`இரண்டு நிமிடத்துக்கு முன்னர்தான் பேசினேன்’- கதறும் சி.ஆர்.பி.எஃப் வீரரின் மனைவி | jawan Pradeep Kumar was talking on the phone with me before attack his wife says

வெளியிடப்பட்ட நேரம்: 17:20 (15/02/2019)

கடைசி தொடர்பு:17:20 (15/02/2019)

`இரண்டு நிமிடத்துக்கு முன்னர்தான் பேசினேன்’- கதறும் சி.ஆர்.பி.எஃப் வீரரின் மனைவி

காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் நேற்று மாலை நடந்த தற்கொலைப் படைத் தாக்குதலில் இதுவரை 44 சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் வீர மரணம் அடைந்துள்ளனர். மேலும் 20-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த கொடூரத் தாக்குதலுக்கு இந்தியத் தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். 

தாக்குதல்

இந்தத் தாக்குதலில் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த 11 வீரர்கள் உயிரிழந்துள்ளனர். அவர்களில் கான்பூர், பரா சிரோலி பகுதியைச் சேர்ந்த ப்ரதீப் குமாரும் ஒருவர். அவருக்கு நஜீரா என்ற மனைவியும், இரண்டு பெண் குழந்தைகளும் உள்ளனர்.

``என் கணவர் 2004-ம் ஆண்டு முதல் சி.ஆர்.பி.எஃப் வீரராக பணியாற்றி வருகிறார். எங்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். அவர் இரண்டு மாத விடுப்பில் எங்களுடன் தங்கிவிட்டு கடந்த 10-ம் தேதிதான் மீண்டும் பணியில் சேர புறப்பட்டார். 11-ம் தேதி ஜம்மு சென்றுவிட்டதாக எனக்கு போன் செய்தார். அதன் பின்னர் நேற்று மாலை என்னுடன் போனில் பேசிக்கொண்டிருந்தார். என் இளைய மகள் மன்யாவை பற்றி விசாரித்துக்கொண்டிருந்தார். நான் பதில் கூறுவதற்குள் போன் கட் ஆகிவிட்டது. நான் மீண்டும் மீண்டும் முயற்சி செய்தேன். ஆனால், அது பலனளிக்கவில்லை. போன் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்தது.

பிறகு அடுத்த சில மணிநேரம் கழித்து தாக்குதல் தொடர்பாக தொலைக்காட்சியில் வெளியான செய்தியைப் பார்த்தேன். அப்போதிலிருந்து எனக்கு மனம் பாரமாக இருந்தது. மிகவும் பதற்றமாக இருந்தது. என் கணவருக்கு என்ன ஆனது என எந்தத் தகவலும் தெரியவில்லை. இதையடுத்து, நேற்று இரவு சி.ஆர்.பி.எஃப் கட்டுப்பாட்டு அறையிலிருந்து என் கணவர் இறந்துவிட்டதாக தகவல் கிடைத்தது. அதைக் கேட்டதும் மிகவும் அதிர்ச்சியாக இருந்தது.

தாக்குதலுக்கு இரண்டு நிமிடத்துக்கு முன்னால் கூட நாங்கள் இருவரும் போனில் பேசிக்கொண்டிருந்தோம் அதற்குள் அவர் எப்படி இறந்திருக்க முடியும். இரண்டு நிமிடத்தில் என்ன நடந்திருக்கும் என என்னால் நினைத்துக்கூட பார்க்கமுடியவில்லை. என் இளைய மகள் என்றால் அவருக்கு உயிர். கடைசியாக அவளைப் பற்றித்தான் விசாரித்தார். இனி அப்பா எங்கே என மகள்கள் கேட்டால் நான் என்ன பதில் சொல்வேன் என தெரியவில்லை’ என்று உருக்கமாகத் தெரிவித்துள்ளார். பிரதீப் குமாரின் இறப்பு அந்தக் கிராம மக்களைச் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 

News & Photo Credits : HindustanTimes


[X] Close

[X] Close