`இந்தியர்களுக்குச் சமர்ப்பிக்கிறேன்!’ பிரதமர் மோடிக்கு தென்கொரியாவின் `சியோல் அமைதி' விருது | PM Modi presented by Seoul peace prize

வெளியிடப்பட்ட நேரம்: 17:20 (22/02/2019)

கடைசி தொடர்பு:17:20 (22/02/2019)

`இந்தியர்களுக்குச் சமர்ப்பிக்கிறேன்!’ பிரதமர் மோடிக்கு தென்கொரியாவின் `சியோல் அமைதி' விருது

பிரதமர் மோடிக்கு தென்கொரியாவின் உயரிய விருதுகளில் ஒன்றான சியோல் அமைதி விருது வழங்கப்பட்டது. 

பிரதமர் மோடி

இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக பிரதமர் மோடி தென்கொரியாவுக்குச் சென்றிருக்கிறார். அங்கு தென்கொரிய அதிபர் மூன் ஜே இன் -ஐச் சந்தித்துப் பேசிய பிரதமர் மோடி, இருநாடுகள் இடையே பொருளாதார உடன்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தினார். ஆலோசனைக்குப் பின்னர் இருநாடுகளின் தலைவர்கள் முன்னிலையில், 6 ஒப்பந்தங்கள் கையொப்பமாகின. அதன்பின்னர் பேசிய பிரதமர் மோடி, `தென்கொரியா இந்தியாவின் முக்கியமான நட்பு நாடு’ என்று குறிப்பிட்டார்.

தென்கொரிய அதிபருடன் பேச்சுவார்த்தை

சுற்றுப் பயணத்தின் ஒருபகுதியாக யோன்சி பல்கலைக்கழகத்திடம் மகாத்மா காந்தியின் மார்பளவுச் சிலையைத் திறந்துவைத்தார். இந்தநிகழ்வில் தென்கொரிய அதிபர் மூன் ஜே இன், ஐக்கிய நாடுகள் அவையின் முன்னாள் செயலாளர் பான் கி மூன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். 

காந்தி சிலை திறப்பு விழா

தென்கொரியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் இந்தியப் பிரதமர் மோடிக்கு அந்நாட்டு உயரிய விருதுகளில் ஒன்றான சியோல் அமைதி விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டது. பொருளாதார வளர்ச்சி மற்றும் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துதல் ஆகியவை மூலம் உலக அமைதிக்கும், நல்லிணக்கத்துக்கும் வித்திட்டதாக பிரதமர் மோடிக்கு இந்த விருது வழங்கப்பட்டது.

விருது விழாவில் ஏற்புரை வழங்கிய பிரதமர் மோடி, `இந்த விருது எனக்கு மட்டும் சொந்தமல்ல. 130 கோடி மக்களின் உழைப்பால் கடந்த 5 ஆண்டுகள் இந்தியா பெற்ற வளர்ச்சிக்கு உரியது’ என்றார். விருதை இந்திய மக்களுக்கு அர்ப்பணிப்பதாகக் குறிப்பிட்ட மோடி, தீவிரவாதம் உலக அமைதிக்குக் கடும் அச்சுறுத்தலாக விளங்குவதாகக் குறிப்பிட்டார். கொரியாவைப் போலவே எல்லைதாண்டிய தீவிரவாதத்துக்கு இந்தியாவும் இலக்காவதாகக் குறிப்பிட்ட அவர், அமைதியை நோக்கி எடுத்து வைக்கும் ஒவ்வொரு முயற்சியும் எல்லைதாண்டிய பயங்கரவாதத்தால் முறியடிக்கப்படுகிறது என்றும் வேதனை தெரிவித்தார். 

ஏற்புரை வழங்கும் மோடி

எல்லைதாண்டிய பயங்கரவாதத்தால் இந்தியா கடந்த 40 ஆண்டுகளாகப் பாதிக்கப்பட்டு வருவதாகவும், இன்றைய சூழலில் எல்லைகளைக் கடந்து உலகின் அனைத்து நாடுகளும் இந்தப் பிரச்னையைச் சந்தித்து வருவதாகவும் குறிப்பிட்டார். பிரதமர் மோடி, சியோல் அமைதி விருது பரிசுத் தொகையான 2,00,000 அமெரிக்க டாலர்களை கங்கை நதியைத் தூய்மைப்படுத்தும் திட்டத்துக்கு வழங்குவதாக அறிவித்தார். 
1988ல் தென்கொரியாவில் நடைபெற்ற 24வது ஒலிம்பிக் போட்டிகளின் நினைவாக சியோல் அமைதி விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. பிரதமர் மோடிக்கு முன்பாக ஐ.நா அவையின் முன்னாள் செயலாளர்களான கோஃபி அனான், பான் கி மூன், ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்கல் ஆகியோர் இந்த விருதை வென்றிருக்கிறார்கள்.    


[X] Close

[X] Close