி மூளையாகச் செயல்பட்டுள்ளார். 2001- ம் ஆண்டு, நாடாளுமன்றத் தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்ட அப்சல் குரு, பிப்ரவரி 9-ம் தேதி தூக்கிலிடப்பட்டார். இதையொட்டி,  மிகப் பெரிய தாக்குதல் நடத்த வேண்டும்; அதைக் கண்டு இந்தியாவே அழ வேண்டுமென்று அப்துல் ரஷீத் காஷி அடிக்கடி கூறிவந்துள்ளார். வெடிமருந்துகள் தயாரிப்பதில் இவர் நிபுணத்துவம் பெற்றவர். ஆப்கானிஸ்தானில் தாலிபான் இயக்கத்தில் இருந்தவர். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close