`அன்று `மிஸ் இந்தியா' அழகி; இன்று டீச்சர்' - சர்வதேச விருதுப் பட்டியலில் இடம்பிடித்த நடிகை! | Actor Swaroop Rawal among top 10 finalists for Global Teacher Prize 2019

வெளியிடப்பட்ட நேரம்: 14:09 (22/02/2019)

கடைசி தொடர்பு:14:25 (22/02/2019)

`அன்று `மிஸ் இந்தியா' அழகி; இன்று டீச்சர்' - சர்வதேச விருதுப் பட்டியலில் இடம்பிடித்த நடிகை!

சர்வதேச ஆசிரியர் விருதுப் பட்டியலில் இந்தியாவைச் சேர்ந்த ஸ்வரூப் ராவல் முதல் பத்து இடங்களில் இடம்பெற்றுள்ளார். இந்த ஸ்வரூப் ராவல் ஆசிரியர் என்பதைத் தாண்டி நடிகையும்கூட. 

ஸ்வரூப் ராவல்

ஆண்டுதோறும் சர்வதேச அளவில் சிறப்பாக செயல்படும் ஆசிரியர்களைக் கௌரவப்படுத்தி வருகிறது பிரிட்டனைச் சேர்ந்த வர்க்கி பவுண்டேஷன் அமைப்பு. இந்த அமைப்பின் விருது பெறுபவர்களுக்கு ஒரு மில்லியன் டாலர் பரிசுத்தொகையாக வழங்கப்பட்டு வருகின்றது. இதற்கிடையே இந்த ஆண்டுக்கான சிறந்த ஆசிரியர் விருதுக்கு 179 நாடுகளில் இருந்து பத்தாயிரம் பேர் வரை பரிந்துரைக்கப்பட்டது. இதில் இருந்து தற்போது 10 பேர் கொண்ட இறுதிப்பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த இறுதிப்பட்டியலில் இந்தியாவைச் சேர்ந்த ஆசிரியர் ஸ்வரூப் ராவல் இடம்பிடித்துள்ளார். இந்தியா முழுவதும் பயணம் செய்து மாணவர்களுக்கான கல்வி ஊக்குவித்ததில் ஸ்வரூப் ராவலுக்கு பெரும் பங்கு உண்டு. இவர் ஆசிரியர் என்ற அறியப்படுவதைத் தாண்டி இவருக்கு இன்னொரு முகமும் இருக்கிறது. இவர் ஒரு முன்னாள் நடிகையும்கூட. ஆம், ஸ்வரூப் ராவல் 1979-ம் ஆண்டு நடந்த `மிஸ் இந்தியா' போட்டியில் கலந்துகொண்டு பட்டம் வென்றவர். அதுமட்டுமில்லாமல் சில இந்திப் படங்களிலும், சீரியல்களிலும், விளம்பரங்களிலும் நடித்துள்ளார். 

ஸ்வரூப்

நடிகர் கமல்ஹாசன் இந்தியில் நடித்த `கரீஷ்மா' படத்தில் இவர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். சமீபத்தில் இந்தியில் வெளியான `உரி' படத்திலும் இவர் நடித்துள்ளார். முன்னதாக இவர் பிரபல நடிகரும், பா.ஜ.க எம்.பி-யுமான பரேஷ் ராவலை திருமணம் செய்துகொண்டார். திருமணத்துக்குப் பின் படங்களில் நடிப்பதைக் குறைத்துக்கொண்டு கல்விப் பணிகளில் கவனம் செலுத்த ஆரம்பித்தார். பி.ஹெச்டி முடித்துள்ள இவர் இதுவரை இந்தியாவின் பல மாநிலங்களுக்கும் சென்று கல்விப் பணிகளை மேற்கொண்டுள்ளார். குறிப்பாக வடமாநிலங்களில் பின்தங்கிய இடங்களில் கல்வியைக் கொண்டு சேர்த்ததில் இவரின் பங்களிப்பு அதிகம். இவரின் பணியை அறிந்த குஜராத் மாநில அரசு சமீபத்தில் தங்களது மாநில கல்வித் திட்ட அதிகாரியாக ஸ்வரூப்பை நியமித்தது. 

ஸ்வரூப்

இந்த நிலையில்தான் இவர் சர்வேதேச ஆசிரியர் விருதுக்கான இறுதிப்பட்டியலில் இவர் பிடித்துள்ளார். இதுகுறித்து ஸ்வரூப் கூறும்போது, ``குழந்தைகளுக்கு வாழ்க்கைக்கான கல்வி முறையைக் கற்றுத்தர வேண்டும். எல்லா வயதினருக்கும், குழந்தைகளுக்கும் வாழ்க்கைக்கான கல்வி அவசியமாகிறது. அனைத்து மாணவர்களுக்கு இதைக் கற்றுக்கொடுக்க வேண்டும் என்பதே என் ஆசையாக இருக்கிறது. உலக அளவில் கல்வி என்பது சவாலாகவே இருக்கிறது. தற்போதுள்ள நிலையில் கல்வியை மேம்படுத்த எடுக்கப்படும் அனைத்து முயற்சிகளும் பாராட்டப்பட வேண்டும். என்னுடன் பட்டியலில் இடம் பெற்றுள்ளவர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகள்" என்று கூறியுள்ளார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close