14 புத்தகம், 250 சிறுகதைகள் மொழிபெயர்ப்பு - கட்டுமானத் தொழிலாளி சஃபியின் படைப்பு! | 14 books and 250 short stories translated by a daily wage construction worker

வெளியிடப்பட்ட நேரம்: 17:15 (26/02/2019)

கடைசி தொடர்பு:17:15 (26/02/2019)

14 புத்தகம், 250 சிறுகதைகள் மொழிபெயர்ப்பு - கட்டுமானத் தொழிலாளி சஃபியின் படைப்பு!

நீங்க என்ன செய்கிறீர்கள் என்று சஃபியிடம் கேட்டால், உடனடி பதில் இதுவாகத்தான் இருக்கும். கேரள மாவட்டம் கண்ணூர் பகுதியில் கட்டுமான பணியில் செயல்படுகிறார் சஃபி (Shafi Cherumavilayi). ஆனால், அந்த வட்டாரத்தில் பலர் அவரை ஓர் எழுத்தாளர் என்பார்கள். ஆம், இதுவரை 250 சிறுகதைகள் மற்றும் 14 புத்தகங்கள் தமிழிலிருந்து மலையாளத்துக்கு மொழிபெயர்த்துள்ளார்.

சஃபி

சஃபியின் தந்தை ஒரு மீன் வியாபாரி. வறுமையான சூழலால் சஃபியால் பள்ளிப்படிப்பைத் தொடர முடியவில்லை. இலக்கியத்தில் ஆசிரியர்கள் கொடுத்த உந்துதல் சஃபிக்கு வாசிப்பின் மீது ஈர்ப்பை ஏற்படுத்துகிறது. வீட்டில் புத்தகங்களைச் சேர்க்கிறார், பொது நூலகத்தைத் தொடர்ந்து பயன்படுத்திக்கொள்கிறார். `என் வாசிப்புக்கான புத்தகங்களைப் பெற அனைத்துவிதமான வேலைகளையும் செய்துள்ளேன்’ என்கிறார்.

வறுமையின் காரணமாகப் பெங்களூருவில் டீக்கடையில் வேலைக்குச் சேர்கிறார். கிடைக்கும் சொற்ப வருமானத்தில் புத்தகங்களும் சேமிக்கிறார். தமிழர்கள் அதிகம் வசிக்கும் விவேக் நகர் ஏரியா என்பதால், திரைப்பட போஸ்டர்கள், செய்தித்தாள்கள் மூலம் தமிழ் கற்கிறார். விருப்பத்தின் பெயரில் தமிழ்க் கதைகளை மலையாளத்தில் மொழிபெயர்த்தார். பிறகு, அவை மலையாள செய்தித்தாள்களில் பிரசுரமாகின. தன் சொந்த ஊர் கண்ணூர் திரும்பியவர் பல எழுத்தாளர்களின் தொடர்பைப் பெறுகிறார்.

`பத்திரிகைகளில் கதை படிப்பதை மிகவும் விரும்புவேன். எழுத்தாளர்களுக்குக் கடிதம் எழுதி நகலைச் சேமித்து வைத்துக்கொள்வேன். உங்கள் கதையை மொழிபெயர்ப்பு செய்யலாமா என்று கேட்டு அனுமதி பெறுவேன்’ என்கிறார். சஃபியின் முதல் மொழிபெயர்ப்பு நூல், தோப்பில் முஹம்மது மீரான் சிறுகதைத் தொகுப்பான `ஆனந்த சயனம் காலனி.’ இது, 2008-ம் ஆண்டு வெளிவந்தது. தொடர்ந்து ச.கந்தசாமியின் `விசாரணைக் கமிஷன்’, மேலாண்மை பொன்னுச்சாமியின் `மின்சாரப் பூ’, ஜி.திலகவதியின் கல்மாரா என்று கடந்த 10 வருடங்களில் 14 புத்தகங்கள் மொழிபெயர்த்துள்ளார்.

உள்ளூர்.எஸ்.பரமேஸ்வர ஐயர் இலக்கிய விருது, திருப்பூர் இலக்கிய விருது உட்பட பல விருதுகளைப் பெற்றுள்ளார். தற்போது, சஃபியின் வீட்டுக்குப் பல எழுத்தாளர்கள் வந்து கலந்துரையாடுகின்றனர். ஆனால், தன்னை எழுத்தாளர் என்று சஃபி அடையாளப்படுத்த மறுக்கிறார்.

`நான் ஒரு கட்டுமானத் தொழிலாளி. பகல் முழுவதும் வேலை செய்கிறேன். இரவில் ஓய்வு நேரங்களில்தான் எழுதுகிறேன்.’ அது என் தொழில். எழுத்து என் விருப்பம்’ என்கிறார். முழுநேர எழுத்தாளராகத் தொடரலாமே என்று கேட்டதற்கு, `என் குடும்பத்தை எப்படிக் காப்பாற்றுவேன்’ என்று சிரிக்கிறார் சஃபி.


[X] Close

[X] Close