இரண்டு நாள்களில் 80 பேர்! - அசாம் தொழிலாளர்களின் உயிரைப் பறித்த விஷ சாராயம் | 80 tea garden workers died after consuming spurious liquor in Assam

வெளியிடப்பட்ட நேரம்: 20:10 (23/02/2019)

கடைசி தொடர்பு:20:10 (23/02/2019)

இரண்டு நாள்களில் 80 பேர்! - அசாம் தொழிலாளர்களின் உயிரைப் பறித்த விஷ சாராயம்

அசாம் மாநிலம் கோலகாட் மாவட்டத்தில் உள்ளவர்களில் பலர் தேயிலை தோட்டத்தில் வேலை செய்பவர்கள். அங்குள்ள சல்மாரா என்ற தோட்டத்தில் வேலை செய்யும் தொழிலாளர்கள் அங்கேயே தங்கி வேலை செய்து வருகின்றனர். நேற்று முன் தினம் அனைத்து தொழிலாளர்களும் ஒன்று கூடி இரவு சாராயம் அருந்தியுள்ளனர். அவர்களுடன் சில பெண்களும் சாராயம் குடித்துள்ளனர்.

குடித்த அடுத்த இரண்டு மணி நேரத்தில் மூன்று பெண்கள் மயங்கி விழுந்துள்ளனர். அதன் பிறகு அடுத்த 12 மணி நேரத்தில் மது அருந்தியவர்களின் உடல்நிலை மிகவும் மோசமாகியுள்ளது அவர்களின் பலர் உயிரிழந்துள்ளனர். நேற்று வரை இறந்தவர்களின் எண்ணிக்கை 36 எனக் கூறப்பட்ட நிலையில் இன்று உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 80 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 100 பேர் ஆபத்தான நிலையில் அங்கு உள்ள ஜோர்ஹட் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவத்தை அடுத்து கோலகாட் மாவட்டத்துக்கு விரைந்த போலீஸார், ஜுகிபாரி பகுதியில் நாட்டு சாராயம் விற்பனை செய்து வந்த இந்துகல்பா மற்றும் தேபா போரா ஆகிய இருவரையும் கைது செய்து அவர்களிடமிருந்த மொத்த சாராய பேரல்களையும் பறிமுதல் செய்துள்ளனர். 

இதுபற்றி அப்பகுதி மக்கள் கூறும் போது, ‘ ஒரு டம்ளர் சாராயம் பத்து மற்றும் இருபது ரூபாய்க்கு விற்கப்படுகிறது. தொழிலாளர்கள் உடல் களைப்பு தெரியாமல் இருக்க அதை வாங்கி அருந்தி விடுகின்றனர். குறைந்த விலை என்பதால் விற்பவர்களும் அதில் அதிக நச்சு கலந்து விற்றுள்ளனர். இதன் காரணமாகவே இவ்வளவு உயிரிழப்புகள் நேர்ந்துள்ளது’ எனத் தெரிவித்துள்ளனர்.

'சல்மாரா தோட்டத்தில் உள்ள இரண்டு அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.  இதே போன்ற சம்பவம் மீண்டும் நடக்காத வகையில் அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்’ என அம்மாநில அமைச்சர் பரிமல் சுக்லபத்யா கூறியுள்ளார்.  உத்தரப்பிரதேசம் மற்றும் உத்தர்காண்ட் போன்ற மாநிலங்களில் இதேப் போன்று விஷ சாராயம் அருந்தி 100 பேர் உயிரிழந்து ஒரு வாரம் மட்டுமே ஆன நிலையில் மீண்டும் அதே போன்ற ஒரு சம்பவம் அசாமில் நிகழ்ந்துள்ளது பொதுமக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 
 


[X] Close

[X] Close