`பயங்கரவாதம் எந்த வடிவில் வந்தாலும் எதிர்ப்போம்!’ - புல்வாமா தாக்குதலுக்கு சீனா கண்டனம் | China condemns pulwama terrorist attack

வெளியிடப்பட்ட நேரம்: 17:40 (15/02/2019)

கடைசி தொடர்பு:17:40 (15/02/2019)

`பயங்கரவாதம் எந்த வடிவில் வந்தாலும் எதிர்ப்போம்!’ - புல்வாமா தாக்குதலுக்கு சீனா கண்டனம்

காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில், 40-க்கும் மேற்பட்ட சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதலை நடத்தியது, பாகிஸ்தானை மையமாக கொண்டு இயங்கி வரும் ‘ஜெய்ஸ் - இ - முகமது’ பயங்கரவாத அமைப்பு என்பது தெரியவந்துள்ளது. அந்த அமைப்பைச் சேர்ந்த ஆதில் அகமது தார் என்ற இளைஞர், தற்கொலைப்படையாக மாறி தாக்குதல் நடத்தியுள்ளார். இந்தியாவெங்கும் கொதிப்பை ஏற்படுத்தியுள்ள இந்தக் கொடூர தாக்குதலுக்கு, உலகநாடுகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. தற்போது, பாகிஸ்தானை முக்கிய நட்புநாடாக கருதும் சீனாவும், புல்வாமா தாக்குதலைக் கண்டித்துள்ளது.

Photo Credit: ANI

சீன வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ஷெங் ஷூவாங், பெய்ஜிங்கில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, ``இந்தத் தற்கொலைப்படை தாக்குதலை அறிந்து அதிர்ச்சியடைந்தோம். பயங்கரவாதம் எந்த வடிவில் வந்தாலும், சீனா அதை எதிர்க்கும்” என்று தெரிவித்தார்.

அவரிடம், ‘ஜெய்ஸ் - இ -  முகமது’ தலைவர் மசூத் ஆசார் சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கப்படுவதில் சீனாவின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்துமாறு, செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு, ``அந்த அமைப்பை ஏற்கெனவே பயங்கரவாத அமைப்புகளின் பட்டியலில் வைத்துள்ளது ஐநா பாதுகாப்பு கவுன்சில். மசூத் ஆசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கும் விவகாரத்தில், சில விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டியிருக்கிறது. இருந்தாலும், அது குறித்து பாதுகாப்புக் கவுன்சிலில் அங்கம் வகிக்கும் மற்ற நாடுகளிடம் சீனா முறையிடும்” என்று, சமாளிப்பான பதிலையே தந்தார் ஷெங் ஷூவாங். 

மசூத் ஆசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க வலியுறுத்தி, இந்தியா பல ஆண்டுகளாக போராடி வருகிறது. அதற்குரிய நடவடிக்கைகளில் இந்தியா இறுதிக்கட்டத்தை நெருங்கும்போதெல்லாம், சீனா குறுக்கேவந்து முட்டுக்கட்டை போடுவதை வழக்கமாக கொண்டுள்ளது. இப்போது, இத்தனை பெரிய தாக்குதலை அந்த அமைப்பு நடத்திய பிறகும், சீனாவின் நிலைப்பாட்டில் மாற்றம் தென்படவில்லை.


[X] Close

[X] Close