மீண்டும் வருகிறது வேத கல்வி... கல்வித் தந்தையாகும் பாபா ராம்தேவ்! | Baba Ramdev is the front-runner to head India's first Vedic Education Board

வெளியிடப்பட்ட நேரம்: 17:47 (25/02/2019)

கடைசி தொடர்பு:17:48 (25/02/2019)

மீண்டும் வருகிறது வேத கல்வி... கல்வித் தந்தையாகும் பாபா ராம்தேவ்!

இந்தக் கமிட்டி கடந்த சனிக்கிழமை கூடி விவாதித்ததில், பாபா ராம்தேவ் தலைமையில் வேத கல்வி வாரியம் அமைக்க பரிந்துரைப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

மீண்டும் வருகிறது வேத கல்வி... கல்வித் தந்தையாகும் பாபா ராம்தேவ்!

மீண்டும் வேத கால கல்வி முறையைக் கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்துள்ள நிலையில், இதற்காக அமைக்கப்பட உள்ள வேத கல்வி வாரியம், பிரபல யோகா குரு பாபா ராம்தேவ் தலைமையில் உருவாகலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது. 

வேத கால கல்வி முறையை மீண்டும் கொண்டு வரவும், அதை ஊக்குவிக்கவும் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம், இதற்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக இந்த அமைச்சகத்தின் முழு நிதியுதவியுடன் மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவேத்கர் தலைமையில் 5 நபர்கள் கொண்ட நிர்வாக கவுன்சில் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. 

பாபா ராம்தேவ்

இந்த கவுன்சிலின் யோசனையின் பேரில், வேத கல்வி முறையைச் செயல்படுத்தவும், பாடத்திட்டங்களை வகுக்கவும் பாரதிய ஷிக்‌ஷா வாரியம் என்ற ஒன்றை அமைக்க முடிவு செய்யப்பட்டது. இந்த வாரியம் அமைப்பதற்கான போட்டியில் பாபா ராம்தேவின் பதஞ்சலி அறக்கட்டளை, டெல்லியைச் சேர்ந்த ரிட்னானந்த் பால்வ்டு கல்வி அறக்கட்டளை மற்றும் புனேவைச் சேர்ந்த மகாராஷ்ட்ரா இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி ஆகிய 3 கல்விக் குழுமங்கள் போட்டியிட்டன. இந்த 3 குழுமங்களைச் சேர்ந்தவர்களும், இது தொடர்பாக அமைக்கப்பட்ட தேர்வுக் கமிட்டி முன்னர், தங்களது பாடத்திட்ட முறைகள் உள்ளிட்டவற்றை பவர் பாயின்ட் பிரசன்டேஷன் மூலம் விளக்கவும் செய்தனர். 

இந்த நிலையில், இந்தக் கமிட்டி கடந்த சனிக்கிழமை கூடி விவாதித்ததில், பாபா ராம்தேவ் தலைமையில் வேத கல்வி வாரியம் அமைக்க பரிந்துரைப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் பரிந்துரை குறித்து, இதற்காக அமைக்கப்பட்டுள்ள நிர்வாகக் கவுன்சில், இந்த வாரக் கடைசியில் கூடி முடிவெடுக்க உள்ளது. 

அப்படி ஒப்புதல் கிடைத்து, ராம்தேவ் தலைமையில் வேத கல்வி வாரியம் அமைக்கப்பட்டால், அதற்கான தலைமையகம் ஹரித்துவாரில் அமைக்கப்படும் என்றும், அதற்குத் தேவையான உள்கட்டமைப்பு வசதிகள் தங்களிடம் இருப்பதாகவும், இந்த வாரியத்தின் வளர்ச்சிக்காகப் பதஞ்சலி யோகாபீடம் 21 கோடி ரூபாய் அளிக்கும் என்றும் பதஞ்சலி அறக்கட்டளை பிரதிநிதி ஆச்சார்யா பால்கிருஷ்ணா தெரிவித்துள்ளார். மேலும், வேத கல்வி வாரியத்தின் தலைவராக ராம்தேவை நியமிக்க வேண்டும் எனத் தாம் தேர்வுக் கமிட்டியிடம் வலியுறுத்தி உள்ளதாகவும், அதையே பதஞ்சலி அறக்கட்டளை விரும்புவதாகவும் அவர் கூறியுள்ளார். 

வேத கல்வி

இதன்படி ராம்தேவ் தலைமையில் வேத கல்வி வாரியம் அமைக்கப்பட்டால், அது அரசு நிதி உதவி மற்றும் அங்கீகாரத்துடன் அமைக்கப்படும் இந்தியாவின் முதல் வேத கல்வி வாரியமாக இருக்கும். 

``வேத கல்வி, சம்ஸ்கிருத கல்வி மற்றும் சாஸ்திரங்கள் போன்ற இந்திய பாரம்பர்ய அறிவு முறைப்படுத்தப்பட வேண்டும் என்று மோடி தலைமையிலான அரசு விரும்புகிறது. அந்த நோக்கத்திலேயே இதற்கான கல்வித் திட்டங்கள், தேர்வு முறைகள், சான்றிதழ் வழங்குதல் அமையப் பெறும். வேத கால கல்வி மற்றும் நவீன கால கல்வி ஆகிய இரண்டையும் கலந்த பள்ளிகள் மற்றும் பாடசாலைகளைக் கொண்ட குருகுல கல்விக்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில் வேத கல்வி வாரியம் செயல்படும். 

சி.பி.எஸ்.இ போன்றே வேத கல்வி வாரியத்தின் கீழ் இயங்கும் பள்ளிகளுக்கும் வாரிய இணைப்புக்கான கட்டணம் இருக்கும். மாணவர்களுக்கான கல்விக் கட்டணம் மற்றும் தேர்வுக் கட்டணம் போன்றவையும் சி.பி.எஸ்.இ மாணவர்களுக்கு வசூலிக்கப்படுவதைப் போன்றே இருக்கும்’’ என்றும்  மத்திய மனித வள அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

இந்த நிலையில், பாபா ராம்தேவ் தலைமையில் வேத கல்வி வாரியம் அமைக்கப்பட்டால், அதனால் முதலில் பயன்பெறப்போவது ஹரித்துவாரில் இயங்கி வரும் ராம்தேவின் ரெஷிடன்ஷியல் பள்ளியும், ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் கீழ் இயங்கி வரும் வித்யா பாரதி பள்ளிகளும், ஆரிய சமாஜ் அமைப்பின் கீழ் இயங்கி வரும் குருகுல பள்ளிகளும்தான். 

முன்னதாக, மத்திய அளவில் பதஞ்சலி அறக்கட்டளை சார்பில் தன்னை தலைவராகக் கொண்டு வேத பல்கலைக்கழகம் ஒன்றை அமைக்க பாபா ராம்தேவ் முன்வைத்த கோரிக்கைக்கு, மத்திய அரசு கொள்கை அளவில் ஒப்புக்கொண்டது குறிப்பிடத்தக்கது. 

மோடியுடன் ராம்தேவ்

அதே சமயம், 3 ஆண்டுகளுக்கு முன்னர் ஸ்மிருதி இரானி மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சராக இருந்தபோது, வேத கல்வி வாரியம் அமைக்கும் ராம்தேவின் திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்க மறுத்துவிட்டார். தனியார் கல்வி வாரியத்துக்கு மத்திய அரசு அங்கீகாரம் அளிக்க முடியாது என அப்போது அவர் அதற்குக் காரணம் கூறியிருந்தார். 

பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம், கடந்த 10 ஆண்டுகளாக இந்தியாவில் மிக வேகமாக நுகர்வோர் பொருள்களைச் சந்தைப்படுத்தி, இந்தியாவின் மிகப்பெரிய எஃப்.எம்.சி.ஜி நிறுவனமாக வளர்ந்த நிலையில், சமீப காலமாகப் பல சறுக்கல்களைச் சந்தித்து வருவதோடு, சர்ச்சைகளையும் எதிர்கொண்டு வருகிறது. குறிப்பாக வாட்ஸ் அப்-க்கு போட்டியாகப்  பதஞ்சலி நிறுவனம் வெளியிட்ட கிம்போ ஆப்- என்ற செயலி, வெளிநாட்டு நிறுவனம் ஒன்றின் அப்பட்டமான காப்பி என்ற சர்ச்சை எழுந்ததைத் தொடர்ந்து, ராம்தேவ் அதைத் திரும்பப் பெற்றுக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close