50 கிலோமீட்டர் உள்ளே புகுந்து துல்லியமாகத் தாக்கிய மிராஜ்! | Mirage 2000 fighters strike terror camp across LoC

வெளியிடப்பட்ட நேரம்: 10:53 (26/02/2019)

கடைசி தொடர்பு:11:18 (26/02/2019)

50 கிலோமீட்டர் உள்ளே புகுந்து துல்லியமாகத் தாக்கிய மிராஜ்!

பாகிஸ்தான் எல்லைக்குள் 50 கிலோ மீட்டர் தாண்டி இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

மிராஜ்

தாக்குதலில் பாகிஸ்தானின் முஸாஃபராபாத் பாலகோட், சாக்கோதி பகுதியில் உள்ள பயங்கரவாத முகாம்கள் முற்றிலும் அழிக்கப்பட்டன. 12 மிராஜ் ரக விமானங்கள் 1000 கிலோ வெடிகுண்டுகள் வீசின. பாகிஸ்தான் எல்லைக்குள் ஹைபர் பக்துவானா மாகாணத்தில் இந்திய எல்லையிலிருந்து 50 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பாலகோட் மீது தாக்குதல் நடத்தியதால் பாகிஸ்தான் அதிர்ந்து போயுள்ளது. ராவல்பிண்டி மீதும் இந்திய விமானங்கள் பறந்ததாகச் சொல்லப்படுகிறது. இந்த அதிரடித் தாக்குதலில் ஜெய்ஷ் இ முகமது, லஷ்கர் இ தொய்பா ஹிஸ்புல் முஜாகிதீன் முகாம்கள் அழிந்து போனதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிகாலை 3.45 மணிக்கு முஸாஃபராபாத், 3.48 மணிக்கு பாலகோட், 3.58 மணிக்கு சக்கோதி மீது தாக்குதல் நடத்தப்பட்டது. 

தாக்குதல் நடத்திய மிராஜ் விமானங்கள் இந்திய விமானப்படையின் பழைய ரகம். 1971-ம் ஆண்டுக்குப் பிறகு இந்தியா எல்லை தாண்டி பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தியதில்லை. 1999 கார்கில் போரின் போதுகூட இந்திய எல்லைக்குள் இருந்த பாகிஸ்தான் வீரர்கள் மீது வான்வெளி தாக்குதல் நடத்தப்பட்டதே தவிர, பாகிஸ்தான் எல்லைக்குள் புகுந்து மிராஜ் விமானங்கள் தாக்கியதில்லை. விமானப்படை தாக்குதலுக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பாராட்டு தெரிவித்துள்ளார். அதேபோல், அரவிந்த் கெஜ்ரிவாலும் பாராட்டியுள்ளார். அதே வேளையில், பாகிஸ்தான் இந்திய விமானங்கள் முஸாஃபராபாத் பகுதியில் பறந்ததாகவும் பாகிஸ்தான் விமானப்படை தாக்கியதால் இந்திய விமானங்கள் பின்வாங்கிச் சென்று விட்டதாகக் கூறுகிறது.

பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்திய மிராஜ் - 2000 ரக விமானங்களும் பிரான்ஸ் நாட்டின் டஸால்ட் நிறுவனத்தின் தயாரிப்புதான். 2007ம் ஆண்டோடு இந்த விமானங்களின் தயாரிப்பு நிறுத்தப்பட்டு விட்டது. பிரான்ஸ், இந்தியா, அமீரகம் மற்றும் தைவான் நாட்டு  விமானப்படைகளில் இந்த விமானம் பயன்பாட்டில் உள்ளது. 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close