‘தீவிரவாத முகாமை வழிநடத்தியது யார்?’- வெளியுறவுத்துறை செயலர் விளக்கம் | Foreign secretary Vijay Gokhale briefs the media in Delhi

வெளியிடப்பட்ட நேரம்: 12:25 (26/02/2019)

கடைசி தொடர்பு:13:38 (26/02/2019)

‘தீவிரவாத முகாமை வழிநடத்தியது யார்?’- வெளியுறவுத்துறை செயலர் விளக்கம்

விஜய் கோகலே

புல்வாமா தாக்குதலுக்குப் பதிலடிகொடுக்கும் விதமாக, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இந்திய விமானப்படை அதிரடித் தாக்குதல் நடத்தியுள்ளது. அதிகாலை 3.30 மணியளவில் மிராஜ் வகை போர் விமானங்கள் பாகிஸ்தான் எல்லைக்குள் ஊடுருவின. ஜெய்ஸ்- இ- முகமது தீவிரவாத முகாம்களின்மீது தாக்குதல் நடத்தியது. இதில், சுமார் 1000 கிலோ வெடிமருந்துகள் பயன்படுத்தப்பட்டதாகத் தகவல் வெளியானது. இந்திய விமானப்படை விமானங்கள், தங்கள் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்துள்ளதாக பாகிஸ்தான் ராணுவம் உறுதிப்படுத்தியது.  விமானப்படை தாக்குதல் எப்படி நிகழ்த்தப்பட்டது என்பதுகுறித்து பிரதமரிடம் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் விளக்கமளித்தார். இதையடுத்து, டெல்லியில் பிரதமர் மோடியின் இல்லத்தில் முக்கிய அமைச்சர்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இந்தத் தாக்குதல்குறித்து இந்திய வெளியுறவுத் துறை செயலாளர் விஜய் கோகலே,  “ இந்தியாவில் நடந்த பல்வேறு அசம்பாவித சம்பவங்களின் பின்னணியில் ஜெய்ஸ்- இ- முகமது அமைப்பு இருந்துள்ளது. இதுகுறித்து பல முறை பாகிஸ்தான் அரசுக்கு தெரிவிக்கப்பட்டது. ஆனால், அவர்கள் தரப்பில் பயங்கரவாதிகளுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. புல்வாமா தாக்குதலைத் தொடர்ந்து, மற்றொரு தற்கொலைப்படைத் தாக்குதலை அந்த அமைப்பு நடத்தலாம் என உளவுத்துறையின்மூலம் தகவல் கிடைத்தது. எனவே, இந்தத் தாக்குதலை நடத்தத் திட்டமிட்டோம்.

இதற்காக பால்கோட், சாக்கோதி, முஸாஃபராபாத் ஆகிய இடங்களைத் தேர்வுசெய்தோம்.  இந்தத் தாக்குதலின்போது, அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்துவிடக் கூடாது என்பதில் கவனமாக இருந்தோம். கைபரின் அடர்ந்த பகுதியில் இருந்த தீவிரவாதிகளின் மிகப்பெரிய முகாம்மீது தாக்குதல் நடத்தப்பட்டது. பாலக்கோடு பகுதியில் இருந்த தீவிரவாத முகாம்களை மசூத் அசாரின் மைத்துனர் தலைமைதாங்கி நடத்திவந்துள்ளார். இந்தத் தாக்குதலில், ஏராளமான பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். இது, ராணுவ நடவடிக்கை இல்லை; தீவிரவாதிகளுக்கு எதிரான தற்காப்பு நடவடிக்கை” என்றார்.


[X] Close

[X] Close