மது, போதை... தமிழகம் குடிகார மாநிலமா... ஆய்வு சொல்வது என்ன?! | Survey Says Tamil Nadu 19th place in consuming alcohol

வெளியிடப்பட்ட நேரம்: 12:35 (23/02/2019)

கடைசி தொடர்பு:12:58 (23/02/2019)

மது, போதை... தமிழகம் குடிகார மாநிலமா... ஆய்வு சொல்வது என்ன?!

மது, போதை... தமிழகம் குடிகார மாநிலமா... ஆய்வு சொல்வது என்ன?!

மிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் வீதிக்கு வீதி திறக்கப்பட்டிக்கின்றன. இதை வைத்து பார்த்தால் 'தமிழகம் குடிகார மாநிலமா?'. விடை சொல்கிறது மத்திய சமூகநீதித் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை.

அதன்படி, `7 இந்தியர்களில் ஒருவர் குடிகாரர்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய மக்கள்தொகையில் 14.6 சதவிகிதம் பேர் மதுவுக்கு அடிமையாகி உள்ளனர். ஆண்களில் 27.3 சதவிகிதமும், பெண்களில் 1.6 சதவிகிதம் பேர் மது குடிக்கின்றனர். 10 முதல் 17 வயது வரை உள்ள சிறுவர்களில் 1.3 சதவிகிதம் பேர் மது அருந்தப் பழகியுள்ளனர். பெரும்பாலும் 18 முதல் 49 வயதுக்குள்தான் ஆண்கள் மது குடிக்கப் பழகுகின்றனர் என்பதும் தெரியவந்துள்ளது. 

மது

இந்தியாவில் மது அதிகம் குடிக்கும் மாநிலங்களில் சத்தீஸ்கர் முதல் இடத்தில் உள்ளது. இங்கே 35.6 சதவிகிதம் பேர் குடிக்கிறார்கள். அடுத்த இடத்தில் திரிபுராவும் தொடர்ந்து பஞ்சாப் மாநிலமும் உள்ளன. இந்த மாநிலங்களில் ஆண்கள் மக்கள்தொகையில் பாதிக்குமேல் குடிக்கு அடிமையாகி உள்ளனர். பஞ்சாப் மாநிலத்தில்தான் அதிகளவில் சிறுவர்கள் மது குடிக்கிறார்கள். இங்குள்ள சிறுவர்களில் 6 சதவிகிதம் பேர் போதைக்கு அடிமையாகி உள்ளனர்.

பெண்கள் அதிகமாக மது குடிக்கும் மாநிலங்களில் அருணாச்சலப்பிரதேசம் 15.6 சதவிகிதத்துடன் முதல் இடத்தைப் பெற்றுள்ளது.  தென்மாநிலங்களில் ஆந்திரா மட்டுமே முதல் 10 இடத்துக்குள் உள்ளது. நான்காவது இடத்தைப் பிடித்துள்ள ஆந்திராவில் 40.4 சதவிகிதம் ஆண்கள், மது அருந்துகின்றனர். தமிழகத்தில் 14.2 சதவிகிதம் பேர் மது அருந்தும் பழக்கம் கொண்டுள்ளனர். இதில் ஆண்கள் 28.5 சதவிகிதம். அகில இந்திய அளவில் தமிழகத்துக்கு 19-வது இடம். கேரள மாநிலத்தில் 12.4 சதவிகிதம் பேர் குடிக்கின்றனர். இந்த மாநிலத்துக்கு 21-வது இடம். பாண்டிச்சேரிக்கு 23-வது இடம். பாண்டிச்சேரி மக்களில் 9.5 சதவிகிதம் பேர் மது அருந்துகின்றனர். பாண்டிச்சேரி ஆண்களில் 20 சதவிகிதம் பேர் இதற்கு அடிமை. இந்த ஆய்வு 10 முதல் 75 வயது வரை உள்ள மக்களிடையே நடத்தப்பட்டது.

alcohol

எந்த வகை மதுபானத்தை மக்கள் அதிகம் அருந்துகின்றனர் எனப் பார்த்தால், பீர் 12 சதவிகிதம், லைட் பீர் 9 சதவிகிதம், கள்ளச்சாராயம் 2 சதவிகிதம், வீட்டிலேயே தயாரிக்கும் மது 11 சதவிகிதம், ஒயின் 4 சதவிகிதம், இந்தியாவில் தயாராகும் மது வகைகள் 30 சதவிகிதம், நாட்டுச் சாராயம் 30 சதவிகிதம். மது அருந்துவதில் உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களில் உத்தரப்பிரதேசம், ஆந்திரா, தமிழ்நாடு போன்ற மாநிலங்கள் முன்னிலையில் உள்ளன. தமிழகத்தில் மதுவால் பாதிக்கப்பட்டு, 47 லட்சம் பேர் சிகிச்சை எடுத்து வருகின்றனர். 

தமிழகத்தில் 0.1 பேர் பிற போதை மருந்துகளையும் பயன்படுத்துகின்றனர். இந்தப் பட்டியலில்  சிக்கிம் 7.3 சதவிகிதத்துடன் முதல் இடத்தில் உள்ளது. நாகாலாந்து 4.7, ஒடிசா 4.5, அருணாச்சலப்பிரதேசம் 4.2, டெல்லி 3.8 சதவிகிதத்துடன் பட்டியலில் உள்ளன. இந்தியாவில் தூக்க மாத்திரையை 2.91 சதவிகிதம் பேர் பயன்படுத்துகின்றனர். தமிழகத்தில் 0.06 மக்கள் தூக்கமாத்திரை பயன்படுத்தி உறங்குகின்றனர். மூக்கு வழியாகப் போதை மருந்து எடுத்துக்கொள்பவர்களும் இந்திய மக்கள்தொகையில் 0.7 சதவிகிதம் பேர் உள்ளனர். 

போதை ஊசி பயன்படுத்துபவர்களில் உத்தரப்பிரதேச மாநிலம் முதல் இடத்தில் உள்ளது. ஒரு லட்சம் பேர் இங்கு அடிமைகளாக உள்ளனர். பஞ்சாபில் 88,000 பேரும், டெல்லியில் 86,000 பேரும் போதை ஊசியைப் பயன்படுத்துகின்றனர். இந்தப் பட்டியலில் முதல் 10 இடத்துக்குள் தமிழகம் இடம்பெறவில்லை என்பது சற்றே ஆறுதலான விஷயம்!

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close