`4 வாரத்தில் ரூ.453 கோடி செலுத்தணும்!’ - அனில் அம்பானியைக் குற்றவாளியாக அறிவித்தது உச்ச நீதிமன்றம் | Anil Ambani and 2 directors have to pay Rs 453 Cr to Ericsson India within 4 weeks

வெளியிடப்பட்ட நேரம்: 11:15 (20/02/2019)

கடைசி தொடர்பு:11:59 (20/02/2019)

`4 வாரத்தில் ரூ.453 கோடி செலுத்தணும்!’ - அனில் அம்பானியைக் குற்றவாளியாக அறிவித்தது உச்ச நீதிமன்றம்

ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனம் நடத்தி வந்த அனில் அம்பானி அந்நிறுவனம் நஷ்டமானதால் ரூ.45,000 கோடி நஷ்டமடைந்தார். பிறகு, சில அலைவரிசைகளை அனில் அம்பானியின் சகோதரர் முகேஷ் அம்பானி 25,000 கோடி ரூபாய்க்கு வாங்கி ஜியோ சேவையை அறிமுகப்படுத்தினார்.

அனில் அம்பானி

இதில் எரிக்ஸான் நிறுவனத்துடன் இணைந்து செயல்பட்ட அனில் அம்பானி அந்த நிறுவனத்துக்கு ரூ.1,600 கோடி தரவேண்டியுள்ளது. நீண்ட காலங்களாக இந்தத் தொகையை திருப்பித் தராத அனில் அம்பானியிடம் இருந்து அதை வசூல் செய்ய உச்ச நீதிமன்றத்தை நாடியது எரிக்ஸான் நிறுவனம். பிறகு நீதிமன்றம் மூலம் தீர்வுகாணப்பட்டு முன்னதாக ரூ.550 கோடி ரூபாய் வழங்க வேண்டும் என ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. 

இந்த நிலையில், இதுதொடர்பாக உச்ச நீதிமன்றம் இரு முறை தீர்ப்பு வழங்கியும் அதை மதிக்காமல் இருந்த அனில் அம்பானி மற்றும் அவரது நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு தொடர வேண்டும் என்றும் அனில் அம்பானி நாட்டை விட்டு வெளியேறத் தடை விதித்து அவர் பணம் செலுத்தும் வரை சிவில் நீதிமன்றக் காவலில் வைக்க வேண்டும் என எரிக்ஸான் நிறுவனம் கடந்த 4-ம் தேதி மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

எரிக்‌ஸான் நிறுவனம் தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இதை விசாரித்த நீதிபதிகள், அனில் அம்பானிக்கு கடும் எச்சரிக்கை விடுத்து அவருடன் ரிலையன்ஸ் டெலிகாம் தலைவர் சதிஷ் சேத், ரிலையன்ஸ் இன்ஃபிர்டெல் தலைவர் சாயா விரானி ஆகிய மூவரையும் குற்றவாளிகளாக அறிவித்தது நீதிமன்றம். இன்னும் நான்கு வாரங்களுக்குள் எரிக்‌ஸான் நிறுவனத்துக்கு ரூ.453 கோடி செலுத்த வேண்டும் என்றும் அதைச் செலுத்த தவறினால் மூன்று மாதங்கள் சிறைத் தண்டனை மற்றும் தலா ஒரு கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்படும் எனவும் உத்தரவிட்டனர்.


[X] Close

[X] Close