மத்திய அரசுக்கு ரூ.28,000 கோடி டிவிடெண்ட் வழங்க ரிசர்வ் வங்கி ஒப்புதல்! | RBI To Pay Rs. 28,000 Crore Interim Dividend To Government

வெளியிடப்பட்ட நேரம்: 21:00 (18/02/2019)

கடைசி தொடர்பு:21:00 (18/02/2019)

மத்திய அரசுக்கு ரூ.28,000 கோடி டிவிடெண்ட் வழங்க ரிசர்வ் வங்கி ஒப்புதல்!

பிப்ரவரி மாத தொடக்கத்தில் இடைக்கால பட்ஜெட்டைத் தாக்கல் செய்த மத்திய அரசு, 2 ஹெக்டேர் வரை நிலம் விவசாய நிலம் வைத்துள்ள விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6,000 நிதியுதவி உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டது. இதனால் பட்ஜெட்டில் நிதிப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதை ஈடு செய்யும் வகையில் நடப்பு நிதியாண்டில் ரூ.28,000 கோடியை இடைக்கால டிவிடெண்டாக ரிசர்வ் வங்கி வழங்க வேண்டும் என்று மத்திய அரசு கோரிக்கை விடுத்தது.

த்திய அரசு விடுத்த வேண்டுகோளை ஏற்று 28,000 கோடி ரூபாயை இடைக்கால டிவிடெண்டாக வழங்க ரிசர்வ் வங்கி ஒப்புக்கொண்டுள்ளது. 

ரிசர்வ் வங்கி

மத்திய அரசு, தனது நிதிப் பற்றாக்குறையைச் சமாளிக்க, ரிசர்வ் வங்கியின் உபரி நிதியின் பெரும் பகுதியைத் தனக்கு மாற்றுமாறு கோரி வந்தது. இதற்கு, அந்த வங்கியின் முந்தைய கவர்னரான உர்ஜித் படேல் உடன்படவில்லை. இருப்பினும் மத்திய அரசு தரப்பிலிருந்து வந்த அழுத்தத்தைத் தொடர்ந்து, உடல் நிலையைக் காரணம் காட்டி அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார். 

இதையடுத்து சக்திகந்த தாஸ் புதிய கவர்னராக நியமிக்கப்பட்டார். அவர், மத்திய அரசுடன் சற்று இணக்கமாகச் செயல்பட்டு வருகிறார். இந்த நிலையில், பிப்ரவரி மாத தொடக்கத்தில் இடைக்கால பட்ஜெட்டைத் தாக்கல் செய்த மத்திய அரசு, ஆண்டு வருவாய் 5 லட்சம் ரூபாய் வரை உள்ளவர்களுக்கு வரிச்சலுகை, பிரதமர் கிசான் சம்மன் நிதி திட்டத்தின் கீழ் 2 ஹெக்டேர் வரை நிலம் விவசாய நிலம் வைத்துள்ள விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6,000 நிதியுதவி உள்ளிட்ட அறிவிப்புகளை வெளியிட்டது. இதனால் பட்ஜெட்டில் நிதிப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

இதை ஈடு செய்யும் வகையில் நடப்பு நிதியாண்டில் ரூ.28,000 கோடியை இடைக்கால டிவிடெண்டாக  வழங்க வேண்டும் என்று மத்திய அரசு கோரிக்கை விடுத்தது. இந்தச் சூழ்நிலையில், மத்திய வங்கியின் மத்திய வாரியக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் நிதித்துறை அமைச்சர் அருண்ஜெட்லி பங்கேற்று, இடைக்கால பட்ஜெட்டின் முக்கிய அம்சங்களை விளக்கிப் பேசினார். 

இதைத் தொடர்ந்து, மத்திய அரசு விடுத்த வேண்டுகோளின்படி, 28,000 கோடி ரூபாயை இடைக்கால டிவிடெண்டாக வழங்க ரிசர்வ் வங்கி ஒப்புக்கொண்டுள்ளது. இதற்கான அறிவிப்பு, அந்த வங்கி வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மத்திய அரசுக்கு ஏற்கெனவே நடப்பு நிதியாண்டில் 40,000 கோடி ரூபாய் இடைக்கால டிவிடெண்டாக வழங்கப்பட்டுள்ளது. தற்போது வழங்கப்பட உள்ள 28,000 கோடி ரூபாயையும் சேர்த்தால், இந்தத் தொகை 68,000 கோடி ரூபாயைத் தொடும். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close