Published:Updated:

10 நகரங்கள்; சிப்ஸ், பிஸ்கட் தான் உணவு! - ‘டாக்ஸி டிரைவர்’ கேம் கதாபாத்திரமாகவே வாழ்ந்த சிறுமி

சத்யா கோபாலன்

‘பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் செல்போன் பயன்படுத்தினால் அதைக் கவனியுங்கள்’ என வேதனையுடன் தெரிவித்துள்ளார் சிறுமியின் தந்தை.

சிறுமி
சிறுமி

உத்தரகாண்ட் மாநில உதாம் சிங் நகர் மாவட்டம், பண்ட் நகர் பகுதியைச் சேர்ந்த 15 வயதுச் சிறுமி, கடந்த ஜூலை 1-ம் தேதி காணாமல் போயுள்ளார். அவரது தந்தை அதே பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி வந்துள்ளார். சிறுமி காணாமல் போனதால் பதறிய பெற்றோர் உடனடியாக காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

சிறுமி - மாதிரி புகைப்படம்
சிறுமி - மாதிரி புகைப்படம்
pickpik

பண்ட் நகர் போலீஸார், மாவட்டம் முழுவதும் சிறுமியைத் தேடியுள்ளார். பின்னர் சிறுமியின் புகைப்படம் மற்றும் பிற விவரங்களை அனைத்து மாவட்ட காவல் நிலையத்துக்கும் அருகில் உள்ள மாநிலங்களுக்கும் அனுப்பி சோதனையிடக் கூறியுள்ளனர். இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமையன்று டெல்லியில் உள்ள கமலா மார்க்கெட்டில், ஒரு சிறுமி டாக்ஸி டிரைவருடன் சண்டையிட்டுக் கொண்டிருந்துள்ளார். அதைக் கவனித்த காவலர்கள் சிறுமியிடம் சென்று விசாரணை நடத்தியுள்ளனர். அப்போதுதான் தெரிந்தது அது உத்தரகாண்ட்டைச் சேர்ந்த சிறுமி என்பது.

சிறுமியை அங்குள்ள காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று, காணாமல் போனவர் அவர்தானா என்று உறுதியான பின்னர் சிறுமியை அவரின் சொந்த ஊருக்கு அழைத்து வந்துள்ளனர். 18 நாள்களுக்குப் பிறகு சிறுமி திரும்பக் கிடைத்துள்ளார். உதாம் சிங் நகர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பரிந்தர்ஜித் சிங் சிறுமியிடம் நடத்திய விசாரணையில் வியக்க வைக்கும் பல தகவல்கள் வெளிவந்துள்ளன.

10 நகரங்கள்; சிப்ஸ், பிஸ்கட் தான் உணவு! - ‘டாக்ஸி டிரைவர்’ கேம் கதாபாத்திரமாகவே வாழ்ந்த சிறுமி

காவலர்களிடம் சிறுமி கூறியதாகத் தெரிவித்துள்ள பரிந்தர்ஜித் சிங், “ கடந்த கோடைக்காலத்தில் வீட்டில் தனியாக இருந்த சிறுமி தன் நேரத்தைக் கழிப்பதற்காக தன் தாய் செல்போனில் ஒரு ‘டாக்ஸி ட்ரைவர் -2’ என்ற கேம் ஆப்பை டவுன்லோடு செய்துள்ளார். ‘ஒரு டாக்ஸி டிரைவர் சிலரை தன் வண்டியில் ஏற்றிக்கொண்டு பல நகரங்களுக்குச் சென்று பல்வேறு சிரமங்களைக் கடந்து வேறு ஓர் இடத்தில் அவர்களை இறக்கி விடுவார். அவர் எந்த நகரத்திலும் தங்காமல் தொடர்ந்து பயணம் செய்துகொண்டே இருப்பார்’ என்பதுதான் அந்த கேம். அதனால் ஈர்க்கப்பட்ட சிறுமி, தொடர்ந்து இரவு பகலாக அதை விளையாடி மிகக் குறுகிய காலத்திலேயே அதில் உள்ள மொத்த லெவல்களையும் முடித்துள்ளார்.

வீடியோ கேம் விளையாடுவது படைப்பாற்றலை அதிகரிக்குமா? - ஆய்வில் புதிய தகவல்!  

அதன் பின்னர் கேம் விளையாடாததால் சிரமப்பட்ட அவர் அந்த கேம்மில் உள்ள கதாபாத்திரமாகவே தான் வாழ வேண்டும் என ஆசைப்பட்டு, பிளான் செய்து வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். வெளியில் செல்வதற்கு முன்னதாக தன் வீட்டிலிருந்து ரூ.12,000 பணத்தைத் எடுத்துக்கொண்டு, தன் சகோதரர் மெயில் ஐ.டி மூலம் பேருந்து டிக்கெட் புக் செய்து வெளியேறியுள்ளார்” எனக் கூறிய அதிகாரி தொடர்ந்து,

பேருந்து
பேருந்து

“முதலில் அந்தச் சிறுமி உத்தரகாண்ட்டிலிருந்து உத்தரப்பிரதேசத்தின் பேரெய்லிக்குச் சென்றுள்ளார். அங்கிருந்து லக்னோ, ஜெய்ப்பூர், ஜேத்பூர், உதய்பூர், அகமதாபாத், புனே போன்ற நகரங்களுக்கு பல்வேறு பேருந்துகளில் பயணித்துள்ளார். பின்னர் அங்கிருந்து டெல்லி சென்றுள்ளார். டெல்லியிலிருந்து ரிஷிகேஷ் சென்றுவிட்டு மீண்டும் டெல்லி திரும்பியுள்ளார். பின்னர் மீண்டும் டெல்லியிலிருந்து புறப்பட்டு ரிஷிகேஷ், ஹரித்வார் போன்ற நகரங்களுக்குச் சென்றுவிட்டுத் தொடர்ந்து மூன்றாவது முறையாக மீண்டும் டெல்லியை வந்தடைந்துள்ளார்.

சிறுமி மூன்றாவது முறையாக டெல்லிக்கு வந்தபோதுதான் காவலர்கள் கண்ணில் சிக்கியுள்ளார். தன்னிடம் எந்த அடையாள அட்டையும் இல்லாததால் ஹோட்டல்களில் அவருக்கு அறை தரவில்லையாம். அதனால் இரவு நேரங்கள் முழுவதையும் பேருந்துப் பயணங்களில் கழித்துள்ளார். சிப்ஸ், பிஸ்கட், தண்ணீர் போன்றவற்றை மட்டுமே உண்டு, ஒருநாள்கூட குளிக்காமல் தொடர்ந்து பயணம் மட்டுமே செய்துள்ளார். ஜெய்ப்பூரில் பேருந்து டிக்கெட் புக் செய்வதற்காக தன் சகோதரர் மெயில் ஐ.டியைத் தெரிவித்துள்ளார். அதை ட்ராக் செய்து சிறுமி தொலைந்த அடுத்த 8 மணி நேரத்தில் நாங்கள் ஜெய்ப்பூர் சென்றோம். ஆனால் அதற்குள் சிறுமி வேறு ஒரு நகருக்குச் சென்றுவிட்டார் ” என பரிந்தர்ஜித் சிங் கூறியுள்ளார்.

சிறுமி
சிறுமி

தன் மகள் தொலைந்தது பற்றிப் பேசியுள்ள தந்தை, “அவள் எப்போதும் அவள் தாயின் செல்போனை வைத்துக்கொண்டு இருப்பாள். அதில் என்ன செய்துகொண்டிருக்கிறாள் என நாங்கள் கவனிக்கவில்லை. தற்போது என் மகள் திரும்பி வந்துவிட்டாள். அதுவே எங்களுக்கு போதும். என் அனுபவத்திலிருந்து ஒன்றை மட்டும் கூறுகிறேன். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள், பள்ளிப் படிப்பை முடித்த பிறகுதான் செல்போனை பயன்படுத்த வேண்டும் என்று கட்டளையிடுங்கள்” என்று பேசியுள்ளார்.