பி.ஜே.பி. ஆட்சியில் துப்புரவு பணியாளர்களின் உண்மை நிலை என்ன? #VikatanInfographics | Plight of Safai Karamcharis under Modi's rule

வெளியிடப்பட்ட நேரம்: 10:49 (27/02/2019)

கடைசி தொடர்பு:10:49 (27/02/2019)

பி.ஜே.பி. ஆட்சியில் துப்புரவு பணியாளர்களின் உண்மை நிலை என்ன? #VikatanInfographics

பிரதமர் மோடியைச் சந்தித்த துப்புரவுத் தொழிலாளர் பியாரெலால் ``பிரதமர் மோடி எங்கள் பாதங்களைத் தொட்டதை எதிர்பார்க்கவில்லை. இது கனவைப்போல இருக்கிறது’’ என்றார்.

பி.ஜே.பி. ஆட்சியில் துப்புரவு பணியாளர்களின் உண்மை நிலை என்ன? #VikatanInfographics

பிரதமர் மோடி, ``இந்த நொடியை என் வாழ்நாள் முழுவதும் எண்ணி மகிழ்வேன். தூய்மையான இந்தியாவை உருவாக்கப் பாடுபடும் துப்புரவுத் தொழிலாளர்களுக்கு மரியாதை செய்வதில் மகிழ்ச்சியடைகிறேன். தூய்மை இந்தியாவை உருவாக்கப் பாடுபடும் அனைவருக்கும் தலைவணங்குகிறேன்’’ என்ற பதிவோடு, துப்புரவுத் தொழிலாளர்கள் ஐந்து பேரின் கால்களைக் கழுவும் காணொலியை ட்வீட் செய்திருந்தார். இந்த நிகழ்வு பிரதமர் மோடி `ப்ரயாக் ராஜ் கும்ப மேளாவில்’ கலந்துகொண்டபோது நடைபெற்றது. 

துப்புரவுத் தொழிலாளர்கள் மீது எப்போதும் மரியாதையைக் கடைப்பிடித்து வந்திருக்கிறார் பிரதமர் மோடி. 2007-ம் ஆண்டு மோடி எழுதிய `கர்மயோகி’ புத்தகத்தில் ``துப்புரவுத் தொழிலையும் மனிதக் கழிவுகளை அள்ளும் தொழிலையும் செய்பவர்கள் தங்கள் வாழ்வாதாரத்துக்காக, அதைச் செய்வதில்லை. வாழ்வாதாரத்துக்காகச் செய்திருந்தால் இப்படியான தொழிலைத் தலைமுறைகள் கடந்தும் தொடர்ந்திருக்க மாட்டார்கள். சமூகத்தை நேசித்து, கடவுள் தங்களுக்கு அளித்த ஆன்மிகப் பணியைச் சிறப்பாகச் செய்து அடுத்தடுத்த தலைமுறைகளுக்குக் கடத்தி வருகிறார்கள்’’ என்று கூறியிருந்தார். 

2009-ம் ஆண்டு குஜராத் முதல்வராக மோடி இருந்தபோது, 9,000 துப்புரவுத் தொழிலாளர்கள் கலந்துகொண்ட மாநாட்டில், `கோயிலில் வாழும் அர்ச்சகர் எப்படிக் கோயிலைப் பூஜைக்காகச் சுத்தம் செய்கிறாரோ, அப்படித்தான் துப்புரவுத் தொழிலாளர்களும் ஊரைச் சுத்தம் செய்கின்றனர். ராமாயணத்தில் ராமருக்கு கங்கையைக் கடக்க உதவிய படகோட்டியின் கால்களைக் கழுவி ராமர் எப்படி மரியாதை செலுத்தினாரோ, அப்படியே நானும் உங்களுக்கு மரியாதை செலுத்த விரும்புகிறேன்’’ என்று தன் விருப்பத்தைத் தெரிவித்திருந்தார்.

துப்புரவு தொழிலாளர்கள்

10 ஆண்டுகள் கழிந்த பின், இந்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் வருவதற்கு முன்பே, தன் விருப்பத்தை நிறைவேற்றியுள்ளார் பிரதமர் மோடி. ``பிரதமர் மோடியை நாங்கள் நேரில் பார்த்ததுகூட இல்லை; ஆனால் அவர் எங்கள் பாதங்களைத் தொட்டதை நாங்கள் எதிர்பார்க்கவில்லை. இது கனவைப் போன்று இருக்கிறது’’ என்றார் பியாரெலால். இவர் பிரதமர் மோடியால் மரியாதை செய்யப்பட்ட துப்புரவுத் தொழிலாளர்களில் ஒருவர்.

ஒரு தேசத்தின் கடைநிலை தொழிலாளியின் பாதங்களை, இந்தத் தேசத்தின் பிரதமர் கழுவி, மரியாதை செலுத்துவது மிகப்பெரிய விஷயம் என்று பி.ஜே.பி தலைவர்கள் கூறி வருகின்றனர். எனினும், எதிர்க்கட்சியினர் இந்த நிகழ்வைத் தேர்தலுக்கான `பப்ளிசிட்டி ஸ்டன்ட்’ என வர்ணித்துள்ளனர். மம்தா பானர்ஜியின் திரிணாமூல் காங்கிரஸ், ``இந்த ஆண்டின் சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருது மோடிக்கு வழங்கப்பட வேண்டும்’’ எனக் கிண்டல் செய்துள்ளது. 

பிரதமர் மோடியால் தங்கள் கால்கள் கழுவப்பட்டாலும், துப்புரவுத் தொழிலாளர்களுக்கும் மனிதக் கழிவுகளை அள்ளும் தொழிலாளர்களுக்கும் எந்த மாற்றமும் நிகழவில்லை. கடந்த ஐந்து ஆண்டுகளாக, ஆட்சியில் இருந்த பி.ஜே.பி அரசு ஆண்டுதோறும் தாக்கல் செய்யும் பட்ஜெட்டில் துப்புரவுத் தொழிலாளர்களுக்காக ஒதுக்கிய பணத்தைச் செலவு செய்யவில்லை. துப்புரவுப் பணியாளர்களின் மேம்பாட்டுக்காக, தங்கள் பணிகளை மாற்றிக்கொள்வதற்காக அளிக்கப்பட வேண்டிய நிதியுதவி எதுவும் அளிக்கப்படவில்லை. இறந்துபோன துப்புரவுத் தொழிலாளர்களைத் தவிர, யாரும் அரசு நிதியைப் பெறவில்லை. இறந்தவர்களிலும் பெரும்பாலானோரின் குடும்பங்களுக்கு நிவாரண உதவித்தொகை சென்று சேரவில்லை.   

மோடி ஆட்சியில் துப்புரவு தொழிலாளர்கள்

காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் 2013-ம் ஆண்டு பட்ஜெட்டில் துப்புரவுத் தொழிலாளர்களின் மறுவாழ்வுக்காக 570 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. அதிலும் 35 கோடி ரூபாய் மட்டுமே பயன்படுத்தப்பட்டது. பி.ஜே.பி ஆட்சிக்கு வந்த பிறகு, முன்பைவிட குறைவாகவே நிதி ஒதுக்கப்பட்டது. எனினும், கடந்த நான்கு ஆண்டுகளின் தரவுகள், ஒரு ரூபாய்கூட துப்புரவுத் தொழிலாளர்களின் மறுவாழ்வுக்காகப் பயன்படுத்தப்படவில்லை என்பதைக் காட்டுகின்றன.

இந்தியாவில் மனிதக் கழிவுகளை மனிதர்களே அள்ளப் பணிக்கப்படுவது தடைசெய்யப்பட்டிருக்கிறது. 1993-ம் ஆண்டில் உருவாக்கப்பட்ட சட்டமும், 2013-ம் ஆண்டு, அந்தச் சட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட சட்டத்திருத்தமும் அதைத் தண்டனைக்குரிய குற்றமாகக் கருதுகின்றன. எனினும் மனிதக் கழிவுகளை அள்ளுவதும், கழிவுநீர்த் தொட்டிகளுக்குள் இறங்குவதும் தொடர்ந்துகொண்டுதான் உள்ளது. இந்தப் பணியில் ஈடுபடுபவர்கள், எத்தனை பேர் என்பதைக் கணக்கிடும் பணிகள்கூட இன்னும் முழுமையாக முடிவடையவில்லை. 

பெஜவாடா வில்சன் சட்டம் அமல்படுத்தப்பட்டும் சராசரியாக ஐந்து நாள்களுக்கு ஒரு தொழிலாளர் விஷவாயு தாக்கி உயிரிழப்பதாகத் தரவுகள் தெரிவிக்கின்றன. அறிவியல் முன்னேற்றங்களோ, பாதுகாப்பான உபகரணங்களோ துப்புரவுத் தொழிலாளர்களுக்கு வழங்கப்படுவதில்லை. எனினும், அவை தற்காலிகத் தீர்வாக மட்டுமே அமையும். இயந்திரங்கள் வந்தாலும், அவற்றைப் பயன்படுத்த மீண்டும் பட்டியலின மக்களே பயன்படுத்தப்படுவர். மனிதக் கழிவுகளை மனிதர்களே அள்ளும் இழிநிலையைத் தடுக்கும் ஒரேவழி சாதியை ஒழிப்பது எனச் சமூக ஆர்வலர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர். 

பிரதமர் மோடி துப்புரவுத் தொழிலாளர்களின் கால்களைக் கழுவியது பற்றி, மனிதக் கழிவுகளை மனிதனே அள்ளும் முறையை எதிர்த்து, சட்டம் கொண்டு வரக் கடுமையான போராட்டம் நடத்தி வெற்றிகண்ட செயற்பாட்டாளர் பெசவாடா வில்சனிடம் கேட்ட போது, ``மனித உடலில் தலை வேறு, கால் வேறு என்பது கிடையாது. தலையை உயர்வாகவும் காலைத் தாழ்வாகவும் கருதி காலைக் கழுவுவது என்பதே சாதிய மனோபாவம். கடந்த ஐந்து ஆண்டுகளில், மனிதக் கழிவுகளை அள்ளும்போது, இறந்துபோனவர்களைப் பற்றி மோடி எப்போதும் பேசியது இல்லை. இத்தகைய இழிநிலையில் வாழ்பவர்களின் மறுவாழ்வுக்காக நிதியுதவி அளிக்கவில்லை. தன் பணியைச் சரியாகச் செய்யாமல், இன்று தேர்தலுக்காக இப்படிச் செய்வது, ஏழை மக்களை ஏமாற்றுவதாகும், இது மிகப்பெரிய குற்றம். சாதி ஒழிக்கப்படுவதும், மக்கள் சமமாக நடத்தப்படுவதும்தான் சரியாக இருக்க முடியும். மோடி செய்யும் இதுபோன்ற சடங்குகள் சமத்துவத்துக்கு எதிரானவை. அம்பேத்கருக்கு விரோதமானவை. துப்புரவுத் தொழிலாளர்களை அழைத்து, அவர்களின் கால்களைக் கழுவுவதாகச் சொல்லும் செய்தியே சாதியை நிலைத்திருக்க வைத்திருப்பதுதான்!’’ என்றார்.


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close