`அவரால் மாட்டுக்கறியைத்தான் பிடிக்க முடியும், ஆர்.டி.எக்ஸ் அல்ல!'- மோடியை விமர்சிக்கும் காங்கிரஸ் | PM Narendra Modi can trace 3 kg of beef but not 350 kg of RDX’

வெளியிடப்பட்ட நேரம்: 11:00 (22/02/2019)

கடைசி தொடர்பு:11:00 (22/02/2019)

`அவரால் மாட்டுக்கறியைத்தான் பிடிக்க முடியும், ஆர்.டி.எக்ஸ் அல்ல!'- மோடியை விமர்சிக்கும் காங்கிரஸ்

`பிரதமர் நரேந்திர மோடியால் 3 கிலோ மாட்டுக்கறியைத்தான் தேடிp பிடிக்க முடியுமே தவிர, அவரால் 350 கிலோ ஆர்.டி.எக்ஸ் பாமை ஒருபோதும் தேடிக்கண்டு பிடிக்க முடியாது '' என்று காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.

காங்கிரஸ்

இந்த வருடத்தின் தொடக்கத்திலேயே நடந்த மிகப்பெரும் தாக்குதலாக வரலாற்றில் கறுப்பு நாளாக இடம் பிடித்துள்ளது கடந்த 14-ம் தேதி நடந்த தாக்குதல். காஷ்மீர் மாநிலம், புல்வாமா மாவட்டத்தில் நடந்த தீவிரவாதிகள் தற்கொலைப்படை தாக்குதலில் இந்திய சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் 44 பேர் வீர மரணமடைந்தனர். இந்தத் தாக்குதல் இந்தியா உட்பட உலக நாடுகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. தாக்குதல் நடைபெறுவதற்கு முன்னதாக உளவுத்துறையினர் எச்சரிக்கை விடுத்தும் தாக்குதல் தொடர்பாக எந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

மோடி

இதற்கு இந்திய அளவில் பெரும் கண்டனங்களும் எதிர்ப்புகளும் கிளம்பின. தாக்குதல் தொடர்பாக காங்கிரஸ் கட்சி பல்வேறு சந்தேகங்களையும் கேள்விகளையும் எழுப்பி வருகிறது. காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் நந்தீப் சுர்ஜோவாலா, ‘புல்வாமா தாக்குதல் நடைபெற்ற அன்று பிற்பகல் ஒட்டுமொத்த இந்தியாவும் தாக்குதலில் இறந்தவர்களுக்காகக் கண்ணீர் சிந்தியது. ஆனால், பிரதமர் நரேந்திர மோடியோ ஜிம் கார்பெட் பூங்காவில் மாலைவரை பிஸியாக ஷூட்டிங் செய்துகொண்டிருந்தார். இவரைப் போன்று உலகில் வேறு எந்தப் பிரதமரும் இருக்க மாட்டார். இந்த விஷயம் பற்றி பேச எனக்கு வார்த்தைகளே வரவில்லை’ எனச் சாடினார்.

மேலும், `உள்ளூரைச் சேர்ந்த ஒருவருக்கு எப்படி ஆர்.டி.எக்ஸ் வெடி மருந்துகள் கிடைத்தது என அரசு விளக்க வேண்டும். 48 மணி நேரத்துக்கு முன்னர் ஜெய்ஷ்-இ-முகம்மது வெளியிட்ட ஒரு வீடியோ வெளியிடப்படாமல் புறக்கணிக்கப்பட்டதற்கு என்ன காரணம்' என்று கேள்வி எழுப்பியுள்ளார். இந்த நிலையில், காங்கிரஸைச் சேர்ந்த ஹாரூன் யூசுஃப், ``பிரதமர் நரேந்திர மோடியால் 3 கிலோ மாட்டுக்கறியைத்தான் தேடிப் பிடிக்க முடியுமே தவிர, அவரால் 350 கிலோ ஆர்.டி.எக்ஸ் பாமை ஒருபோதும் தேடிக் கண்டுபிடிக்க முடியாது'' என்று குற்றம் சாட்டியுள்ளார்.


[X] Close

[X] Close