`மிகவும் ஆதரவான நாடு’ அங்கீகாரத்தில் அப்படி என்ன இருக்கிறது? | most favorable nation status withdrawal

வெளியிடப்பட்ட நேரம்: 19:20 (15/02/2019)

கடைசி தொடர்பு:19:20 (15/02/2019)

`மிகவும் ஆதரவான நாடு’ அங்கீகாரத்தில் அப்படி என்ன இருக்கிறது?

ஜம்மு-காஷ்மீரில், புல்வாமா மாவட்டத்தின் கோரிபோரா பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப் படைத் தாக்குதலில் 44 சிஆர்பிஎஃப் வீரர்கள் கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும்விதமாக, தீவிரவாதிகளுக்கு ஆதரவான பாகிஸ்தானுக்கு பொருளாதார நெருக்கடி கொடுக்கும் வகையில், அந்த நாட்டுக்கு வழங்கப்பட்ட `மிகவும் ஆதரவான நாடு’ என்ற வர்த்தக அங்கீகாரத்தை இந்தியா திரும்பப்பெறுவதாக அறிவித்துள்ளது. 

நரேந்திர மோடி

`மிகவும் ஆதரவான நாடு’ என்ற அங்கீகாரத்தில் அப்படி என்ன முக்கியத்துவம் என்று கேள்வி எழலாம். இரு நாடுகளின் வர்த்தகர்களுக்கு இடையே பாகுபாடற்ற வணிகத்தை ஊக்குவிப்பதற்காக ஒரு நாடு இன்னொரு நாட்டுக்கு வழங்கும் அந்தஸ்துதான் இது. இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டால், அந்த இரு நாடுகளுக்கு இடைப்பட்ட வர்த்தகம் தொடர்பான, சுங்கம் மற்றும் வர்த்தக பொது ஒப்பந்தத்தில் முதல் பிரிவு நாடாக அந்த நாடு அங்கீகரிக்கப்படும்.

இந்த அங்கீகாரத்தின்படி, உலக வர்த்தக அமைப்பின் உறுப்பினர்களாக இருக்கும் நாடுகளுக்கு வழங்கப்படும் வரிச்சலுகைகள் உள்ளிட்ட அனைத்து சலுகைகளையும் உரிமைகளையும் அந்த நாட்டுக்கும் வழங்க வேண்டும். ஏற்றுமதிக்கான வரிச்சலுகை, கட்டணச்சலுகை, இலவச மார்க்கெட்டிங் மற்றும் தடையற்ற வணிகம் போன்ற பல்வேறு சலுகைகளை இந்த அங்கீகாரத்தின்மூலம் பெறலாம். இந்த அங்கீகாரம் பாகிஸ்தானுக்கு இந்தியா 1996-ம் ஆண்டு கொடுத்தது. அதேவேளை, இந்தியாவுக்கு, `மிகவும் ஆதரவான நாடு’ என்ற அந்தஸ்தை பாகிஸ்தான் தற்போதுவரை வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.  

`மிகவும் ஆதரவான நாடு' என்ற அந்தஸ்தை பாகிஸ்தான் இழப்பதன்மூலம், இதனால் கிடைக்கக்கூடிய அனைத்து சலுகைகளையும் அந்த நாடு இழக்க நேரிடும். அந்த நாட்டில் விற்பனையாகும் பொருள்களின் விலை உயர்வு, ஏற்றுமதி தொழில்துறை பாதிப்புக்கும் வழிவகுக்கும். ஏற்கெனவே 2016-ல் யூரி தாக்குதலின்போதே சிறப்பு அந்தஸ்தை நீக்குவதுகுறித்து இந்தியா பரிசீலனை செய்தது. தற்போது நீக்குவதாக அறிவித்துள்ளது. தொடர்ந்து மற்ற நாடுகளையும் பாகிஸ்தான்மீது பொருளாதார நெருக்கடி கொடுக்க இந்தியா வற்புறுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


[X] Close

[X] Close