`வங்கி உயரதிகாரிகளுக்கு இனி இஷ்டத்துக்குச் சம்பளம், சலுகைகள் கிடையாது!’ - ரிசர்வ் வங்கி | RBI Says, banks should take back large payouts from CEOs

வெளியிடப்பட்ட நேரம்: 13:33 (20/02/2019)

கடைசி தொடர்பு:13:33 (20/02/2019)

`வங்கி உயரதிகாரிகளுக்கு இனி இஷ்டத்துக்குச் சம்பளம், சலுகைகள் கிடையாது!’ - ரிசர்வ் வங்கி

`வங்கி உயரதிகாரிகளுக்கு இனி இஷ்டத்துக்குச் சம்பளம், சலுகைகள் கிடையாது!’ - ரிசர்வ் வங்கி

டன் மோசடிக்குத் துணைபோகும் வங்கி அதிகாரிகள், இனிமேல் தாங்கள் பெற்ற போனஸ், ஊக்கத்தொகை, பங்குகள் போன்ற சலுகைளுடன் வேலையைவிட்டுச் செல்ல முடியாத வகையில் ரிசர்வ் வங்கி புதிய விதிமுறைகளை அமல்படுத்த உள்ளது. அத்துடன் இனிமேல் இஷ்டத்துக்குச் சம்பளம், சலுகைகள் போன்றவற்றையும் பெற முடியாத வகையில் அளவுகோல் நிர்ணயிக்கப்பட உள்ளது.

கடன் மோசடி உள்ளிட்ட பல்வேறு நிதி முறைகேடுகளால் அதிகரித்த வாராக்கடனால், கடந்த 2018-ம் ஆண்டு வங்கித்துறை கடும் பிரச்னைகளைச் சந்தித்தது. பொதுத்துறை வங்கிகள் ஒருபக்கம் வாராக்கடன் பிரச்னையால் தவித்தது என்றால், இன்னொரு பக்கம் சிறப்பான நிர்வாகம் நடப்பதாகச் சொல்லப்பட்ட தனியார் வங்கிகளும் இதே பிரச்னையை எதிர்கொண்டன. 

இதில் 21 பொதுத்துறை வங்கிகள் 2017-18-ம் நிதியாண்டில் வாராக்கடன், மோசடி உள்ளிட்டவை மூலம் 25,775 கோடி ரூபாய் இழப்பைச் சந்தித்ததாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதில் நீரவ் மோடியின் கடன் மோசடியால் அதிகம் பாதிப்புக்குள்ளானது பஞ்சாப் நேஷனல் வங்கிதான். இந்த வங்கிக்கு, மேற்கூறிய காலகட்டத்தில் 6,461.13 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது.

ரிசர்வ் வங்கி

பொதுத்துறை வங்கிகளின் நிலை இதுவென்றால், தனியார் வங்கிகளும் இழப்பைச் சந்தித்ததோடு மட்டுமல்லாது முறைகேடு புகார்களுக்கும் உள்ளானது. குறிப்பாக, பணமதிப்பிழப்பு நடவடிக்கையின்போது பல்வேறு முன்னணி தனியார் வங்கிகள் பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றுவதில் பல மோசடிகளை அரங்கேற்றியதாகவும், சாமானிய மக்கள் ஓரிரண்டு 2,000 ரூபாய் தாளுக்கு அல்லாடியபோது பல கோடி ரூபாயைத் தொழிலதிபர்களுக்கும் கறுப்புப் பண முதலைகளுக்கும் கமிஷன் வாங்கிக்கொண்டு கொடுத்ததாகவும் பல்வேறு தனியார் வங்கிகளின் அதிகாரிகள் மீது புகார்கள் எழுந்தன.

இமேஜைக் காலி செய்த சந்தா கோச்சர்

இந்த நிலையில், ஐ.சி.ஐ.சி.ஐ பேங்க் மீதான கடன் மோசடி புகார், தனியார் வங்கிகள் மற்றும் அதன் நிர்வாக அதிகாரிகள் மீதான இமேஜைக் காலி செய்தது. இதனால், ஐசிஐசிஐ பங்குகளின் விலை சரிந்து, அதன் முதலீட்டாளர்களுக்கு இழப்பை ஏற்படுத்தியது. 20 வங்கிகளில் சுமார் 40,000 கோடி ரூபாய் கடன் வாங்கி திவாலாகும் நிலைக்குச் சென்ற வீடியோகான் நிறுவனத்துக்கு, ஐசிஐசிஐ கொடுத்த 3,250 கோடி ரூபாய் கடன் தொடர்பாக எழுந்த சர்ச்சை, சிபிஐ வழக்கு பதிவு செய்யும் அளவுக்குச் சென்றது. கடைசியில் இந்த விவகாரத்தில் ஐசிஐசிஐ தலைமைச் செயல் அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குநர் சந்தா கோச்சரின் பதவி பறிபோனது. அத்துடன், முதன்மைச் செயல் அதிகாரியாகப் பதவியேற்ற ஏப்ரல் 2009-ம் ஆண்டு முதல் மார்ச் 2018-ம் ஆண்டு வரை சந்தாவுக்கு அளித்த ஊக்கத்தொகை, மருத்துவ உதவி, பங்குகள் உள்ளிட்டவைத்  திரும்பப் பெறப்படும் என்றும் அந்த வங்கி அறிவித்திருந்தது. 

இதுபோன்று வங்கி அதிகாரிகளின் உடந்தையோடு நடந்தேறும் கடன் மோசடிகள் மிகுந்த கவலையளிப்பதாக உள்ளதாகவும், இதனால் வங்கிகளுக்கு மிகப்பெரிய பொருளாதார இழப்பு ஏற்படுவது மட்டுமல்லாது, அவற்றின் பங்குகளை வைத்திருக்கும் முதலீட்டாளர்களும் பாதிக்கப்படுகின்றனர் என்றும் பொருளாதார நிபுணர்கள் ரிசர்வ் வங்கியை எச்சரித்தனர். 

இதையடுத்து, இதுபோன்று மோசடிகளில் ஈடுபடும் வங்கி உயரதிகாரிகள், தாங்கள் பணிக்காலத்தில் உயரதிகாரி என்ற அடிப்படையில் பெற்ற கோடிக்கணக்கான ரூபாய் சலுகைகள், போனஸ் மற்றும் பங்குகளுடன் அத்தனை எளிதில் பணியிலிருந்து சென்றுவிடாதபடிக்கும் வங்கிகளின் வரவு செலவுக்கும் ஏற்ப மட்டுமே மேற்கூறிய சலுகைகளைப் பெறும் வகையிலும், புதிய விதிமுறைகளை அமல்படுத்த ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது. 

சாந்தா கொச்சார்

அடேங்கப்பா சம்பளம்... 

வங்கி உயரதிகாரிகளின் சம்பளம் எப்படி இருக்கிறது என்பதைச் சந்தா கோச்சரின் சம்பளத்திலிருந்தே தெரிந்துகொள்ளலாம். இவரின் சம்பளம் 2016-ம் நிதியாண்டிலிருந்து 2017-ம் நிதியாண்டில் 64% உயர்ந்திருக்கிறது. ஒவ்வொரு மாதமும் மாத சம்பளமாக 65 லட்ச ரூபாயைப் பெற்றிருக்கிறார். அதாவது, ஒவ்வொரு நாளும் 2.18 லட்ச ரூபாயைச் சம்பளமாகப் பெற்றிருக்கிறார். அந்த நிதியாண்டில் இவருக்கு நிறுவனத்தின் சம்பளமாக 7.85 கோடி ரூபாயும் போனஸாக 2.2 கோடி ரூபாயும் வழங்கப்பட்டிருக்கிறது. இதைத் தவிர, பணியாளருக்குப் பங்கு ஒதுக்கீடு செய்தல் முறையில் 13.75 லட்ச ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

2016-ம் நிதியாண்டின் அதிகம் சம்பளம் வாங்குபவர்களின் பட்டியலில், முதல் இடத்தில் ஹெச்டிஎஃப்சி வங்கியின் தலைவர் ஆதித்யா புரி-யும், இரண்டாவது இடத்தில் ஆக்சிஸ் வங்கியின் தலைமைப் பொறுப்பு வகித்த ஷிக்கா சர்மாவும், மூன்றாவது இடத்தில் ஐசிஐசிஐ வங்கியில் தலைமை நிர்வாகியாக இருந்த கோச்சரும் இருந்திருக்கிறார்கள். 2016-ம் நிதி ஆண்டில் ஆதித்யா புரி 9.7 கோடி ரூபாயும், ஆக்சிஸ் வங்கி ஷிக்கா சர்மா 5.5 கோடி ரூபாயும், ஐசிஐசிஐ கோச்சார் 4.79 கோடி ரூபாயைச் சம்பளமாகவும் பெற்றிருக்கிறார்கள். 2017-ம் நிதி ஆண்டில் செயல்பாடுகள் மேம்பட்டதால் மூத்த நிர்வாக குழுவில் இருப்பவர்களுக்கு மட்டும் போனஸ் தொகையாக 7.55 கோடி ரூபாய் வழங்கப்பட்டது. முக்கியமான நிர்வாக அதிகாரிகளின் ஊதிய உயர்வு 12-15% ஆக உயர்த்தப்பட்டது. 

2017-ம் நிதி ஆண்டு ஊதியமாக ஐசிஐசிஐ வங்கியின் நிர்வாக இயக்குநர் என்.எஸ்.கண்ணன் 5.39 கோடி ரூபாய் பெற்றிருக்கிறார். இவர் 2016-ம் நிதி ஆண்டில் 3.32 கோடி ரூபாயைப் பெற்றிருக்கிறார். இவருக்கு 2016-ம் நிதி ஆண்டிலிருந்து 2017-ம் நிதி ஆண்டில் மட்டும் சம்பளம் 62% அளவுக்கு உயர்ந்திருக்கிறது. 

இனி திறமைதான் அளவுகோல்

இந்த நிலையில், ரிசர்வ் வங்கி தற்போது கொண்டு வரப்பட உள்ள விதிமுறைகளால் இனிமேல், இதுபோன்ற சம்பளங்களை உயரதிகாரிகள் பெற முடியாது. குறிப்பிட்ட ஒரு வங்கியின் ஆண்டு வரவு செலவு, இத்தனை ஆயிரம் கோடிக்குள் இருந்தால் அதற்கேற்ப மட்டுமே அந்த வங்கியின் சி.இ.ஓ எனப்படும் தலைமைச் செயல் அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குநர் போன்ற பதவிகளை வகிப்பவர்களுக்கான சம்பளம், போனஸ், சலுகைகள் உள்ளிட்டவை நிர்ணயிக்கப்படும். மாறாக, அதிகாரம் கையில் இருக்கிறது என்பதற்காக நிர்வாக இயக்குநர்கள் குழுவைச் சம்மதிக்க வைத்து, இஷ்டத்துக்கு நிர்ணயித்துக்கொள்ள முடியாது. மேலும், உயர் பதவி வகிப்பவர்களின் பதவிக் காலத்தில் எவ்வளவு தொகை வாராக்கடனாகப் போனது அல்லது நிதி தவறு நடந்தது, வங்கி ஈட்டிய லாப விகிதம், நிர்வாகத் திறன் போன்றவையும் சம்பளம் உள்ளிட்டவற்றுக்கான அளவுகோல்களாகக் கடைப்பிடிக்கப்படும். 

ரிசர்வ் வங்கி வகுக்க உள்ள இந்த அளவுகோல்களின் அடிப்படையிலேயே, ஒவ்வொரு வங்கியின் நிர்வாக இயக்குநர்கள் குழுவும் சி.இ.ஓ போன்ற மூத்த உயரதிகாரிகளுக்கான சம்பளம் உள்ளிட்டவற்றைத் தீர்மானிக்க வேண்டும். இவற்றைக் கடைப்பிடித்தாலே வங்கியின் செலவுப் பட்டியலில் ஆண்டுக்குப் பல கோடி ரூபாய் மிச்சமாகும் என வங்கித்துறை நிபுணர்கள் கூறுகின்றனர். 

திறமை அடிப்படையில் சம்பளம்

மேலும், இத்தகைய விதிமுறைகளுக்குப் பின்னரும் குறிப்பிட்ட அளவுக்கு மேற்பட்ட வாராக்கடன் மற்றும் நிதி மோசடி போன்றவை அரங்கேறினால், சம்பந்தப்பட்ட வங்கியின் சி.இ.ஓ அல்லது நிர்வாக இயக்குநரை அதற்குப் பொறுப்புக்குள்ளாகும் வகையில், பணிக்காலத்தில் உயரதிகாரி என்ற அடிப்படையில் பெற்ற கோடிக்கணக்கான ரூபாய் சலுகைகள், போனஸ் மற்றும் பங்குகளுடன் பணியிலிருந்து முன்கூட்டியே ராஜினாமா செய்துவிட்டுச் சென்றுவிட முடியாது. பெற்ற சலுகைகளைத் திருப்பி அளிப்பதோடு, விசாரணையையும் எதிர்கொள்ள வேண்டும். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close