"இனி காட்டில் வாழ்வதே கனவுதான்!" - நிர்க்கதியான 11 லட்சம் பழங்குடி குடும்பங்கள் #VikatanInfographics | Over 11 Lakh tribal households to be evicted from Indian forests

வெளியிடப்பட்ட நேரம்: 19:13 (26/02/2019)

கடைசி தொடர்பு:19:13 (26/02/2019)

"இனி காட்டில் வாழ்வதே கனவுதான்!" - நிர்க்கதியான 11 லட்சம் பழங்குடி குடும்பங்கள் #VikatanInfographics

இந்தியாவின் காடுகளில் வாழும் பழங்குடி மக்களையும், காடுகளைச் சார்ந்து வாழும் மக்களையும் தங்கள் வாழ்விடங்களை விட்டு வெளியேறச் செய்வதைச் சட்டபூர்வமாக்கியுள்ளது உச்சநீதிமன்றத்தின் சமீபத்திய தீர்ப்பு.

ந்தியா - பாகிஸ்தான் பிரிவினையின்போது, இரு நாடுகளுக்கும் இடையில் சிக்கி ஏறத்தாழ 14 லட்சம் மக்கள் இடம்பெயர்ந்தனர். 72 ஆண்டுகளுக்குப் பிறகு, அப்படியான சூழல் ஒன்றை உருவாக்கியுள்ளது உச்ச நீதிமன்றம். இந்தியாவின் காடுகளில் வாழும் பழங்குடியினரையும், காடுகளைச் சார்ந்து வாழும் மக்களையும் தங்கள் வாழ்விடங்களை விட்டு வெளியேறச் செய்வதைச் சட்டபூர்வமாக்கியுள்ளது உச்ச நீதிமன்றத்தின் சமீபத்திய தீர்ப்பு. காடுகளில் வாழும் மக்களை அப்புறப்படுத்த மாநில அரசுகளுக்கு உத்தரவிடப்பட்டு, வரும் ஜூன் 12-ம் தேதிக்குள் இந்த இடப்பெயர்வு நிகழ்த்தப்பட வேண்டும் எனக் கால அவகாசமும் தரப்பட்டுள்ளது.

இந்தியாவில் கானுயிர்ப் பாதுகாப்புக்காகப் பல்வேறு அரசுசாரா அமைப்புகள் (NGO) பணியாற்றுகின்றன. `Wildlife First' என்ற அமைப்பும், இரண்டு வெவ்வேறு அமைப்புகளும் இணைந்து தொடுத்த இந்த வழக்கில் தற்போது இந்தத் தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான அமர்வு, கடந்த பிப்ரவரி 20 அன்று அளித்த தீர்ப்பில், ``மாநிலங்களின் தலைமைச் செயலாளர் காடுகளில் ஆக்கிரமித்து வாழ்பவர்களை அப்புறப்படுத்த வேண்டும். இல்லையேல் கடுமையான தண்டனைகளைச் சந்திக்க நேரிடும். இந்திய வன மதிப்பாய்வு நிறுவனம் (Forest Survey of India) செயற்கைக்கோள் உதவியுடன் ஆக்கிரமிப்புகளை அடையாளம் காண்பதோடு, ஆக்கிரமிப்புகள் அப்புறப்படுத்தப்பட்டதை உறுதி செய்ய வேண்டும்" என்று உத்தரவிட்டுள்ளது. இந்தத் தீர்ப்பின் மூலம், முதல் கட்டமாக 11 லட்சம் குடும்பங்கள் காடுகளை விட்டு அப்புறப்படுத்தப்படவுள்ளன. 

இந்தியக் காடுகளில் வாழும் மக்கள், ஆங்கிலேயர்கள் வருவதற்கு முன், முகலாயர்கள் வருவதற்கு முன், ஏனைய பண்டைக்கால அரசுகள் தோன்றுவதற்கு முன்பு இருந்தே தொன்றுதொட்டு வாழ்ந்து வருபவர்கள் என்பதால், `பழங்குடிகள்' என அழைக்கப்படுகின்றனர். பின்னாள்களில் தோன்றிய சாதி, நிலவுடைமை போன்ற பண்பாட்டு மாற்றங்களாலும், காலனிய ஆதிக்கத்தாலும் பழங்குடிகளின் பண்பாடு, வாழ்விடங்கள் முதலானவை பாதிக்கப்பட்டன. இந்தியச் சுதந்திரத்திற்குப் பின்பு, பழங்குடியினரின் நிலை இன்னும் மோசமானது. 

பழங்குடி மக்கள் வெளியேற்றம்

இந்திய தேச வளர்ச்சிக்காகப் பழங்குடியினரின் வாழ்விடங்கள் பறிக்கப்பட்டன. அணைகள் கட்டுவதற்காக, சுரங்கங்கள் தோண்டுவதற்காக எனப் பல்வேறு காரணங்களுக்காக 2014-ம் ஆண்டுவரை ஏறத்தாழ 85 லட்சம் பழங்குடியினர் காடுகளை விட்டு விரட்டப்பட்டனர். எதையும் `சட்டத்தின்படி' செய்யும் இந்திய அரசு, தற்போதுவரை விரட்டப்பட்ட மக்களில் 21 லட்சம் பேருக்கு மட்டுமே மறுவாழ்வு அளித்துள்ளது. 

1991-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட தாராளமயமாக்கல் கொள்கை, கார்ப்பரேட் நிறுவனங்கள் இந்தியாவின் இயற்கை வளங்களிலிருந்து தங்கள் உற்பத்தியை மேற்கொள்ளலாம் என்ற அனுமதியாக அமைந்தது. அணைகள், கானுயிர்ப் பாதுகாப்பு, புலிகள் பாதுகாப்பு, சுற்றுச்சூழல் மண்டலங்கள், சுரங்கங்கள், தொழிற்சாலைகள் எனப் பல்வேறு பெயர்களில் வளர்ச்சித் திட்டங்கள் என வரையறுக்கப்பட்டு, பழங்குடியின மக்களின் வெளியேற்றம் முன்பைவிட வேகமாகத் தொடங்கியது.

2006-ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட `வன உரிமைகள் சட்டம்', பழங்குடியினருக்குக் குறைந்தபட்சப் பாதுகாப்பை உறுதி செய்தது. அந்தச் சட்டத்தின் மூலம், காடுகளில் வாழ்பவர்களுள் பழங்குடியினருக்கும், மூன்று தலைமுறைகளாக, ஏறத்தாழ 75 ஆண்டுகளாக, அதே பகுதியில் வாழ்ந்தவர்களுக்கு நிலப்பட்டா வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. பழங்குடியினர் சட்டத்தை வரவேற்றாலும் அதன்பின் நிகழ்ந்த கணக்கெடுப்புகளில் தாங்கள் புறக்கணிக்கப்பட்டதாக உணர்ந்தனர். பல்வேறு பழங்குடி குழுக்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன. அதன் தொடர்ச்சியாகவே தற்போதைய தீர்ப்பும் வெளியாகியுள்ளது.

பழங்குடிகளின் பிரதிநிதித்துவம் இல்லாத தனியார் அமைப்புகள், காடுகளைப் பாதுகாப்பதற்காக வழக்குத் தொடுக்கின்றனர். பழங்குடிகளுக்கு ஆதரவாக வாதாடவேண்டிய மத்திய அரசு, தன் வழக்கறிஞர்களை உச்ச நீதிமன்றத்திற்கு அனுப்பி வைக்காமல், மக்களின் கருத்தைப் பதிவுசெய்யாமல், இந்தத் தீர்ப்புக்கு வழிவகுத்திருக்கின்றன.

பழங்குடி மக்கள் தீர்ப்பு

பழங்குடியினர் வாழும் காடுகளில் சுற்றுச்சூழல் பாதிப்பு நிகழ்வது இல்லை என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. கார்ப்பரேட் நிறுவனங்கள் உருவாக்கும் பாதிப்புகளே உலகம் முழுவதும் காடுகள் அழிய காரணமாக இருக்கின்றன. கார்ப்பரேட் நிறுவனங்களின் நிதியுதவியில் இயங்கும் தனியார் அமைப்புகளும், கட்சிகளும் பழங்குடி மக்கள் மீது இந்தப் போரைத் தொடுத்துள்ளன.

பழங்குடிகள் வாழும் பகுதிகள் இந்தியச் சுதந்திரத்திற்குப் பின்பும் எந்தவித முன்னேற்றமும் சென்று சேராதவையாகவே இருக்கின்றன. கல்வி, சுகாதாரம், உணவு முதலான எந்தத் திட்டங்களும் அவர்களுக்கு முறையாகச் சென்று சேர்வதில்லை. இந்திய மக்கள்தொகையில் 8 சதவிகிதம் அளவுக்கு வாழும் பழங்குடி மக்களின் பிரநிதித்துவம் அரசியல், அதிகாரம், அரசுப்பணிகள் முதலானவற்றில் நிரப்பப்படவில்லை. 

தங்கள் இடங்களை விட்டு பலவந்தமாகத் தூக்கியெறியப்படுவதை எதிர்க்கும் பழங்குடியினர், அரசுப்படையினரால் தாக்கப்படுகின்றனர். மத்திய கிழக்கு இந்தியாவில் தொடர்ந்து நீடிக்கும் மாவோயிஸ்ட் பிரச்னைக்கு இதுவே அடிப்படைக் காரணமாக இருக்கிறது. தமிழகத்தின் வாச்சாத்தியில் பழங்குடியினப் பெண்கள் மீது நிகழ்ந்த வன்முறையும் அதன் உதாரணங்களில் ஒன்றாகும். 

``இந்திய அரசியலமைப்புச் சட்டம் யாருக்கும் பொருந்தவில்லை; இந்தியாவில் பெரும்பான்மை மக்களும் இருக்கிறார்கள்; சிறுபான்மை மக்களும் இருக்கிறார்கள். சிறுபான்மையினரை ஒதுக்கி, `உங்களை அங்கீகரிப்பது ஜனநாயகத்தைப் பாதிக்கும்' எனச் சொல்ல முடியாது. சிறுபான்மையினரின் வாழ்வாதாரம் தாக்கப்படுவதுதான் ஜனநாயகத்திற்கு மிகப்பெரிய பாதிப்பு" என்று மாநிலங்களவையில் பேசினார் பாபாசாகேப் அம்பேத்கர். தற்போது அஸ்ஸாம் மாநிலத்தில் 40 லட்சம் சிறுபான்மையின மக்களுக்குக் குடியுரிமை ரத்து செய்யப்பட்டுள்ளது. பெருநகரங்களிலிருந்து அந்த மண்ணின் பூர்வகுடி மக்கள் ஆக்கிரமிப்பாளர்கள் எனக் கருதப்பட்டுப் பல கிலோமீட்டர் தூரத்தில் குடிவைக்கப்படுகிறார்கள். கடற்கரையில் இருக்கும் மீனவ கிராமங்கள், வரைபடங்களிலிருந்து நீக்கப்படுகின்றன; பழங்குடிகளுக்குக் காடுகள் மறுக்கப்படுகின்றன. 

``காட்டில் வாழும் ஒருவனது சொர்க்கம் என்பது, சுற்றிலும் பல மைல் தூரக் காடுகளும், அவற்றில் ஓர் அரசு வனக்காவலனும் இல்லாதிருப்பதும்" என்று கூறினார் பிரபல மானுடவியலாளர் வெர்ரியர் எல்வின். காலனிய அரசு கொண்டு வந்த வனப் பாதுகாப்புச் சட்டத்தை எதிர்த்து அவர் இதைக் கூறினார். தற்போதைய அரசின் கீழ், பழங்குடிகளுக்குக் காடுகளில் வாழ்வதே கனவாக மாறியுள்ளது.


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close