`புல்வாமாவுக்காக மொட்டை மாடியிலா கத்த வேண்டும்?'- சானியா மிர்சாவின் கருத்துக்கு எதிர்ப்பு! | Sania Mirza on Pulwama attacks: Why must I condemn an attack publicly?

வெளியிடப்பட்ட நேரம்: 15:15 (19/02/2019)

கடைசி தொடர்பு:15:15 (19/02/2019)

`புல்வாமாவுக்காக மொட்டை மாடியிலா கத்த வேண்டும்?'- சானியா மிர்சாவின் கருத்துக்கு எதிர்ப்பு!

புல்வாமா பயங்கரவாத தாக்குதல் குறித்து தாம் பகிரங்கமாக கண்டனம் தெரிவிக்க வேண்டிய அவசியமில்லை என்று பிரபல டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா கூறியுள்ள கருத்துக்கு எதிர்ப்பு எழுந்துள்ளது. 

சானியா மிர்சா

ஜம்மு - காஷ்மீர் மாநிலம், புல்வாமா மாவட்டத்தில் கடந்த 14-ம் தேதி மத்திய ரிசர்வ்  காவல் படையினர் வந்த வாகனங்களைக் குறி வைத்து, வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட காரை மோதச் செய்து ஜெய்ஷ் - இ - முகமது தீவிரவாத அமைப்பின் தீவிரவாதி தற்கொலைத் தாக்குதல் நடத்தினான். இதில் 40-க்கும் அதிகமான வீரர்கள் கொல்லப்பட்டனர். 

இந்தத் தாக்குதலுக்கு அரசியல் தலைவர்கள் மட்டுமல்லாது பல்வேறு பிரபலங்கள் தரப்பிலிருந்தும் கடும் கண்டனங்கள் எழுந்த நிலையில், இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்திருந்த சானியா மிர்சா, தாக்குதல் நடந்த பிப்ரவரி 14-ம் தேதியை இந்தியாவுக்குக் கறுப்பு தினம் என்றும், தாக்குதலில் உயிர் நீத்த சி.ஆர்.பி.எஃப் வீரர்களை உண்மையான ஹீரோக்கள் என்றும் கூறியிருந்ததோடு, மக்கள் மேலும் வெறுப்பைப் பரப்புவதற்குப் பதில் அமைதிக்காகப் பிரார்த்தனை செய்ய வேண்டும் எனக் கேட்டுக்கொண்டிருந்தார். 

இந்த நிலையில், தாக்குதலுக்கு ஏன் சானியா கண்டனம் தெரிவிக்கவில்லை என ட்விட்டர்வாசிகள் ஏராளமானோர் கேள்வி எழுப்பியிருந்தனர். இது தொடர்பாக ட்விட்டரில் பரபரப்பான விவாதமும் நடைபெற்றது. 

இதைத் தொடர்ந்து இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்த சானியா, ``பிரபலங்கள் என்றாலே தங்கள் தேசப்பற்றைக் காட்ட ட்விட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் தாக்குதலைக் கண்டித்து பதிவு செய்ய வேண்டும் என விரும்புபவர்களுக்கே இந்தப் பதிவு. உங்களுடைய வெறுப்பு மற்றும் கோபத்தை வேறெங்கும் காட்ட வாய்ப்பு கிடைக்காததால், எங்களைப் போன்ற பிரபலங்கள் மீது காட்டுகிறீர்கள். தீவிரவாதத் தாக்குதல்களை பொதுவெளியில் நான் கண்டிக்க வேண்டிய அவசியம் இல்லை. மொட்டை மாடியில் வந்து நின்று கத்த வேண்டிய அவசியமும் இல்லை.

சானியாவின் ட்வீட்

நான் என் நாட்டுக்காக விளையாடுகிறேன். என் நாட்டுக்காக வியர்வை சிந்துகிறேன். அவ்வளவுதான் எனது பற்றைக் காட்ட முடியும். தாக்குதலில் உயிரிழந்த சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு ஆதரவாக நான் நிற்கிறேன். இந்த நாளை மறக்கவோ மன்னிக்கவோ முடியாது. தற்போது அமைதிக்காக நான் பிரார்த்தனை செய்கிறேன். நீங்களும் மேலும் வெறுப்பைப் பரப்பாமல் அமைதிக்காகப் பிரார்த்தனை செய்யுங்கள். கோபத்தினால் ஏதாவது ஆக்கபூர்வமான பயன் ஏற்பட்டால் அதை நல்லது எனச் சொல்லலாம். மற்றவர்களைச் சிக்க வைப்பதன் மூலம் நீங்கள் சாதிக்கப்போவது ஒன்றுமே இல்லை. இந்த உலகில் பயங்கரவாதத்துக்கு இடமில்லை; ஒருபோதும் இருக்கப்போவதுமில்லை" என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில், சானியாவின் இந்தக் கருத்து வெளியான பின்னர், குறிப்பாக  புல்வாமா தாக்குதல் குறித்து தாம் பகிரங்கமாகக் கண்டனம் தெரிவிக்க வேண்டிய அவசியமில்லை என்ற அவரது கருத்தைக் குறிப்பிட்டு ட்விட்டரில் பலர் அவருக்குக் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். 

`` பிரபலம் என்றால் அப்படித்தான்… எதற்குமே எதிர்வினை ஆற்றாமல் உட்கார்ந்து இருந்தால், கேள்வி கேட்கத்தான் செய்வார்கள்" என்றும், ``உங்கள் ட்வீட்டில் தப்பித்தவறிக் கூட பாகிஸ்தான் என்ற பெயரைக் கூட உபயோகிக்காதது ஏன்" என்றும் கேட்டு பல பதிவுகள் போடப்பட்டுள்ளன. 

சானியாவுக்கு எதிர்ப்பு

இதனிடையே,  சானியா மிர்சாவை தெலங்கானா மாநில விளம்பர தூதர் பதவியில் இருந்து முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் உடனடியாக  நீக்க வேண்டும் என்றும், பாகிஸ்தான் நாட்டின் மருமகள் தெலங்கானா மாநில விளம்பர தூதராக இருக்கக்கூடாது என்றும் சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிடுவதில் பிரபலமான பா.ஜனதா எம்.எல்.ஏ ராஜா சிங் வலியுறுத்தியுள்ளார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close