இந்தியாவுக்கு ஆதரவாக பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சரைக் கடுப்பேற்றிய யு.ஏ.இ! | Pak unhappy with UAE

வெளியிடப்பட்ட நேரம்: 07:00 (27/02/2019)

கடைசி தொடர்பு:07:00 (27/02/2019)

இந்தியாவுக்கு ஆதரவாக பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சரைக் கடுப்பேற்றிய யு.ஏ.இ!

இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பு மாநாட்டில் கலந்துகொள்ள இந்தியாவுக்கு ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அழைப்பு விடுத்திருப்பது, பாகிஸ்தானின் கோபத்தைக் கிளறிவிட்டுள்ளது.

சுஷ்மா ஸ்வராஜ்

உலக இஸ்லாமியர்களின் நலனைப் பாதுகாப்பதற்காக உருவாக்கப்பட்ட அமைப்பான இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பு சார்பாக வரும் மார்ச் 1,2 தேதிகளில் அபுதாபியில் 46வது மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில், உலகெங்கிலுமுள்ள இஸ்லாமிய நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் பங்கேற்கவுள்ளார்கள். இதில் கௌரவப் பார்வையாளராகக் கலந்துகொள்ள முதன்முறையாக இந்தியாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதுதான் பாகிஸ்தானின் கோபத்துக்குக் காரணம். அழைப்பை ஏற்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் இந்த மாநாட்டில் கலந்துகொள்ளவிருக்கிறார். 

இதுகுறித்து, யு.ஏ.இ. வெளியுறவுத்துறை அமைச்சர் அப்துல்லா பின் சயீதிடம் தொலைபேசியில் பேசிய பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா மெக்மூத் குரேசி, இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடைப்பட்ட பிரச்னை குறித்த அக்கறையில்லாமல் இந்தியாவுக்கு அழைப்பு விடுத்தது, தனக்கு ஏமாற்றமளிப்பதாக அதிருப்தியை வெளிப்படுத்தியிருக்கிறார். இதற்கு யு.ஏ.இ. வெளியுறவுத்துறை அமைச்சரிடமிருந்து எந்தப் பதிலும் வரவில்லை. இது மேலும் கோபத்தைக் கிளற, எமிரேட்சுக்கான பாகிஸ்தான் தூதரைத் தொடர்புகொண்டு தனது அதிருப்தியைத் தெரிவிக்கும்படி கூறியிருக்கிறார். ஆனால், அப்போதும்கூட யு.ஏ.இ. தரப்பிலிருந்து எந்தவிதமான ரியாக்‌சனும் வரவில்லை. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இந்திய விமானப்படை அதிரடி தாக்குதல் நடத்தியுள்ள சூழலில், யு.ஏ.இ. இந்தியாவுக்குத் தரும் வரவேற்பு, பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சரை விரக்தியில் ஆழ்த்தியுள்ளது.


[X] Close

[X] Close