இந்திய விமானப்படை தாக்குதல் இந்த 7 பேருக்கு மட்டுமே தெரிந்த ரகசியம்! | Only seven people knew Balakot air strike

வெளியிடப்பட்ட நேரம்: 12:33 (27/02/2019)

கடைசி தொடர்பு:12:33 (27/02/2019)

இந்திய விமானப்படை தாக்குதல் இந்த 7 பேருக்கு மட்டுமே தெரிந்த ரகசியம்!

மோடி

காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் சிஆர்பிஎஃப் வீரர்கள் சென்ற வாகனத்தின்மீது, பிப்ரவரி 14-ம் தேதி பயங்கரவாதிகள் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தினர். இந்தத் தாக்குதலில், தமிழகத்தைச் சேர்ந்த 2 வீரர்கள் உட்பட 40-க்கும் மேற்பட்ட வீரர்கள் மரணமடைந்தவர். காயமடைந்த வீரர்கள், மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவருகின்றனர். இந்தத் தாக்குதலுக்கு பாகிஸ்தானில் உள்ள ஜெய்ஷ் - இ- முகமது அமைப்பு பொறுப்பேற்றது. உலக நாடுகள் பலவும் கடும் கண்டனத்தைப் பதிவுசெய்தது. 

இந்தத் தாக்குதல் நடந்த 12-வது நாளில், இந்தியா தக்க பதிலடி கொடுத்துள்ளது. நேற்று அதிகாலை 3.30 மணிக்கு, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள தீவிரவாத முகாம்களின்மீது வான்வழித் தாக்குதல் நடத்தியது இந்திய விமானப்படை. இந்தத் தகவல் காலையில்தான் மெள்ளக் கசிந்தது. இந்தியாவின் இந்தத் தாக்குதலுக்கு காங்கிரஸ், ஆம் அத்மி உள்பட அனைத்துக் கட்சிகளும் தங்களது வாழ்த்துகளைப் பதிவுசெய்தன.

பாகிஸ்தான் தரப்பு, முதலில் இந்தத் தாக்குதலை மறுத்தது. இந்திய விமானங்கள் ஊடுருவியது உண்மைதான். ஆனால், இது தோல்வியில் முடிந்தது எனச் சப்பைக்கட்டு கட்டினர். பாகிஸ்தான் ஊடகங்களிலும் பெரும்பாலும் இதே பாணியில்தான் செய்திகள் வெளிவந்தன. அதேநேரத்தில், வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா மெஹ்மூத் குரேஷி, இஸ்லாமாபாத்தில் அவசர ஆலோசனைக் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளார். பாதுகாப்புகுறித்து ஆலோசனைகள் நடந்த உள்ளதாகவும் இந்த அவசரக் கூட்டத்தில் முன்னாள் அதிகாரிகள் கலந்துகொள்ள உள்ளதாகவும் தகவல் வெளியானது.

விஜய் கோகலே

அதேநேரம் இந்தியாவில், பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் முக்கிய அமைச்சர்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அருண் ஜெட்லி, பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியுறவுத் துறை செயலாளர் விஜய் கோகலே ஆகியோர் பங்கேற்றனர். இதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்த விஜய்கோகலே,  “தாக்குதல்
நடத்துவதற்கு பால்கோட், சாக்கோதி, முஸாஃபராபாத் ஆகிய இடங்களைத் தேர்வுசெய்தோம்.  இந்தத் தாக்குதலின்போது, அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்துவிடக் கூடாது என்பதில் கவனமாக இருந்தோம். கைபரின் அடர்ந்த பகுதியில் இருந்த தீவிரவாதிகளின் மிகப்பெரிய முகாம்மீது தாக்குதல் நடத்தப்பட்டது. பால்கோட் பகுதியில் இருந்த தீவிரவாத முகாம்களை மசூத் அசாரின் மைத்துனர்
தலைமைதாங்கி நடத்திவந்துள்ளார். இந்தத் தாக்குதலில், ஏராளமான பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். இது, ராணுவ நடவடிக்கை இல்லை; தற்காப்பு நடவடிக்கை” என்றார்.

பாகிஸ்தான்

``பாகிஸ்தான் ரேடியோவில் பேசிய அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா மெஹ்மூத் குரேஷி, இந்தியாவின் தாக்குதலுக்கு பாகிஸ்தான் உரிய பதிலடி கொடுக்கும். தற்காப்புக்காக தாக்குதல் நடத்த பாகிஸ்தானுக்கு உரிமை உள்ளது'' என்றார்.

புல்வாமா தாக்குதலுக்குப் பிறகு முப்படைத் தளபதிகள், பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோருடன் பிரதமர் மோடி ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். மற்றொரு ஆபரேஷனுக்கு மோடி திட்டமிட்டுள்ளார். இதுகுறித்து முப்படைத் தளபதிகள், பாதுகாப்புத் துறை ஆலோசகர் அஜீத் தோவல் மற்றும் இந்திய உளவுத்துறை அமைப்பின் (RAW and IB) இரண்டு தலைவர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

தாக்குதல்

ரா அமைப்பு பாகிஸ்தான் பகுதிகளில் கண்காணிப்பில் ஈடுபட்டது. பால்கோட் பகுதியில் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் மிகப்பெரிய பயிற்சி முகாம் செயல்பட்டுவருவதைக் கண்டறிந்தது. இதையடுத்து ரா அமைப்பு டார்க்கெட்டை தேர்வுசெய்தது. அடர்ந்த காட்டுப்பகுதியில் இருந்த 6 இடங்களைத் தேர்வுசெய்து பிரதமரிடம் கலந்தாலோசித்துள்ளனர். இதையடுத்து, பிப்ரவரி 18-ம் தேதி தாக்குதல் நடத்த மோடி ஒப்புதல் வழங்கியுள்ளார். பிரதமர் மோடி முப்படைத் தளபதிகள், பாதுகாப்புத் துறை ஆலோசகர் அஜீத் தோவல் மற்றும் இந்திய உளவுத்துறை அமைப்பின் இரு தலைவர்கள், இவர்களை தவிர இந்தத் தாக்குதல் குறித்து அப்போது யாருக்கும் தெரியாது. 

பிப்ரவரி 22-ம் தேதி, இந்திய விமானப்படை விமானங்கள் நள்ளிரவில் பாகிஸ்தான் மீது வட்டமிட்டு அவர்களைக் குழப்பியுள்ளனர். பிப்ரவரி 25-ம் தேதி, ரா அமைப்புக்குக் கிடைத்த தகவலின்படி, பால்கோட் பகுதியில் உள்ள ஜெய்ஷ்-இ-முகமது முகாம்களில் 200- 300 பயங்கரவாதிகள் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது. அப்பகுதியில் தாக்குதல் நடத்த விமானப்படை திட்டமிட்டது. தாக்குதல் நடத்துவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்னர்தான் பிரதமர் மோடிக்கு இதுகுறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

விமானம்


இரவு முழுவதும் பிரதமர் விழித்துக்கொண்டிருந்துள்ளார். பாதுகாப்புத் துறை ஆலோசகர் அஜீத் தோவல் மற்றும் இந்திய உளவுத் துறை அமைப்பின் இரு தலைவர்கள் மற்றும் விமானப்படைத் தளபதி ஆகியோர் அங்கு நடக்கும் தகவல்களை மோடியிடம் தெரிவித்துக்கொண்டிருந்தனர். ராணுவத் தளபதி பிபின் ராவத் மற்றும் கப்பற்படைத் தளபதி சுனில் லம்பா ஆகியோர் பாகிஸ்தான் எதிர்த்தாக்குதல் நடத்தினால், அதை முறியடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். ஒட்டுமொத்த இந்திய ராணுவமும் தயார் நிலையில்தான் இருந்துள்ளது. இந்தத் தாக்குதலுக்கு சுமார் 12 விமானங்கள் பயன்படுத்தப்பட்டன.

அசார்

இந்தத் தாக்குதலில், ஜெய்ஷ்- இ-முகமது முகாம்களை வழிநடத்தும் யூசுப் அசார் கொல்லப்பட்டிருக்கலாம் என மத்திய அரசு நம்புகிறது. அவருடன் அஜ்மல், அப்துல், அஸ்லாம் போன்றவர்களும் கொல்லப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. ஆனால், இதுகுறித்து அதிகாரபூர்வ தகவல்கள் இல்லை. உளவுத்துறை தெரிவித்துள்ள தகவலின்படி, பல்வேறு முகாம்களில் 300-க்கும் அதிகமான பயங்கரவாதிகள் இருந்துள்ளனர்.


[X] Close

[X] Close