``அத்துமீறிய பாகிஸ்தான் விமானத்தைச் சுட்டு வீழ்த்தியது இந்திய ராணுவம்”- ஏ.என்.ஐ தகவல் | Pakistan aircraft put down by Indian armed forces

வெளியிடப்பட்ட நேரம்: 12:52 (27/02/2019)

கடைசி தொடர்பு:12:59 (27/02/2019)

``அத்துமீறிய பாகிஸ்தான் விமானத்தைச் சுட்டு வீழ்த்தியது இந்திய ராணுவம்”- ஏ.என்.ஐ தகவல்

ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் ராணுவ வீரர்கள் பயணம் செய்த வாகனம் மீது நடத்தப்பட்ட தற்கொலை படை தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக நேற்று இந்திய விமானப்படை பாகிஸ்தான் பகுதியில் தீவிரவாத முகாம்களை அழித்தது. இந்த பதிலடி தாக்குதலில் புல்வாமா தாக்குதலுக்குப் பொறுப்பேற்ற ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பில் மிகப்பெரிய முகாம் அழிக்கப்பட்டதாக இந்தியா அறிவித்தது. 

சிதறிய விமானம்

இந்நிலையில் நேற்று மாலை முதல் எல்லையில் பாகிஸ்தான், இந்திய ராணுவ முகாம்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகிறது. எல்லை பகுதியில் இருக்கும் கிராமங்களிலிருந்து பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியதாக தகவல் வெளியானது. இந்நிலையில் இன்று பாகிஸ்தான் விமானங்கள் இந்திய ராணுவ முகாம்களின் அருகே தாக்குதல் நடத்தியதாக ஏ.என்.ஐ தகவல் வெளியிட்டது. 

இந்நிலையில் பாகிஸ்தான் விமானப்படையின் f -16 ரக போர்விமானம் இந்தியாவின் வான் வெளியில் அத்துமீறிப் பறந்ததால், இந்திய ராணுவம் அதிரடியாக அந்த விமானத்தைச் சுட்டு வீழ்த்தியது. இந்த விமானம் பாகிஸ்தானின் `லாம் பள்ளத்தாக்குப் பகுதியில் விழுந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இதை ஏ.என்.ஐ தெரிவித்துள்ளது. மேலும் அந்தப் போர் விமானத்திலிருந்து பாராசூட் பறந்ததாகவும் ஆனால், அதில் பயணித்த பாகிஸ்தான் விமானியின் நிலை குறித்து உடனடியாக எதுவும் தெரியவில்லை எனவும் கூறியுள்ளது. 

பாகிஸ்தான் வீழ்த்தியதாக கூறும் விமானம்

இதற்கிடையில் இந்தியாவின் இரண்டு போர் விமானங்கள் வெடித்துச் சிதறியதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த விமானங்கள் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக வெடித்துச் சிதறியதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் பாகிஸ்தானின் மேஜர் ஜனரல் ஆசிஃப் கஃபூர் இந்தியாவில் இரண்டு விமானங்களை பாகிஸ்தான் சுட்டு வீழ்த்தியதாக தெரிவித்திருக்கிறார். ஆனால், இந்தத் தகவலை இந்தியா முழுமையாக மறுத்திருக்கிறது.

பாகிஸ்தான் மற்றும் இந்தியாவின் பதிலடி தாக்குதல்களால் ஜம்மு காஷ்மீர் பகுதிகளில் பதற்றமான சூழல் நிலவுகிறது. இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் தலைமையில் நாட்டின் பாதுகாப்புக்கு குறித்து அவசர ஆலோசனை நடைபெற்று வருகிறது. இதில் உளவுத்துறையின் தலைவர்களும் கலந்துகொண்டுள்ளனர். 

விமானம் நிலயம்

இந்தப் பரபரப்பு காரணமாக ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பயணிகள் விமானம் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் மாநிலம் முழுவதும் உள்ள விமான நிலையங்கள் ராணுவ முகாம்கள் உஷார் நிலையில் வைக்கப்பட்டிருக்கிறது. பஞ்சாப் மாநிலத்தில் அமிர்தசரஸ் விமான நிலையமும் மூடப்பட்டுள்ளது. 


[X] Close

[X] Close