`அதிகாலையில் பயங்கர சத்தத்தைக் கேட்டோம், பூமி அதிர்ந்தது!'- தாக்குதலை நேரில் பார்த்த பால்கோட் விவசாயிகள் | People living in balakot speaks about indian attacks

வெளியிடப்பட்ட நேரம்: 18:53 (26/02/2019)

கடைசி தொடர்பு:15:02 (27/02/2019)

`அதிகாலையில் பயங்கர சத்தத்தைக் கேட்டோம், பூமி அதிர்ந்தது!'- தாக்குதலை நேரில் பார்த்த பால்கோட் விவசாயிகள்

பாகிஸ்தானில் இந்தியா விமானப்படை தாக்குதல் நடத்தியது உண்மைதான் என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

பாகிஸ்தான்

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இன்று அதிகாலை இந்திய விமானப்படை அதிரடி தாக்குதல் நடத்தியது. இதில் ஏராளமான தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர் என இந்திய வெளியுறவுத்துறைச் செயலாளர் விஜய் கோகலே அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். மேலும் ``இந்தத் தாக்குதலில் தீவிரவாதிகளின் மிகப்பெரிய முகாம் அழிக்கப்பட்டுள்ளது. இந்த முகாமை மசூத் அசாரின் மைத்துனர் யூசுஃப் அசார் வழிநடத்தி வந்தார்" எனவும் தெரிவித்தார். ஆனால், இதைப் பாகிஸ்தான் அரசு மறுத்துள்ளது. பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்துக்குப் பின் பேசிய அவர், ``இந்திய அரசு கற்பனையான விஷயங்களைப் பேசி வருகிறது. தாக்குதலில் தீவிரவாதிகள் உயிரிழந்ததாகக் கூறுவது தவறு" என மறுப்பு தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், இந்திய விமானப் படை தாக்குதல் நடத்தியது என்பதை உறுதிப்படுத்தும் விதமாகச் சம்பவத்தை நேரில் பார்த்த பால்கோட் பகுதி விவசாயிகள் இரண்டு பேர் பிபிசி உருது தொலைக்காட்சிக்கு பேட்டி கொடுத்துள்ளனர். இதுதொடர்பாக ஜப்பா பகுதியைச் சேர்ந்த விவசாயி முகமது ஆதில் என்பவர் பேசுகையில், ``அதிகாலை 3 மணி அளவில் நாங்கள் பயங்கரமான சத்தத்தைக் கேட்டோம். அந்த சத்தம் பூமி அதிர்வதைப் போல் இருந்தது. இதனால் எங்களால் தூங்க முடியவில்லை. அடுத்தடுத்த 5 - 10 நிமிடங்களில் மீண்டும் அந்த சத்தம் கேட்டது. அப்போது அது வெடிச்சத்தம் எனத் தெரியவந்தது. அந்த இடத்தின் பெயர் கங்கட். அந்தப் பகுதியில் எங்கள் உறவினர்கள் வசிக்கிறார்கள். அங்கு சென்று பார்த்தபோது விமானங்கள் பறந்த சத்தம் கேட்டதாகவும், அதன்பிறகு வெடிச்சத்தம் கேட்டதாகவும் கூறினர். 

விவசாயி முகமது ஆதி

photo and news credit: @BBCUrdu

மீண்டும் காலையில் சில பாகிஸ்தானியர்கள் வந்தார்கள். அவர்களுடன் சென்று பார்க்கையில் மிகப்பெரிய பள்ளம் இருந்தது. இந்த சம்பவத்தால் 5 வீடுகள் சேதமடைந்துள்ளன" என்றார். இவரைத் தொடர்ந்து, பேசிய அதே பகுதியைச் சேர்ந்த வாஜித் ஷா என்பவர், ``அதிகாலையில் துப்பாக்கிச் சுடும் சத்தம் கேட்டது. மூன்று முறை இந்த சத்தம் கேட்டது. அதன்பிறகு அமைதியாகிவிட்டது" எனத் தெரிவித்தார். இவர்களின் பதில், இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியதை உறுதி செய்துள்ளது என மக்கள் கூறி வருகின்றனர். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close