தாக்குதலில் அழிக்கப்பட்ட ஜெய்ஷ் - இ -முகமது தீவிரவாத தளத்தின் தளபதி - யார் இந்த யூசுப் அசார்? | Terror Camp Destroyed by IAF Was Being Run by Yusuf Azhar

வெளியிடப்பட்ட நேரம்: 16:00 (26/02/2019)

கடைசி தொடர்பு:16:00 (26/02/2019)

தாக்குதலில் அழிக்கப்பட்ட ஜெய்ஷ் - இ -முகமது தீவிரவாத தளத்தின் தளபதி - யார் இந்த யூசுப் அசார்?

யூசுப் அசார்

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இந்திய விமானப்படை நிகழ்த்திய அதிரடி தாக்குதல் குறித்து இந்திய வெளியுறவுத்துறைச் செயலாளர் விஜய் கோகலே விளக்கமளித்தபோது பால்கோட் பகுதியில் செயல்பட்டு வந்த ஜெய்ஷ் - இ- முகமது முகாமின் மீது தாக்குதல் நடத்தப்பட்டது என்றார். இந்த முகாமை மசூத் அசாரின் மைத்துனர் யூசுப் அசார் வழிநடத்தி வந்ததாக பேசிய விஜய் கோகலே இந்தத் தாக்குதலில் ஏராளமானோர் கொல்லப்பட்டனர் என்றார். 

விஜய் கோகலே

பால்கோட் பகுதியில் அடர்ந்த வனத்தின் நடுவே செயல்பட்டு வந்த முகாம்கள் யூசுப் கட்டுப்பாட்டில்தான் இருந்து வந்துள்ளது. இந்தியாவில் நிகழ்த்தப்பட்ட பல்வேறு தாக்குதலுக்கு யூசுப் முளையாகச் செயல்பட்டது குறித்து உளவுத்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. மேலும், சில தற்கொலைப்படை தாக்குதலுக்கு திட்டமிட்டதும் உளவுத்துறையால் கண்டுபிடிக்கப்பட்டு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. புல்வாமா தாக்குதலுக்கு முன்னதாகவும் தற்கொலைப்படை தாக்குதல் நடைபெறலாம் என உளவுத்துறை எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 2001-ம் ஆண்டு இந்திய நாடாளுமன்றத்தில் பயங்கரவாதிகள் நிகழ்த்திய தாக்குதல்கள் பதாக்கோட் தாக்குதலும் இந்த அமைப்பால் நிகழ்த்தப்பட்டது தான்.

யூசுப் இந்த அமைப்பின் தளபதி. மசூருக்கு அடுத்து யூசுப் தான் இந்த அமைப்பின் மிகமுக்கியப்புள்ளி என்று கூறப்படுகிறது. பால்கோட்டில் நடந்த தாக்குதலில் யூசுப் கொல்லப்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. ஆனால், இதுவரை எந்த அதிகாரபூர்வ தகவலும் வெளியாகவில்லை. 1999-ம் ஆண்டு, ஜெய்ஷ்- இ- முகமது அமைப்பின் தலைவரான மசூத் அசார் இந்தியாவில் சிறைவாசம் அனுபவித்துக்கொண்டிருந்தார். அமெரிக்க பத்திரிகையாளரைக் கொலை செய்த வழக்கில் மசூத் அசார் மற்றும் அவரது கூட்டாளிகள் கைது செய்யப்பட்டனர். சிறையை உடைத்துத் தப்பிக்க முயற்சி செய்து அது தோல்வியில் முடிந்துள்ளது. டிசம்பர் 24,1999-ல் 184 பயணிகள் மற்றும் 11 பணியாளர்களுடன் நேபாளத்திலிருந்து டெல்லிக்கு வந்த பயணிகள் விமானத்தை அந்த அமைப்பினர் கடத்தினர். மசூரை விடுவித்தால்தான் விமானத்தில் இருக்கும் பயணிகளை உயிருடன் விடுவிப்போம் என்றனர். வேறு வழியின்றி அப்போது ஆட்சியில் இருந்த பா.ஜ.க அரசு மசூரை விடுதலை செய்தது. இந்தக் கடத்தலில் மூளையாகச் செயல்பட்டது இந்த யூசுப்தான். இதற்காக இந்தியாவுக்கு வந்து தனது திட்டத்தை நிறைவேற்றியுள்ளான்.

இதையடுத்து 2000-ம் ஆண்டில் யூசுப்பை தேடப்படும் குற்றவாளியாக இந்தியா அறிவித்தது. உளவுத்துறையின் தகவலின்படி யூசுப் பாகிஸ்தானின் கராச்சியில் பிறந்துள்ளார். இவருக்கு உருது மற்றும் இந்தி நன்கு தெரியும். இந்தியாவில் இவர் மீது கொலை, கடத்தல் உள்ளிட்ட வழக்குகள் உள்ளன. புல்வாமா தாக்குதலுக்கும் யூசுப்தான் மூளையாகச் செயல்பட்டார் எனக் கூறப்படுகிறது.


[X] Close

[X] Close