``பால்கோட் தாக்குதலின் டார்கெட்!” -தீவிரவாதிகளின் புகைப்படங்களை வெளியிட்ட உளவுத்துறை! #LiveUpdates | India Strikes back in revenge of pulwama attack

வெளியிடப்பட்ட நேரம்: 10:07 (26/02/2019)

கடைசி தொடர்பு:15:01 (26/02/2019)

``பால்கோட் தாக்குதலின் டார்கெட்!” -தீவிரவாதிகளின் புகைப்படங்களை வெளியிட்ட உளவுத்துறை! #LiveUpdates

இன்று எல்லைக்கட்டுப்பாட்டு பகுதியிலும் பாகிஸ்தான் நாட்டிலும் நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக பல்வேறு புகைப்படங்களை உளவுத்துறை வெளியிட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது இரண்டு தீவிரவாதிகளின் புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளது. இவர்கள் இருவரையும் குறிவைத்துதான் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. 

தீவிரவாதி மவுலானா அம்மார்

ஒருவர் மவுலானா அம்மார். இவர் ஆஃப்கானிஸ்தான் மற்றும் காஷ்மீரில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் தொடர்புடையவர். மற்றொருவர் மவுலானா தால்ஹா சைஃப். இவர் மசூத் அசாரின் சசோதரர் ஆவார்.  

மவுலானா தால்ஹா சைஃப்

இந்திய விமானப்படை இன்று அதிகாலை நடத்திய அதிரடி தாக்குதலில் தீவிரவாத முகாம்கள் அழிக்கப்பட்டது. இந்நிலையில் இன்று தாக்குத்தல் நடத்தி அழிக்கப்பட்ட ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் முகாம்களின் புகைப்படங்களை உளவுத்துறை வெளியிட்டுள்ளது.

உளவுத்துறை வெளியிட்டுள்ள தீவிரவாத முகாமின் புகைப்படத்தில் இருக்கும் கட்டடத்தின் மாடியின் அமெரிக்கா, பிரட்டன் மற்றும் இஸ்ரேல் நாட்டின் கொடிகள் வரையப்பட்டு உள்ளது. 

அங்கு 200 -க்கும் மேற்பட்ட ஏ.கே ரக துப்பாக்கிகள், குண்டுகள் மற்றும் வெடி மருந்துகள் இருந்ததாகவும் உளவுத்துறை தெரிவித்திருக்கிறது. 

தீவிரவாத முகாம்

 

புல்வாமா தாக்குதலுக்கு இந்திய விமானப்படை இன்று அதிகாலை பதிலடி கொடுத்தது. இந்நிலையில் இந்த பதிலடி தாக்குதல் தொடர்பாக பிரதமர் மோடி குடியரசு தலைவர் மற்றும் துணை குடியரசு தலைவரிடம் விளக்கம் அளித்து வருவதாக கூறப்படுகிறது. 

இந்திய விமானப்படையின் எல்லைத் தாண்டிய தாக்குதல் குறித்து வெளியுறவு செயலர் விஜய் கோகலே தற்போது டெல்லியில் விளக்கம் அளித்து வருகிறார்.

``ஜெய்ஷ்-இ-முகமது இயக்கம் நமது நாட்டில் மீண்டும் தாக்குதல் நடத்த திட்டமிட்டதாக உளவுத்துறையின் மூலம் தகவல் கிடைத்தது. இதற்காக ஜிஹாதிகளுக்கு பயிற்சி வழங்கப்பட்டது. இது தொடர்பாக பாகிஸ்தானுக்கு தகவல் அனுப்பினோம். ஆனால் தீவிரவாத முகாம்களை அழிக்க அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.  அவர்கள் தாக்குதல் நடத்துவதுக்கு முன் நாம் நம்மை தற்காத்துக்கொள்வது முக்கியம். இன்று இந்தியா தாக்கியது  ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் மிகப்பெரிய முகாம் ஆகும். 

vijay

இந்த தாக்குதலில் பல தீவிரவாதிகள் உயிரிழந்துள்ளனர். இந்த முகாமை வழிநடத்தியவர் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் தலைவரான மசூத் அசாரின் மைத்துனர் மவுலான யூசஃப் அசார் என்பவர் ஆவார்” என்றார்.  

இந்திய விமானப்படையின் மிராஜ் 2000 ரக போர் விமானம் இன்று அதிகாலை பாகிஸ்தான் மற்றும் எல்லைக்கட்டுப்பாட்டு பகுதியில் அதிரடி தாக்குதல் நடத்தியது. அப்போது பாகிஸ்தானின் F16 ரக போர் விமானங்கள் பதில் தாக்குதலுக்கு வந்தாகவும் இந்தியாவின் மிராஜ் ரக விமானத்தின் அணிவகுப்பை பார்த்து பின்வாங்கிவிட்டதாகவும் விமானப்படை அதிகாரிகள் தெரிவித்ததாக ஏ.என்.ஐ செய்தி ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது. 

மிராஜ்

இந்திய விமானப்படையின் பதிலடி தாக்குதலைத் தொடர்ந்து, இந்திய விமானப்படை மற்றும் ராணுவம் தயார் நிலையில் வைக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இந்தியாவின் பதிலடி தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் அவசர ஆலோசனைக்கு அழைப்பு விடுத்துள்ளார். இஸ்லாமாபாத்தில் நடைபெறவிருக்கும்  இந்த கூட்டத்தில் இந்தியாவில் தாக்குதல் குறித்தும், பாகிஸ்தானின் பாதுகாப்பு குறித்தும் ஆலோசனை நடத்தப்பட இருக்கிறது. 

இன்று அதிகாலை, விமானப்படையின் அதிரடித் தாக்குதலைத் தொடர்ந்து, பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் முக்கிய அமைச்சர்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றுவருகிறது. இதில், மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அருண் ஜெட்லி, பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.  

அமைச்சரவை கூட்டம்

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது ட்விட்டர் பக்கத்தில்,   `பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத முகாம்களைக் குறிவைத்து தாக்கிய இந்திய விமானப்படையின் விமானிகளுக்கு சல்யூட்’ எனக் குறிப்பிட்டிருக்கிறார். 

இந்திய விமானப்படையின் இ்ந்த பதிலடித் தாக்குதலுக்குப் பலரும் பாராட்டு தெரிவித்துவருகின்றனர். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, 'இந்திய விமானப்படை விமானிகளுக்கு சல்யூட்' என ட்வீட் செய்துள்ளர். 

ராஹுல் காந்தி

இந்தியா-பாகிஸ்தான் எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில் உள்ள தீவிரவாத முகாம்கள்மீது, இந்திய விமானப்படை இன்று அதிகாலை அதிரடித் தாக்குதல் நடத்தி, தீவிரவாத முகாம்களை அழித்துள்ளது. புல்வாமா தாக்குதலுக்குப் பதிலடியாக இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. 

விமானப்படை

பிப்ரவரி மாதம் 14 -ம் தேதி, ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமா பகுதியில் சிஆர்பிஎஃப் வீரர்கள் சென்ற வாகனம்மீது நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில், 40 -க்கும் மேற்பட்ட வீரர்கள் பலியாகினர். இந்தச் சம்பவம், இந்தியா மட்டுமல்லாது உலக நாடுகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

புல்வாமா தாக்குதல்

இந்தத் தாக்குதலுக்குக் கடும் கண்டனம் தெரிவித்த இந்தியா, பாகிஸ்தான் மீது குற்றம் சாட்டியது. இந்நிலையில், இன்று அதிகாலை புல்வாமா தாக்குதலுக்கு இந்திய விமானப்படை பதிலடி கொடுத்திருக்கிறது.  இந்திய விமானப்படைக்குச் சொந்தமான 12 மிராஜ் ரக போர் விமானங்களில், அதிகாலை 3.30 மணிக்கு எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில் இருக்கும் தீவிரவாத முகாம்கள்மீது குண்டு மழை பொழிந்தது. இந்தத் தாக்குதலில், தீவிரவாத முகாம்கள் முழுமையாக அழிக்கப்பட்டதாக விமானப்படையில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிப்பதாக, ஏ.என்.ஐ ஊடகம் தெரிவித்துள்ளது. 

இந்த பதிலடித் தாக்குதலில், சுமார் 1000 கிலோ குண்டுகள் பல்வேறு தீவிரவாத முகாம்கள்மீது வீசப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்திய விமானங்கள் எல்லை தாண்டிப் பறந்ததை பாகிஸ்தானும் உறுதிசெய்துள்ளது. இது தொடர்பாக பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை செய்தித்தொடர்பாளர் பதிவிட்டுள்ள ட்விட்டர் பதிவில், இந்திய விமானப்படை எல்லைக் கட்டுப்பாட்டை மீறியதாகக் குறிப்பிட்டிருக்கிறார். எனினும், இந்திய பாதுகாப்புத்துறையோ... இந்திய விமானப்படையோ இது தொடர்பாக அதிகாரபூர்வ அறிவிப்பு எதுவும் வெளியிடவில்லை.


[X] Close

[X] Close