காயமடைந்த இளைஞரைத் தூக்கிக் கொண்டு 1.5 கி.மீ ரயில் தண்டவாளத்தில் ஓடிய காவலர்! | Madhyapradesh police constable runs 1.5km on rail track carrying bleeding

வெளியிடப்பட்ட நேரம்: 07:00 (24/02/2019)

கடைசி தொடர்பு:07:15 (24/02/2019)

காயமடைந்த இளைஞரைத் தூக்கிக் கொண்டு 1.5 கி.மீ ரயில் தண்டவாளத்தில் ஓடிய காவலர்!

ரயிலில் இருந்து தவறி விழுந்தவரைத் தோளில் தூக்கிக் கொண்டு ஒன்றைரைக் கி.மீ. தூரம் ஓடிச் சென்று காப்பாற்றிய போலீஸ் கான்ஸ்டபிளுக்குப் பாராட்டுகள் குவிந்து வருகிறது. 

மத்தியப்பிரதேச காவலர் பூனம் பிலோர்

மத்தியப்பிரதேச மாநிலத்தின் ஹோசங்காபாத் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாருக்கு ரயிலில் இருந்து தவறி விழுந்து இளைஞர் ஒருவர் படுகாயம் அடைந்ததாகத் தகவல் வந்திருக்கிறது. அப்போது பணியில் இருந்த போலீஸ் கான்ஸ்டபிள் பூனம் பிலோர் (Poonam Billore) மற்றும் போலீஸ் வாகனத்தை இயக்கும் டிரைவருடன் சம்பவ இடத்துக்கு விரைந்திருக்கிறார். அந்தப் பகுதிக்குச் சென்ற அவர்கள், இளைஞர்  ஒருவர் காயங்களுடன் ரயில்வே டிராக்கின் அருகில் வலியால் துடித்துக் கொண்டிருப்பதைக் கண்டிருக்கின்றனர். அப்பகுதிக்கு ஆம்புலன்ஸ் வாகனம் செல்ல முடியாத நிலையில், காயமடைந்த இளைஞரை கான்ஸ்டபிள் பிலோர் தனது தோளில் தூக்கிக் கொண்டு அருகில் உள்ள மருத்துவமனை நோக்கி விரைந்திருக்கிறார். காயமடைந்த இளைஞரை ரத்தம் சொட்டும் நிலையில், அவரைக் காப்பாற்றும் நோக்கில் தோளில் சுமந்து சென்று காப்பாற்றிய போலீஸ் கான்ஸ்டபிள் பூனம் பிலோருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. 

இதுகுறித்து பேசிய பூனம் பிலோர், `நாங்கள் அந்தப் பகுதிக்குச் சென்று பார்த்தபோது அங்கு ஆம்புலன்ஸ் வாகனமோ அல்லது போலீஸ் வாகனமோ செல்ல சாலை வசதி இல்லாதது தெரியவந்தது. அருகில் உள்ள ரயில்வே ஸ்டேஷனுக்குச் சென்றால் மட்டுமே அங்கிருந்து மருத்துவமனைக்கு அந்த இளைஞரைக் கொண்டு செல்ல முடியும் என்ற நிலை. அந்த இளைஞர் ரயிலில் இருந்து தவறி விழுந்ததால், படுகாயமடைந்திருப்பது தெரிந்தது. அதனால், அவரை எனது தோளில் தூக்கிக் கொண்டு சுமார் ஒன்றரைக் கி.மீ தொலைவில் உள்ள ரயில் நிலையத்தை அடைந்தோம். அங்கிருந்து அவரை காரில் மருத்துவமனைக்குக் கொண்டு சேர்த்தோம். தற்போது அந்த இளைஞர் அபாய கட்டத்தைத் தாண்டியிருப்பார் என்று நம்புகிறேன்’’ என்றார். 

ரயிலில் இருந்து தவறிவிழுந்த இளைஞர் அஜித் (20) என்பது விசாரணையில் தெரியவந்திருக்கிறது. சியோனி - மால்வா பகுதியில் உள்ள மருத்துவமனையில் அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட பின்னர், மேற்சிகிச்சைக்காக அவர் போபால் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறார்.  


[X] Close

[X] Close