எதற்காக நடுவழியில் நின்றது 'வந்தே பாரத்' அதிவேக ரயில்-விளக்கமளித்த ரயில்வே அமைச்சகம் | Reason behind Vande Bharat Express Break Down

வெளியிடப்பட்ட நேரம்: 21:30 (16/02/2019)

கடைசி தொடர்பு:21:30 (16/02/2019)

எதற்காக நடுவழியில் நின்றது 'வந்தே பாரத்' அதிவேக ரயில்-விளக்கமளித்த ரயில்வே அமைச்சகம்

'வந்தே பாரத்' எக்ஸ்பிரஸ்

நாட்டின் முதல் அதிவேக ரயிலாக நேற்று அறிமுகப்படுத்தப்பட்ட 'வந்தே பாரத்' எக்ஸ்பிரஸ் தனது முதல் பயணத்தின்போதே பழுதடைந்து பாதி வழியில் நின்றது. பிரதமர் மோடியால் கொடியசைத்துத் தொடங்கி வைக்கப்பட்ட இந்த ரயில் டெல்லியிலிருந்து கிளம்பி வெற்றிகரமாக வாரணாசியைச் சென்றடைந்தது. பின்னர் மீண்டும் டெல்லிக்குத் திரும்பும்போது ஏற்பட்ட பழுதையடுத்து சாம்ராலா ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டது. பின்னர் அதில் பயணித்தவர்கள் வேறு ரயிலில் அனுப்பி வைக்கப்பட்டனர். தொடங்கப்பட்ட முதல் நாளே பயணத்தை முழுமை செய்யாமல் போனதால் `வந்தே பாரத்' ரயில் மீது பல விமர்சனங்கள் எழுந்தன.

வந்தே பாரத்

இதையடுத்து, ரயில்வே அமைச்சகம் சார்பில் அறிக்கை ஒன்று தற்பொழுது வெளியிடப்பட்டுள்ளது. அதில் ரயில் எதற்காகப் பாதி வழியில் நின்றது என விளக்கமளிக்கப்பட்டுள்ளது. அதன்படி ' ரயிலின் கடைசி நான்கு பெட்டிகளுக்கிடையேயான தொடர்பில் சிக்கல் இருந்தது மட்டுமின்றி வெளியில் இருந்து ஏதோ ஒரு பொருள் தாக்கியிருக்கிறது. அதன் காரணமாக ரயிலின் பாதுகாப்பு அமைப்பானது உடனடியாகச் செயல்பட்டு பிரேக்கை இயக்கியிருக்கிறது. அதன் பின்னர் புது டெல்லியில் இருக்கும் பராமரிப்பு மையத்துக்கு ரயில் கொண்டு செல்லப்பட்டு பழுதுகள் சரி செய்யப்பட்டன. எனவே, ரயில் நாளை திட்டமிட்டபடி இயங்கும் எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


[X] Close

[X] Close