`என் ஒரு மகன் இறந்துட்டான்; இன்னொரு மகனை ராணுவத்துக்கு அனுப்பத் தயார்’’ #VikatanInfographics | militant attack on Indian forces

வெளியிடப்பட்ட நேரம்: 10:51 (16/02/2019)

கடைசி தொடர்பு:14:00 (16/02/2019)

`என் ஒரு மகன் இறந்துட்டான்; இன்னொரு மகனை ராணுவத்துக்கு அனுப்பத் தயார்’’ #VikatanInfographics

`என் ஒரு மகன் இறந்துட்டான்; இன்னொரு மகனை ராணுவத்துக்கு அனுப்பத் தயார்’’ #VikatanInfographics

ந்தியாவைப் பொறுத்தவரை, 130 கோடிக்கும் அதிகமான மக்கள் தொகையைக் கொண்ட நாடு. நாடு முழுவதும் வாழும் நாம் அனைவரும் அன்றாடம் நிம்மதியாகத் தூங்குகிறோம், பாதுகாப்புடன் வாழ்கிறோம் என்றால், அதற்கு முக்கியக் காரணமாக இருப்பவர்கள் நம் எல்லைப்பகுதியில், கடுமையான பனியிலும் வெயில் மற்றும் மழையிலும் நாட்டைப் பாதுகாத்துக்கொண்டிருக்கும் ராணுவ வீரர்களால்தான். அவர்களின் தியாகத்தால்தான் என்று சொல்லலாம்.  

ராணுவத்தினர் மீது தாக்குதல்

கடுங்குளிர், வாடைக்காற்று என எந்தவொரு தட்பவெப்பநிலையையும் பொருட்படுத்தாது, தாய்நாட்டைப் பாதுகாக்க, நாட்டு மக்களைப் பாதுகாக்க ராணுவத்தினர் எல்லையில் உழைப்பதால்தான், நாம் மகிழ்ச்சியுடன் வாழ்கிறோம். ராணுவத்தில் பணியாற்றும் அனைவருமே ஹீரோக்கள்தாம். உலக அளவில் மிகவும் சக்தி வாய்ந்த ராணுவப் படைகளில் இந்திய ராணுவம் நான்காவது இடத்தில்.

எனினும், இந்திய ராணுவப் படையினரைக் குறிவைத்து பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்வதும், பதிலுக்கு நம் ராணுவப்படையினர் பதிலடித் தாக்குதல் நடத்துவதும் எல்லையை ஒட்டியுள்ள பகுதிகளிலும் கிராமங்களிலும் தொடர்கதையாக உள்ளது. ஊடுருவலை முறியடிக்கும் பணியைத் இந்திய ராணுவத்தினர் திறம்பட மேற்கொள்ளும் அதேவேளையில், இந்தியப் படையினரைக் குறிவைத்து, வெடிகுண்டுகளை வீசியும் வெடிமருந்துப் பொருள்களை உபயோகித்தும், அவ்வப்போது திடீர்த் தாக்குதல்கள் நடத்தப்படுவதும் நிகழ்ந்து வருகின்றன.

தற்கொலைப்படை தீவிரவாதத் தாக்குதல்களின்போது, எதிர்பாராதவிதமாக நம் வீரர்கள் தங்கள் இன்னுயிரை இழக்கும் சோகங்களும் நடைபெற்றுக்கொண்டுதான் உள்ளன. 

கடந்த 2014-ம் ஆண்டு முதல் இதுவரை இந்திய ராணுவத்தினர்மீது நடத்தப்பட்ட தாக்குதல்களின் எண்ணிக்கை 2,400. இவற்றில் பொதுமக்கள் தரப்பில் 1,024 பேர் உயிரிழந்துள்ளனர். வீரமரணம் அடைந்த இந்திய ராணுவத்தினரின் எண்ணிக்கை 805. இந்தியப் படையினர் நடத்திய பதிலடித் தாக்குதலில் கொல்லப்பட்ட பயங்கரவாதிகளின் எண்ணிக்கை 2,021.

Terrorist Attack Data

இந்த நிலையில் பிப்ரவரி 14-ம் தேதி, பாகிஸ்தானில் இருந்து செயல்படும் `ஜெய்ஷ்-இ-முகமது' அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதி ஒருவன் நடத்திய தற்கொலைப்படைத் தாக்குதலில், 40-க்கும் மேற்பட்ட மத்திய ரிசர்வ் காவல்படையைச் சேர்ந்த வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.       20-க்கும் மேற்பட்ட வீரர்கள் பலத்த காயம் அடைந்துள்ளனர். வீரமரணம் அடைந்தவர்களில் இரண்டு பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள்.

இந்தத் தாக்குதலில் உயிரிழந்த வீரர்களில் ஒருவரான ரதன் தாகூரின் தந்தை, ``தாய்நாட்டுக்காக என்னுடைய ஒரு மகனை இழந்துவிட்டேன். இன்னொரு மகனையும் ராணுவத்தில் பணியாற்ற அனுப்புவேன்’’ என்று சோகத்திலும் நாட்டுப்பற்றை வெளிப்படுத்தியது, கண்களில் நீரை வரவழைப்பதாக உள்ளது. 

`எந்த நேரமும் எதுவேண்டுமானாலும் நடக்கும்' என்ற நிலையில், உயிரைப் பணயம் வைத்து மேற்கொள்ளும் பணி, தங்கள் உயிரைத் துச்சமாக எண்ணி, எல்லையில் பணிபுரியும் அனைவருமே நாட்டு மக்களின் நலன்களுக்காகப் பாடுபடுகிறவர்கள்தான். நாட்டு மக்களின் பாதுகாப்புக்காக மட்டுமே அயராது பாடுபடும் அனைத்து ராணுவத்தினருக்கும் நம் அனைவரின் சார்பிலும் ஒரு ராயல் சல்யூட்...


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close