`இதுதான் காஷ்மீர் மக்களுக்கு என் கடைசி செய்தி!'- தீவிரவாதி ஆதிலின் அதிர்ச்சி வீடியோ | I have got the chance to do what I joined the Jaish says Terrorist Adil Ahmad

வெளியிடப்பட்ட நேரம்: 14:00 (15/02/2019)

கடைசி தொடர்பு:14:00 (15/02/2019)

`இதுதான் காஷ்மீர் மக்களுக்கு என் கடைசி செய்தி!'- தீவிரவாதி ஆதிலின் அதிர்ச்சி வீடியோ

புல்வாமா மாவட்டத்தில் நேற்று சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் மீது நடந்த தற்கொலைப் படை தாக்குதல் உலகநாடுகளை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத ஒரு தாக்குதல் தற்போது நடந்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. இதில் 44 வீரர்கள் வீர மரணம் அடைந்துள்ளனர். 20-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

சி.ஆர்.பி.எஃப்  தாக்குதல்

இந்தத் தாக்குதலுக்கு பாகிஸ்தானைச் சேர்ந்த ஜெய்ஷ்-இ- முகமது என்ற அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. அந்த அமைப்பில் உள்ள ஆதில் அகமது தார் என்ற 22 வயது இளைஞன் தனி ஓர் ஆளாக, ஸ்கார்பியோ கார் முழுவதும் 350 கிலோ வெடிப் பொருள்களை விளையாட்டுப் பொருள்களுக்குள் மறைத்துவைத்துத் தாக்குதல் நடத்தியுள்ளார். ஆதில்தான் தாக்குதலுக்குக் காரணம் எனக் காவலர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். 

சி.ஆர்.பி.எஃப்  தாக்குதல்

தாக்குதலுக்கு முன்னதாக ஆதில் பேசியுள்ள இரண்டு வீடியோக்கள் தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 7 நிமிடங்கள் கொண்ட ஒரு வீடியோவில் காஷ்மீரி மொழியிலும் 10 நிமிடங்கள் கொண்ட மற்றொரு வீடியோவில் உருதிலும் பேசியுள்ளான் ஆதில். இரண்டு வீடியோவிலும் அவனைச் சுற்றி ஏகே 47 ரக துப்பாக்கி, M4 கார்பைன், பிரவுனிங் பிஸ்டல் ஆகியவை அடுக்கிவைக்கப்பட்டுள்ளன. அவனுக்குப் பின்னால் ஜெயிஷ்-இ-முகமது அமைப்பின் பேனர் வைக்கப்பட்டுள்ளது. 

தீவிரவாதி

``நான் ஜெயிஷ் அமைப்பில் ஏன் சேர்ந்தேன் என்ற நோக்கத்தை நிறைவேற்ற ஒரு வருடத்துக்குப் பிறகு எனக்கு ஒரு நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது. நான் இதை முழுவதுமாகப் பயன்படுத்திக்கொள்ளப் போகிறேன். இந்த வீடியோவை நீங்கள் பார்க்கும்போது நான் சொர்க்கத்தில் மிகவும் சந்தோஷமாக இருப்பேன். இதுதான் காஷ்மீர் மக்களுக்கு என் கடைசி செய்தி. காஷ்மீரில் உள்ள இளைஞர்கள் இந்தியாவுக்கு எதிராகப் புனிதப் போர் நடத்துங்கள். அனைவரும் எங்கள் இயக்கத்தில் இணைந்து உங்களை நன்கு தயார்ப்படுத்திக்கொண்டு கடைசிப் போருக்காகத் தயாராகுங்கள்’ என காஷ்மீரி மொழியில் உள்ள வீடியோவில் பேசியுள்ளான் தீவிரவாதி. 

சி.ஆர்.பி.எஃப்  தாக்குதல்

இதைத்தொடர்ந்து உள்ள உருது வீடியோவிலும் தங்கள் அமைப்பு தொடர்பான சில விஷங்களையே மீண்டும் மீண்டும் மாறுபாடுகளுடன் கூறியுள்ளான்.  `உறவினர்கள், நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள். நான் இறந்தபிறகு என் வீர மரணத்தை விழாவாகக் கொண்டாடுங்கள். திருமணம் எவ்வளவு சிறப்பாக நடைபெறுமோ அந்த அளவுக்குச் சிறப்பாகக் கொண்டாடுங்கள். காஷ்மீரில் உள்ள பெண்கள் கண்டிப்பாக முகத்திரை அணிந்துகொள்ளுங்கள், இளைஞர்கள் யாரும் காதலில் விழாதீர்கள். உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்கள் அனைவரும் வெளிநாட்டு ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து விடுதலை செய்யப்படவேண்டும். ஆப்கானிஸ்தானில் இருந்த அமெரிக்க ராணுவத்தினரை வெற்றி கொண்ட தாலிபான் தாக்குதலின் உத்வேகத்தினால்தான் நான் இதைச் செய்யவுள்ளேன். காஷ்மீரில் உள்ள இஸ்லாமியர்களின் நிரந்தர விடுதலைக்காகவே என் வீர மரணம்’ எனக் குறிப்பிட்டுள்ளார். 

ஜெய்ஷ்-இ- முகமது அமைப்பு வெளியிட்டுள்ள செய்திகள் மற்றும் வீடியோக்கள் கொண்ட அனைத்துக் கணக்குகளும் காஷ்மீர் மற்றும் பாகிஸ்தான் மாநிலத்திலிருந்து உருவாக்கப்பட்டுள்ளது. அந்த அமைப்பினர் மிகவும் உயர் தொழில்நுட்பத்துடன் சமூகவலைதளங்களில் சில நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் கூறப்பட்டுள்ளது. 

 

 


[X] Close

[X] Close