புல்வாமா தாக்குதல் எதிரொலி! - விமானத்தில் செல்ல ராணுவப் படையினருக்கு அனுமதி | paramilitary forces can now take free commercial flights to Kashmir Valley

வெளியிடப்பட்ட நேரம்: 18:43 (21/02/2019)

கடைசி தொடர்பு:18:43 (21/02/2019)

புல்வாமா தாக்குதல் எதிரொலி! - விமானத்தில் செல்ல ராணுவப் படையினருக்கு அனுமதி

காஷ்மீர் மாநிலம் ஜம்மு-வில் இருந்து 78 வாகனங்களில் சுமார் 2,500-க்கும் மேற்பட்ட சிஆர்பிஎஃப் வீரர்கள், கடந்த 14-ம் தேதி ஸ்ரீநகர் நோக்கிச் சென்றுகொண்டிருந்தனர். அவர்கள், புல்வாமா மாவட்டம் அவாந்திபோரா என்ற பகுதிக்கு வந்தபோது, 350 கிலோ வெடி பொருள்களை ஏற்றிக்கொண்டு எதிரே வந்த கார், சிஆர்பிஎஃப் வீரர்கள் வந்த பேருந்தின்மீது மோதியது. இந்தத் தாக்குதலில்,  44 வீரர்கள் உயிரிழந்தனர்.

புல்வாமா தாக்குதல்

இந்தத் தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்ட ஜெயிஷ் இ முகமது அமைப்பைச் சேர்ந்த இரண்டு தீவிரவாதிகளை இந்திய ராணுவப் படையினர் சுட்டுக் கொன்றனர். புல்வாமா தாக்குதலுக்கு முறையான முன் நடவடிக்கை இல்லாதது மற்றும் அதிகாரிகளின் அலட்சியமே காரணம் எனப் பலரும் விமர்சித்துவருகின்றனர்.

இந்நிலையில், இதுபோன்ற சாலை வழித் தாக்குதலைத் தடுக்கும் வகையில், 'சிஆர்பிஎஃப் உள்பட அனைத்து ராணுவ அமைப்புகளும் விமானங்களில் பயணம்செய்யலாம்' என மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘ டெல்லி-ஸ்ரீநகர், ஸ்ரீநகர்- டெல்லி. அதேபோல, ஜம்மு- ஸ்ரீநகர், ஸ்ரீநகர்-ஜம்மு-வுக்கு செல்ல வேண்டும் என்றால், அனைத்து மத்திய ஆயுத காவல் படையினரும்  விமானத்தில் பயணிக்கலாம். 

விடுமுறைக்காக சொந்த ஊர்களுக்குச் செல்ல வேண்டுமெனில், டெல்லி வரை விமானத்தில் செல்லலாம் என்றும், அதேபோல் விடுமுறை முடித்து மீண்டும் பணியில் சேர வரும்போது, டெல்லியில் இருந்து ஸ்ரீநகருக்கு விமானத்தில் பயணம் செய்யலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. புல்வாமாவில் 44 வீரர்கள் உயிரிழந்ததன் எதிரொலியாக, மத்திய அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

மத்திய அரசின் இந்த முடிவுமூலம், சுமார் 7.8  லட்சம் ராணுவப் படையினர் பயனடைவார்கள். பணியில் இருக்கும்போதும் விடுமுறையிலும் இந்தச் சேவையை அவர்கள் பயன்படுத்திக்கொள்ளலாம். மேலும், கடந்த 14-ம் தேதி புல்வாமா தாக்குதலில் பாதிக்கப்பட்ட ஜவான்கள் மற்றும் துணை அதிகாரிகள், தாங்களே விமான டிக்கெட் புக் செய்து, அதற்கான தொகையைத் தங்கள் பகுதியில் உள்ள ராணுவ அமைப்பில் பெற்றுக்கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


[X] Close

[X] Close