மக்களை ஈர்க்க வழங்கப்பட்ட சலுகைகள்! 15,000 கோடி ரூபாய் நஷ்டத்தில் ரிலையன்ஸ் ஜியோ | 'Jio could lose Rs 15,000 crore this fiscal year!'

வெளியிடப்பட்ட நேரம்: 16:00 (27/02/2019)

கடைசி தொடர்பு:16:00 (27/02/2019)

மக்களை ஈர்க்க வழங்கப்பட்ட சலுகைகள்! 15,000 கோடி ரூபாய் நஷ்டத்தில் ரிலையன்ஸ் ஜியோ

ரிலையன்ஸ் ஜியோ வெளியிட்டுள்ள வருவாய் அறிக்கைகள் சாதகமான நிலையைக் காண்பிக்கின்றபோதிலும், முதலீடு செய்துள்ள தொகைக்கு ஏற்ற வருவாயாக அது இல்லை. முதலீட்டுத் தொகையில் வெறும் 3.1 சதவிகிதமே வருவாயாக வந்துள்ளது.

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்துக்கு நடப்பு நிதியாண்டில் 15,000 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது. 

ஜியோ தொடக்க நிகழ்ச்சியில் முகேஷ் அம்பானி

ஆர்ப்பாட்டமான அறிவிப்புகள் மற்றும் அதிரடி சலுகைகளுடன், இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் செல்போன் சேவை துறையில் களமிறங்கியது ரிலையன்ஸ் குழுமத்தின் ஓர் அங்கமான ரிலையன்ஸ் ஜியோ. இந்த நிலையில், இந்த நிறுவனம் பெரிய அளவில் லாபம் எதையும் ஈட்ட முடியாமல் தொடர்ந்து இழப்பைச் சந்தித்து வருகிறது. இந்த இழப்பு, அதன் போட்டி நிறுவனங்களான பார்தி ஏர்டெல் மற்றும் வோடஃபோன், ஐடியா ஆகிய நிறுவனங்களைவிட அதிகமாக உள்ளது. 

இந்த நிலையில், இதே இழப்பு தொடரும்பட்சத்தில் வருகிற மார்ச் 31-ம் தேதியுடன் முடிவடைகிற நடப்பு நிதியாண்டில் ரிலையன்ஸ் ஜியோ சுமார் 15,000 கோடி ரூபாய் அளவுக்கு இழப்பைச் சந்திக்கும் எனப் பிரபல முதலீட்டு மேலாண்மை நிறுவனமான பெர்ன்ஸ்டெய்ன் தெரிவித்துள்ளது. 

நஷ்டம் ஏன்?

வாடிக்கையாளர்களை ஈர்ப்பதற்காகக் குறைந்த கட்டணத்தில் மொபைல் போன்கள், பேசுவதற்கும் இணையதள டேட்டா பயன்பாட்டுக்கும் குறைவான கட்டணம் எனப் பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது ஜியோ. இந்த நிலையில், ஜியோ வெளியிட்டுள்ள வருவாய் அறிக்கைகள் சாதகமான நிலையைக் காண்பிக்கின்றபோதிலும், முதலீடு செய்துள்ள தொகைக்கு ஏற்ற வருவாயாக அது இல்லை. முதலீட்டுத் தொகையில் வெறும் 3.1 சதவிகிதமே வருவாயாக வந்துள்ளது. எனவே, இந்த நிதியாண்டில் இந்த நிறுவனத்தின் நிதி இழப்பு 15,000 கோடி ரூபாய் அளவுக்கு இருக்கும் என பெர்ன்ஸ்டெய்ன் தெரிவித்துள்ளது. 

``ஜியோ வெளியிட்ட காலாண்டு அறிக்கையில் 2018 டிசம்பர் மாதத்துடன் முடிவடைந்த மூன்றாவது காலாண்டில் 830 கோடி ரூபாய் நிகர லாபமாக ஈட்டியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், வாடிக்கையாளர்களை ஈர்ப்பதற்காகத் திரும்ப வாங்கிக்கொள்ளக்கூடிய குறைந்த டெபாசிட் தொகையுடன் மானிய விலையில் வழங்கப்படும் ஜியோ போன்கள், ரிலையன்ஸ் குழும நிறுவனங்களில் ஒன்றான ரிலையன்ஸ் ரீடெய்ல் லிமிடெட் நிறுவனத்தின் கணக்கில் வழங்கப்படுகிறது.

ஜியோ போன்

அந்தச் செலவை, ரிலைனஸ் ஜியோவின் செலவுக் கணக்கில் காண்பிக்கப்படவில்லை. அதே சமயம் அது மறைமுகச் செலவாக உள்ளது. அந்த மறைமுகச் செலவைக் கணக்கில் கொள்ளும்போது, மூன்றாவது காலாண்டுக்கான இழப்புத் தொகை 3,800 கோடி ரூபாயாக இருக்கும்’’ என அந்த நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது. 

இதே காலகட்டத்தில் பார்தி ஏர்டெல் நிறுவனத்துக்கான இழப்பு 630 கோடி ரூபாயாகவும் வோடஃபோன் ஐடியா நிறுவனத்துக்கான இழப்பு 4,430 கோடி ரூபாயாகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.  

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close