`ஆட்டுக்கறி ஏன் போடல?!'- மணமகன் உறவினர்களால் மணமகள் இல்லத்தில் நடந்த களேபரம் | Mutton curry Clash at a wedding in Telangana

வெளியிடப்பட்ட நேரம்: 11:15 (27/02/2019)

கடைசி தொடர்பு:11:15 (27/02/2019)

`ஆட்டுக்கறி ஏன் போடல?!'- மணமகன் உறவினர்களால் மணமகள் இல்லத்தில் நடந்த களேபரம்

தெலங்கானா மாநிலத்தில் நடைபெற்ற திருமண விருந்தில் அசைவ உணவு பரிமாறுவதில் ஏற்பட்ட தகராறு கைக்கலப்பில் முடிந்துள்ளது. 

ஆட்டுக்கறி

தெலங்கானாவின் பத்ராத்திரி கொத்தகூடம் மாவட்டத்தில் உள்ள உப்புசாகா கிராமத்தில் பிரவீன் - அஜ்மீரா குமாரிக்கு திருமணம் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மணமகள் இல்லத்தில் நடைபெற்ற இந்தத் திருமணத்துக்கு வருகை புரிந்த உறவினர்கள் மணமக்களை வாழ்த்திவிட்டுச் சென்றனர். திருமணம் முடிந்த பின்னர் உறவினர்களுக்கு உணவு பரிமாறப்பட்டது. விருந்துக்கு மதுஅருந்தி விட்டு வந்த மணமகன் வீட்டாரைச் சேர்ந்த சிலர் ஏன் ஆட்டுக்கறி பரிமாறவில்லை எனக் கூறி வாக்குவாதம் செய்தனர். திருமணத்துக்கு நிறைய செலவு செய்துவிட்டதால் ஆட்டுக்கறி போடும் அளவுக்குப் பணமில்லை எனக்கூறியுள்ளனர். இதைக்கேட்ட மணமகனின் உறவினர்கள் அவர்களை ஏளனம் செய்துள்ளனர். மகள் திருமணத்தில் அசம்பாவிதம் ஏதும் நடந்து விடக்கூடாது என  அமைதிகாத்துள்ளனர். ஒரு கட்டத்தில் மணமகனின் வீட்டாரின் பேச்சு வரம்பு மீறியதையடுத்து இருதரப்புக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

ஒரு கட்டத்தில் இது கைகலப்பாக மாறியது. உணவு பரிமாறும் இடத்தில் உள்ள பொருள்களை எடுத்துத் தாக்கியுள்ளனர். அங்கு வைக்கப்பட்டிருந்த சேர்கள் டேபிள்களை எடுத்து தாக்கிக் கொண்டனர். நிழலுக்காகப் போடப்பட்டிருந்த பந்தல்களைப் பிரித்து தாக்கியுள்ளனர். இந்தச் சம்பவத்தில் 8 பேர் காயமடைந்துள்ளனர். அவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதனையடுத்து இருதரப்பினர் காவல்நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மகிழ்ச்சியாக நடந்த திருமணத்தில் மணமக்களை வாழ்த்த வந்தவர்களால் இருகுடும்பத்துக்கு இடையே வழக்குவந்ததுதான் மிச்சம்.
 

 


[X] Close

[X] Close