`நான் உயிருடன் இருப்பது கூட என் குடும்பத்தினருக்கு தெரியாது’ - சி.ஆர்.பி.எஃப் வீரர் உருக்கம் | We were just two vehicles behind, said CRPF jawan Jasvinder Pal

வெளியிடப்பட்ட நேரம்: 10:23 (18/02/2019)

கடைசி தொடர்பு:10:32 (18/02/2019)

`நான் உயிருடன் இருப்பது கூட என் குடும்பத்தினருக்கு தெரியாது’ - சி.ஆர்.பி.எஃப் வீரர் உருக்கம்

கடந்த 14-ம் தேதி யாராலும் மறக்கமுடியாத வரலாற்றில் இடம் பிடித்த ஒரு கறுப்பு நாளாக மாறியுள்ளது. காஷ்மீர் மாநிலம் புல்வாமா பகுதியில் 44 சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் தீவிரவாத தற்கொலைப்படை தாக்குதலால் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் இந்தியா உட்பட உலக நாடுகளை உலுக்கியுள்ளது. இறந்தவர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்களின் வேதனை ஒருபுறம் இருக்கத் தாக்குதலில் படுகாயமடைந்தவர்கள், தாக்குதலை நேரில் பார்த்தவர்களின் வேதனையும் சொல்ல முடியாத வகையில்தான் உள்ளது. 

 சி.ஆர்.பி.எஃப்  தாக்குதல்

புல்வாமா தாக்குதல் நடந்த அன்றைய தினம் சுமார் 78 பேருந்துகளில் 2,500-க்கும் மேற்பட்ட சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் பயணம் செய்தனர். அவர்களில் தாக்குதலை நேரில் பார்த்த சில வீரர்கள் அன்று நடந்த சம்பவம் குறித்து என்.டி.டிவிக்கு பேட்டியளித்துள்ளனர். ஜஸ்விந்தர் பால் என்ற வீரர் கூறும்போது, `` நான்கு நாள்கள் முன்பு நடந்த தாக்குதலில் என் சக வீரர்கள் 44 பேரை நான் இழந்துள்ளேன். அதை என்னால் என்றுமே மறக்கமுடியாது. நாங்கள் ஜம்முவில் இருந்து புறப்பட்டு ஸ்ரீநகர் நோக்கி சென்றுகொண்டிருந்தோம். ஸ்ரீநகருக்கு 30 கி.மீ முன்னதாகதான் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது. தாக்குதல் நடத்தப்பட்ட பேருந்திலிருந்து இரண்டு பேருந்துக்குப் பின்னால் நான் இருந்தேன்.

குண்டு வெடித்த அடுத்த நொடி நாங்கள் அனைவரும் பேருந்தில் இருந்து இறங்கி வந்து பார்த்தோம். சாலையில் சுமார் 500 முதல் 600 மீட்டர் வரை எங்கள் வீரர்களின் உடல்கள் சிதறிக் கிடந்தன. பேருந்துகளின் கண்ணாடிகள் ஒரு கி.மீ தூரம் வரை நொறுங்கிக் கிடந்தன. இப்படி ஒரு எதிர்பாராத தாக்குதலைக் கண்டதும் எனக்கு வார்த்தையே வரவில்லை’ எனத் தெரிவித்துள்ளார். 

இவரைத்தொடர்ந்து பேசிய மற்றொரு வீரர் டேனிஷ் சந்த், `` நான் குண்டு துளைக்காத வண்டியில் இருந்தேன். தாக்குதல் நடந்த பிறகு அந்த இடம் முழுவதும் ஒரு வித பீதியும் அமைதியும் நிலைகொண்டிருந்தது. தாக்குதலில் காயமடைந்த வீரர்களின் கதறலை என்னால் கேட்கவே முடியவில்லை. தாக்குதலுக்குப் பிறகு அனைத்துப் பேருந்துகளும் சுமார் மூன்று முதல் நான்கு மணி நேரம் வரை அதே இடத்தில் நின்றன. எங்கள் வீரர்களுக்கு நாங்களே முதலுதவி செய்தோம். இறந்தவர்களை நாங்களே அப்புறப்படுத்தினோம். அப்போது இருந்த என் மனநிலையைப் பற்றி விவரிக்க வார்த்தைகளே இல்லை. தாக்குதலை அறிந்த என் குடும்பத்தினர் எனக்கு என்ன நடந்தது எனத் தெரியாமல் மூன்று நாள்கள் திண்டாடினர். பிறகு என் நண்பன் மூலம் நான் உயிருடன் இருக்கும் தகவலை அவர்களுக்குத் தெரியப்படுத்தினேன்’ என உருக்கமாகப் பேசியுள்ளார். 


[X] Close

[X] Close